மொபைல் டேட்டா ஆன் லைனில் வந்தது. வாட்ஸ் அப் ஆன் லைனில் இருந்தது. மதிய வணக்கம் என்ற முதல் மெசேஜ் வந்து விழுந்தது. தொடர்ந்து அடுத்த மெசேஜ் வந்தது.
“நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை அறிவித்துவிட்டார். ஆனால் இன்னமும் பாஜகவின் ஆதரவு என்னாச்சு என்பது குறித்து தகவல் இல்லை.
தமிழக பாஜகவுக்கு இன்னும் தலைவர் யாரும் நியமிக்கப்படாத நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை தலைமை முடிவு செய்யும் என்று தெரிவித்தார். ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, ‘அதிமுக பாஜக கூட்டணி தொடர்கிறது’ என்று அறிவித்தார். பாஜக இன்று (அக்டோபர் 4) பிற்பகல் வரை தமிழக இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு என்று முறைப்படி அறிவிக்காத நிலையில்,எடப்பாடியோ போன வாரமே கூட்டணி தொடர்கிறது என்று அறிவித்ததன் பின்னணி பாஜகவின் கூட்டணி தர்ம ஆதரவைத் தாண்டிய ஆதரவுதான்.
பாஜக ஆதரவு என்பது இவ்விரண்டு தொகுதிகளிலும் பாஜகவுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை அப்படியே அதிமுகவுக்கு மடைமாற்றுவது என்ற பொதுவான கூட்டணி தர்ம ஆதரவு அல்ல. பாஜக ஆதரவு என்பது மத்திய அரசின் ஆதரவு, தேர்தல் ஆணையத்தின் ஆதரவு என்பதையெல்லாம் சேர்த்துதான் என்பதால்தான் அதிமுக இதில் இவ்வளவு மெனக்கெட்டு வருகிறது.
மோடி தமிழகம் வந்த போது முரளிதர் ராவுடன் ஓபிஎஸ் சும், எடப்பாடியும் பேசிய நிலையில் பாஜகவிடம் இருந்து முறையான ஆதரவு அறிக்கை வரும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் வரவில்லை. அதன் பின் முரளிதர் ராவையும் தொடர்புகொள்ள முடியவில்லை. அதன் பிறகுதான் பியூஷ் கோயலைத் தொடர்புகொண்டிருக்கிறார்கள். குஜராத்துக்கு தூய்மை விருது வாங்க வேலுமணி புறப்பட்டுக்கொண்டிருந்த நிலையில், கோயலும் குஜராத்தில்தான் அக்டோபர் 2 ஆம் தேதி இருந்தார்.
அமைச்சர் ஜெயக்குமாரோடு குஜராத் சென்ற அமைச்சர் வேலுமணி பிரதமரிடம் விருது பெறும் விழாவுக்கு செல்வதற்கு முன்பே பியூஷ் கோயலை சந்தித்துப் பேசினார். தங்கமணியை விட பியூஷ் கோயலுக்கு நெருக்கமானவராக மாறிவிட்டவர் வேலுமணி. இதனால் பல விஷயங்களை அப்போது மனம் விட்டுப் பேசியிருக்கிறார்கள் இருவரும்.
மத்தியத் தலைமை அதிமுக மீது கடுமையான கோபத்தில் இருப்பதாக சொல்லிய பியூஷ் கோயல், இந்த இடைத்தேர்தலில் பாஜகவின் ஆதரவு வேண்டுமென்றால் வருகிற உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுக்கு ஐந்து மாநகராட்சி மேயர் இடங்களை ஒதுக்க வேண்டும் என்று நேரடியாகவே வேலுமணியிடம் கூறியிருக்கிறார். கடைசியாக அறிவிக்கப்பட்ட் ஆவடி மாநகராட்சியோடு சேர்த்து தமிழகத்தில் 15 மாநகராட்சிகள் இருக்கின்றன. இவற்றில் ஐந்து மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு பாஜக வேட்பாளர்களை அதிமுக கூட்டணியில் நிறுத்த வேண்டும் என்பதுதான் பியூஷ் கோயல் வேலுமணியிடம் வைத்திருக்கும் நிபந்தனை. இதற்கு ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் இரு தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவின் ஆதரவு அதிமுகவுக்கு வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள் பாஜக தரப்பில்.
இதை அங்கிருந்தே எடப்பாடிக்கும் தெரியப்படுத்திவிட்டார் வேலுமணி. ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆரம்பத்தில் இதற்கு யோசித்திருக்கிறார். பாஜகவே ஐந்து கேட்டால் மற்ற கூட்டணிக் கட்சிகள் எத்தனை கேட்பாங்க, அப்புறம் நம்ம என்ன பண்றது என்றெல்லாம் ஆலோசித்த எடப்பாடி பழனிசாமி ‘ஏத்துக்கறதைத் தவிர்த்து நமக்கு வேற வழி என்ன இருக்கு?என்னென்ன மேயர்னு அப்புறம் பாத்துக்கலாம்’ என்றும் தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசித்திருக்கிறார். பாஜகவின் ஆதரவு அதிமுகவுக்கு விரைவில் அறிவிக்கப்படும் என்று சொல்கிறார்கள். அப்படி அறிவிக்கப்பட்டால் மாட்டுச் சந்தையில் கைமேல் துண்டைப் போட்டு அதிமுகவின் ஐந்து விரல்களை பாஜக பிடித்துவிட்டது என்றுதான் அர்த்தம். இல்லையென்றால் பேரம் இன்னும் படியவில்லை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைனில் போனது வாட்ஸ் அப்.
�,