மொபைலில் டேட்டா ஆனில் இருந்தது. ஃபேஸ்புக் போஸ்ட் கொடுத்திருந்த ஸ்டேட்டஸ் லொக்கேஷன் பரப்பன அக்ரஹாரா காட்டியது.
“சசிகலாவை சந்திக்க தினகரன் பெங்களூரு போனதை பற்றி மின்னம்பலத்தின் 1 மணி பதிப்பில் படித்தேன். மக்களவைத் தேர்தலில் நிற்காமல் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் மட்டும் கூர்மையாக கவனம் செலுத்திப் போட்டியிட்டு எடப்பாடி அரசைத் தோற்கடிக்கலாம் என்று ஒரு சில நிர்வாகிகள் தன்னிடம் யோசனை கூறிய நிலையில்தான் தினகரன் இன்று சசிகலாவை சந்தித்தார்.
சிறைக்குள் நடந்தவற்றை சொல்கிறேன். சிறைக்குள் தினகரன் சென்றபோது அவர் கையில் சில பேப்பர்கள் இருந்தது. 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் லிஸ்ட்தான் அவர் கையில் இருந்தது. ஒரு தொகுதிக்கு இரண்டு வேட்பாளர்கள் வீதம் 39 நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பாளர்கள் லிஸ்டை தயார் செய்திருந்தார். எந்த தொகுதிக்கும் நேர்காணல் நடத்தவில்லை. நேர்காணல் நடத்தினாலும், பதிவு செய்யப்படாத கட்சி என்பதால், விருப்ப மனுவுக்கு பணம் வாங்க முடியாது என்பது விதி. அதனால், விருப்பமனு யாரிடமும் வாங்கவில்லை. அந்தந்த மாவட்டச் செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் என பேசி, தொகுதிக்கு நான்கு பேர் வீதத்தில் ஒரு பட்டியலை தயார் செய்யச் சொல்லியிருக்கிறார் தினகரன். இந்த வேலையை வெற்றிவேலிடம் ஒப்படைத்திருக்கிறார். அவர் கொடுத்த லிஸ்டில் இருந்து இரண்டு பேரை தினகரன் ஃபைனல் செய்து, அந்த லிஸ்டுடன் தான் சசிகலாவை பார்க்கப் போனார்.
சிறையில் சசிகலாவிடம், ‘ வருகிற மக்களவைத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல்களில் போட்டியிட்டாதான் நம்ம இமேஜை காப்பாத்திக்க முடியும். சில மாதங்கள் முன்னாடியே, அதிமுகவையும், அமமுகவையும் இணைத்து அதன் பின்னர்தான் கூட்டணி வைக்கலாம்னு பிஜேபி கடுமையா முயற்சி பண்ணினாங்க. எனக்கு பல நெருக்கடி கொடுத்தாங்க. ஆனா, நான் அதையெல்லாம் கண்டுக்காம, தமிழ்நாடு முழுக்க மக்கள் சந்திப்பு பயணம் போனேன். போற இடமெல்லாம் நமக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு. இப்ப எடப்பாடியோட பிஜேபி கூட்டணி வச்ச பிறகும் நம்மளை துரத்திக்கிட்டுதான் இருக்காங்க. பார்லிமென்ட் எலக்ஷன்ல நாம போட்டியிட்டா அதிமுக தொண்டர்கள் வாக்குகளோட, இளைஞர்கள், மைனாரிட்டி ஓட்டும் நமக்குதான் அதிகம் கிடைக்கும். இதைத் தெரிஞ்சுகிட்ட பிஜேபி மறுபடியும் என்னை மிரட்டறாங்க. பியூஷ் கோயல் சில ஆட்கள் மூலமாக என்கிட்ட பேசி, தேர்தல்ல நிக்கும் முடிவைக் கைவிடுங்கனு நெருக்கடி கொடுக்குறாரு. ஆனா அதுக்கெல்லாம் நாம பணியக் கூடாது’ என்று சசிகலாவிடம் தற்போதைய நிலைமையை விவரித்திருக்கிறார்.
‘நாடாளுமன்ற தொகுதிக்கு மட்டும் ஒரு தொகுதிக்கு இரண்டு பேர் ஃபைனல் பண்ணியிருக்கோம். சட்டமன்ற தொகுதி 18-க்கும் ஏற்கெனவே நின்று பதவி இழந்தவங்களுக்கே கொடுத்திடலாம்னு நினைக்கிறேன். அதுல பெரியகுளம் தொகுதி கதிர்காமு மட்டும் மறுபடியும் சீட் வேண்டாம்னு சொல்றாரு. அவரு, நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட ஆசைப்படுறாரு. அதனால் நீலகிரியை அவருக்கு ஒதுக்கிடலாம். பெரியகுளத்துக்கு வேறு ரெண்டு பேரு சாய்ஸ் கொடுத்திருக்கேன். ஓசூர் தொகுதி புகழேந்தி கேட்கிறாரு. அவருக்கும் கொடுத்துடலாம். மற்றதெல்லாம் நீங்க பார்த்துட்டு ரெண்டில் ஒன்று டிக் பண்ணி கொடுத்துட்டீங்கன்னா வேட்பாளரை ஃபைனல் பண்ணிடலாம்.’ என சொல்லியிருக்கிறார் தினகரன்.
அந்த லிஸ்டை வாங்கி முழுமையாகப் படித்துப் பார்த்திருக்கிறார் சசிகலா. பிறகு, ‘கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறவங்களைத்தான் நீங்க முடிவு பண்ணியிருப்பீங்க. நான் இங்கே உட்கார்ந்துட்டு யாரு என்ன செய்யுறாங்கன்னு பார்க்க முடியாது. இதுல யாரு சரியாக இருப்பாங்கன்னு நீங்களே பார்த்து முடிவு பண்ணிடுங்க. கதிர்காமு எங்கே கேட்கிறாரோ அங்கே கொடுத்துடுங்க… ‘ என்று மட்டும் சொல்லி இருக்கிறார் சசிகலா.
அதன் பிறகு சசிகலாவிடம் சில கணக்குகளையும் சொல்லியிருக்கிறார் தினகரன். ‘ திமுக, அதிமுக இரண்டு கூட்டணியும் பலமாக இருக்கு. சட்டமன்றத்தைப் பொறுத்தவரை 18 சீட்டுல நாம 5 சீட் ஜெயிச்சாலே பெரிய விஷயம்தான். நமக்கு ரொம்பவும் சாதகமாக இருக்கும் தொகுதிகளில் அதிக கவனம் செலுத்தி வேலைப் பார்க்கிறோம். அதேபோல, நாடாளுமன்ற தொகுதிகளைப் பொறுத்தவரை, திருநெல்வேலி, மதுரை, தேனி, ராமநாதபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருச்சி ஆகிய தொகுதிகளில் தேவர் சமுதாயத்து வாக்குகள் அதிகம் இருக்கு. நம் கட்சிக்கான செல்வாக்கும் அதிகம் இருக்கு. இங்கே எல்லாம் கூடுதலான ஆட்களைப் போட்டு வேலைப் பார்க்க திட்டமிட்டிருக்கோம்.’ என்று சொன்னாராம். அதை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட சசிகலா, தலையை மட்டும் ஆட்டியிருக்கிறார். பதில் எதுவும் சொல்லவில்லையாம்.
தினகரன் சென்னைக்கு வந்ததும், வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட சில முக்கிய நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்த பிறகு ஃபைனல் லிஸ்ட் வெளி வருமாம்” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்டதுடன் காப்பி செய்து ஷேர் செய்துவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.�,