டிஜிட்டல் திண்ணை: பிளேட்டை மாற்றிய முதல்வர்! பின்னணியில் தினகரன்

Published On:

| By Balaji

மொபைலில் டேட்டா ஆன் செய்தோம். வாட்ஸ் அப் மெசேஜ் வந்து விழுந்தது. நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தினகரன் ஆதரவு எம்.எம்.ஏ.க்கள் எல்லோருமே வந்திருந்தார்கள். அவர்கள் எல்லோர் முகத்திலும் டென்ஷன் தெரிந்தது. எடப்பாடி உள்ளே வந்ததும் அவரேதான் பேச ஆரம்பித்தார்.

‘உங்க எல்லோரையும் இப்படி ஒரே இடத்தில் சந்திக்கிறது மகிழ்ச்சியாக இருக்கு. சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியம் என்பதால்தான் இந்த கூட்டத்தை கூட்ட சொன்னேன்..’ என்று அவர் சொல்லும் போதே எல்லோரும் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். தொடர்ந்து எடப்பாடியும் ஒரு சஸ்பென்ஸ் கொடுத்துதான் பேசினார். ‘ கட்சி சார்பாக இப்போ நாம எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடிட்டு இருக்கோம். எல்லா மாவட்டத்திலும் அதுக்கு நல்ல வரவேற்பு இருக்கு. சென்னையில் அந்த விழா மிக பிரமாண்டமாக நடக்கணும். அதுக்கு உங்க எல்லோர் ஒத்துழைப்பும் தேவை. மாவட்ட வாரியாக எப்படி வருவது, எங்கே தங்குவது என்று பல கேள்விகள் இருக்கு. மாவட்ட செயலாளராக இருக்கும் ஒவ்வொருவரும் அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து தனி பேருந்துகள் மூலம் சென்னைக்கு வர ஏற்பாடு செய்யணும். போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்க… யாரு எந்த ரூட்டில் வருவது என்பது வரைக்கும் பிளான் பண்ணனும். அதுக்கு மறுபடியும் ஒரு கூட்டம் நடத்தணும். அதையும் விரைவில் செய்யலாம். ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் அதற்கான திட்டமிடலை இப்போதே தொடங்கிடுங்க. அதுக்காகத்தான் உங்க எல்லோரையும் வர சொன்னேன்…’ என்று பேசி முடித்தார். நிர்வாகிகள் ஒருவருக்கு ஒருவரை பார்த்துக்கொள்ள… அத்துடன் கூட்டத்தை முடித்துக் கொண்டார் முதல்வர். ஒருவருக்கொருவர் புரியாமல்தான் வெளியே வந்தார்கள்.

ஏதோ முன் கூட்டியே சொல்லி வைத்தது போல, ஜெயக்குமார், ‘கட்சியையும் ஆட்சியையும் முதல்வர் வழிநடத்துவார்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.” என்று முடிந்தது மெசேஜ்.

“முதல்வர் அடக்கி வாசிக்க என்ன காரணம்?” என கேட்டது ஃபேஸ்புக்.

பதிலை அடுத்த மெசேஜ் ஆக போட்டது வாட்ஸ் அப்.

” தினகரனை கட்சியை விட்டு விலக்கி வைப்பதாகவோ அல்லது தினகரனுக்கு எதிராகவோ ஒருவார்த்தை பழனிசாமி வாயில் இருந்து வந்தாலும், அத்தனை எம்.எல்.ஏக்களும் எழுந்து எதிர்ப்பை காட்ட வேண்டும் என முன் கூட்டியே தினகரன் சொல்லி அனுப்பியதாக சொல்கிறார்கள். இந்த தகவல் முன்கூட்டியே பழனிசாமி கவனத்துக்கும் போயிருக்கிறது. அதனால்தான், கூட்டத்தில் பிரச்னை எதுவும் வேண்டாம் என்பதால் அவர் டாப்பிக்கை மாற்றிவிட்டதாக சொல்கிறார்கள். எடப்பாடி டீம் தனக்கு எதிராக பேச ஆரம்பித்திருக்கும் தகவல்கள் அத்தனையும் சசிகலாவிடம் சொல்லத்தான் இன்று பெங்களூரு போனார் தினகரன். சசிகலா ஆலோசனை படி அடுத்த முடிவை எடுப்பாராம்!” என்ற மெசேஜ்க்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share