டிஜிட்டல் திண்ணை : யாரும் பேசவில்லையே… அழகிரி மனக் குமுறல்!

Published On:

| By Balaji

மொபைல் டேட்டாவை ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. “கலைஞர் நினைவிடம் நோக்கித் தனது தலைமையில் செப்டம்பர் 5ஆம் தேதி பேரணி நடைபெறும் என அழகிரி அறிவித்திருந்தார். 1 லட்சம் பேர் இதில் கலந்துகொள்வார்கள் என்றும் அவர் கூறிவருகிறார். வெளியே இப்படிச் சொன்னாலும் உள்ளே நடப்பது வேறு விதமாக உள்ளது. ‘என்னை கட்சில சேத்துக்க சொல்லுங்க, பொறுப்புகூடத் தேவையில்ல. அப்படி சேத்துக்கிட்டா பேரணியே நடக்காது” என்று மூத்த நிர்வாகிகளிடம் அழகிரி சொல்லிவருகிறாராம்.

‘ஆர்.கே.நகர். தேர்தல்ல திமுக வெற்றி பெறும் என மத்தவங்க சொன்னதை கேட்டு ஸ்டாலின் ஏமாந்துட்டாரு. என்னைக் கட்சியில் சேர்த்துக்கிட்டார்னா திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்ல பெரிய வெற்றியைப் பெற்று அவரு கையில் தருவேன்’ என்றும் அழகிரி கூறிவருகிறார் என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.

அதை காப்பி செய்து ஷேர் செய்த ஃபேஸ்புக், “அழகிரியிடம் ஏன் இந்த திடீர் மாற்றம்?” என்ற கேள்வியை கமெண்டில் போட்டது.பதிலை டைப்பிங் செய்தது வாட்ஸ் அப்.

“அழகிரியின் போனை முன்னாள் மாவட்ட செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் என யாருமே எடுப்பதில்லையாம். ‘பேரணில ஒரு லட்சம் பேர் கலந்துகொள்வாங்கன்னு சும்மாதான் சொன்னேன். என்னைக் கட்சியில் சேர்க்கவிடாம தடுப்பதே ஸ்டாலின் மாப்ள சபரீசன்தான்’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் அழகிரி கூறியுள்ளார்.

‘தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக இருக்கும் பி.டி.ஆர்.பி தியாகராஜன் சபரீசனுக்கு வேண்டியவர்தான். அவரை வைத்துப் பேசச் சொல்லலாம்’ எனச் சிலர் அழகிரிக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

அழகிரிக்கு நெருக்கமான இசக்கிமுத்துவோ இதற்குத் தடை போட்டதுடன், “நீங்க போய் சின்னப் பசங்ககிட்ட பேசுவதா? கோபாலபுரத்தில் இருக்கும்போதே பேசியிருக்கலாமே” என்று கூறியுள்ளார்.

யாரும் பேசவில்லையே என சோகமாக பதிலளித்த அழகிரி, “நானும் ஸ்டாலின் முன்னாடி முன்னாடி போய் நின்னேன். அவரு முகத்தைக்கூடத் திரும்பிப் பாக்கல. வேற என்ன செய்றது?” என்று கேட்டுள்ளார்.

காவேரி மருத்துவமனையில் கோவப்படாம இருந்திருக்கலாமே என இசக்கிமுத்து கூற, “ஆமா, துரைமுருகன், டி.ஆர்.பாலு மேல கோவப்பட்டேன், குடும்ப விவகாரத்துல தலையிடாதீங்கன்னு சொன்னேன். ஆஸ்பிட்டல்ல என்னைப் பார்த்ததுமே மாவட்டச் செயலாளர்களெல்லாம் மொகத்த திருப்பிகிட்டாங்க. பொங்கலூர் பழனிசாமி மட்டும்தான் கிட்ட வந்து பேசுனாரு. அவருகிட்ட மாவட்டச் செயலாளர்கள் பத்தி குறை சொன்னது உண்மைதான். ஆனா பாரு, கனிமொழிகூட போன எடுக்கிறதில்ல” எனத் தன் உள்ளக் குமுறல்களைக் கொட்டியுள்ளார். இதனால், திட்டமிட்டபடி பேரணி நடக்குமா நடக்காதா என்று அழகிரியுடன் இருப்பவர்கள் சந்தேகத்தில் உள்ளனர்” என்று மெசேஜுக்கு சென்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.

அதற்கு ஒரு ஆச்சரிய சிம்பலை பதிலாகப் போட்ட ஃபேஸ்புக் இன்னொரு தகவலைப் பதிவிடத் தொடங்கியது.

“தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி கொடுத்த புகார் தொடர்பான விசாரணையை விசாகா கமிட்டி தொடங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா என்று பலரும் கேட்கின்றனர். முதல்வரோ, ‘அவருக்கு எதிராகப் பல குற்றச்சாட்டு வந்திருக்கு. எஸ்பி கொடுத்த புகார்ல உண்மையிருந்தா நடவடிக்கை எடுக்கலாம்’ எனச் சொல்லியுள்ளார்” என்ற ஸ்டேட்டஸை போஸ்ட் செய்துவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share