டிஜிட்டல் திண்ணை: ‘தேவையானது கிடைக்கும்’ – தினகரன் கொடுத்த உறுதி

Published On:

| By Balaji

மொபைலில் டேட்டா ஆன் செய்தோம். ஃபேஸ்புக் ஆன்லைனில் வந்தது. லொக்கேஷன் புதுவை காட்டியது.

“விண்ட்ஃப்ளவர் ரிசார்ட்டில் தங்கி இருக்கும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களிடம் எடப்பாடி தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தியது பற்றி நேற்றைய டிஜிட்டல் திண்ணையில் சொல்லி இருந்தேன் அல்லவா… நேற்று 3 எம்எல்ஏக்களிடம் இது சம்பந்தமாக எடப்பாடி டீமிலிருந்து பேசியிருக்கிறார்கள். இதில் பெண் எம்எல்ஏ ஒருவரும் அடக்கம். எடப்பாடி அணியில் இருந்து தூதுவிட்ட தகவல் தெரிந்து தினகரன் எம்எல்ஏக்களிடம் பேசியதாக சொல்கிறார்கள்.

அப்போது அந்த எம்எல்ஏக்களில் ஒருவர், ‘நீங்க ஆட்சியை கலைக்கத்தான் நாம ஒன்று சேர்ந்திருக்கோம் என்பதை இப்போதான் சொல்றீங்க. சட்டமன்றத்துல நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எங்களை அழைச்சிட்டுப் போயிட்டு, ஆட்சி கவிழ்ந்து நாங்க எம்எல்ஏ இல்லைன்னு ஆகிட்டா திரும்ப கூட்டிட்டு வரதுக்குக்கூட உங்க வண்டி இருக்காது. நாங்க வேற வண்டி பிடிச்சுதான் வந்தாகணும். அதனால ஆட்சியை கலைக்கணும்னு நீங்க முடிவு பண்ணினா நாங்க வெளியே போறோம்’ எனச் சற்றுக் கோபத்துடன் சொன்னதாகவும் தகவல் பரவிவருகிறது. முதலில் 3 எம்எல்ஏக்களுடன் பேசிய எடப்பாடி தரப்பில் இருந்து அடுத்தடுத்து மேலும் சிலரிடமும் பேசி இருக்கிறார்கள். ‘உங்களுக்கு அவங்க என்ன தரேண்னு சொன்னாங்க? அதை விட அதிகமாகவே இங்கே வாங்கிக்கோங்க. அதுக்கு மேல மாச மாசம் வருமானமும் இருக்கு. இதோடு எல்லாம் முடிஞ்சிடுமா? இன்னும் 4 வருசம் இருக்கு. அதை மனசுல வெச்சுக்கோங்க…’ என்று பேசி இருக்கிறார்கள். அதனால் சில எம்எல்ஏக்கள் யோசனையில் இருக்கிறார்களாம்.

நேற்று சென்னைக்கு வந்த தங்க தமிழ்செல்வனும், பழனியப்பனும் இரவோடு இரவாகப் புதுவைக்கு திரும்பிவிட்டனர். அதிருப்தி எம்எல்ஏக்களுடன் தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் சமாதானப் படலத்தைத் தொடங்கியிருக்கிறார். இன்று காலை அவர்களிடம் தமிழ்ச்செல்வன்தான் நிறைய பேசி இருக்கிறார். அவரோடு செந்தில் பாலாஜியும் இருந்ததாராம். ‘நாங்க இவ்வளவு ரிஸ்க் எடுக்குறோம்னோ அதனால நல்லது நடக்கும் என்றுதானே சொல்றோம். நீங்க ஏன் புரிஞ்சுக்கலை?’ என்றெல்லாம் மீண்டும் அவர்களுக்கு சமாதானம் சொல்லப்பட்டிருக்கிறது.” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.

அதற்கு லைக் போட்ட வாட்ஸ் அப், “சமாதானம் ஆனார்களா?’ என்ற கேள்வியை கமெண்ட்டில் போட்டது. பதிலை அடுத்த ஸ்டேட்டஸாகப் பதிவிட்டது ஃபேஸ்புக்.

“எம்எல்ஏக்கள் கேட்ட சில விஷயங்கள் அவர்களின் வீடுகளுக்கோ இல்லை அவர்கள் சொன்ன இடத்துக்கோ கொண்டு போய் சேர்க்கப்பட்டுவிட்டது. அப்படி இருந்தும் எம்.எல்.ஏக்கள் எதற்காக இரண்டு மனமாக இருக்கிறார்கள் என்ற குழப்பமும், சந்தேகமும் தினகரனுக்கு இருக்கிறது. இது சம்பந்தமாக தங்க தமிழ்ச்செல்வனிடம் பேசிய தினகரன், ‘எடப்பாடி தரப்புல இருந்து என்ன வேணும்னாலும் செய்யலாம். அதனால இப்போ நம்மகிட்ட இருக்கிறவங்க ஒருத்தர் கூட அங்கே போயிடக் கூடாது. அப்படி போனால் அதைவிட அசிங்கம் வேற எதுவும் இருக்க முடியாது. அதனால அங்கே இருக்கிறவங்களை நீங்க பத்திரமா பார்த்துக்கோங்க. அவங்க என்ன கேட்டாலும் செஞ்சு கொடுங்க. இன்னொரு விஷயத்தையும் அவங்ககிட்ட சொல்லுங்க. ஒருவேளை ஆட்சி கவிழ்ந்து திமுக ஆட்சி வந்தாலும், அவங்க எல்லோருக்கும் தேவையானதை செய்துகொடுக்கச் சொல்லி நான் பேசி இருக்கேன். எல்லோருக்கும் காண்ட்ரக்ட்ல தொடங்கி நிறைய நல்லது நடக்கும். அதனால பதவி போகுதே, இனி எதுவும் நடக்காதே என யாரும் பயப்பட வேண்டாம்னு சொல்லுங்க…’ என்றும் தினகரன் சொல்லியிருக்கிறார்.

இதைத்தான் தங்க தமிழ்ச்செல்வன் மற்ற எம்எல்ஏக்களுக்கு சொல்லியிருக்கிறார். அதனால் அவர்கள் எல்லோரும் சமாதானம் ஆகிவிட்டதாகச் சொல்கிறார்கள். இருந்தாலும் எல்லோரையும் கவனித்துக் கொள்ளும்பொறுப்பு இப்போது செந்தில் பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ். அதையும் காப்பி செய்து ஷேர் செய்துவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment