மொபைலில் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் தயாராக இருந்தது.
“தேர்தலுக்குத் தயாராகிவிட்டார் டிடிவி தினகரன். 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் மேல் முறையீடு என முதலில் சொல்லி வந்தவர், இப்போது தேர்தல் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். தினகரனின் திடீர் மாற்றத்துக்கு காரணம், தங்க. தமிழ்ச்செல்வன் தான் என்கிறார்கள். 18 எம்.எல்.ஏ.க்களில் அதிகம் அதிருப்தியில் இருந்தவர் தங்க தமிழ்ச்செல்வன்தான். கடந்த வாரம் தீர்ப்புக்குப் பிறகு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில்தான் மேல் முறையீடு என்ற முடிவுக்கு வந்தார் தினகரன். அதன் பிறகு, தினகரனை சந்தித்துப் பேசியிருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன்.
அப்போது, ‘எம்.எல்.ஏ. பதவி என்பது உங்களுக்கு வேணும்னா சாதாரணமாத் தெரியலாம். ஆனால் இந்த இடத்துக்கு வரதுக்கு நான் பட்ட கஷ்டம் எனக்கு மட்டும்தான் தெரியும். எத்தனை பேரு காலில் விழுந்திருப்பேன் தெரியுங்களா? அந்தப் பதவியை உங்களுக்காகத்தான் இழந்துட்டு நிற்கிறோம். இதே எடப்பாடி பக்கம் போயிருந்தா இந்த நேரத்துக்கு நான் அமைச்சராக சைரன் வெச்ச காருல போயிட்டு இருந்திருப்பேன். இப்போ பாருங்க. உள்ளதும் போச்சுன்னு உட்கார்ந்துட்டு இருக்கோம்.
தீர்ப்பு எதிராக வந்தால் மேல் முறையீடு போக மாட்டோம்னு நான் முன்பே சொல்லிட்டேன். இப்போ மேல் முறையீடுன்னு நீங்க சொன்னதும்தான் யாரும் பதில் பேச முடியாமல் தலையாட்டிட்டு போய்ட்டாங்க. மேல் முறையீடு பண்ணிட்டு மிச்சம் இருக்கும் ரெண்டு வருஷத்தை அப்படியே ஓட்டிடலாமா? தேர்தல் வந்தால் பணம் செலவாகிடும்னு நீங்க யோசிக்கிறீங்களா?’ என கேட்டிருக்கிறார் தமிழ்ச்செல்வன்.
இதைக் கேட்டு அதிர்ச்சியாகிவிட்டாராம் தினகரன். ‘பணத்தை பத்தியெல்லாம் நான் கவலைப்படலை. என்னால எவ்வளவு செலவு பண்ண முடியுமோ அவ்வளவு பண்ணிடுவேன். ஆனால், தேர்தல்னு போய்ட்டா ஜெயிக்க முடியுமான்னு யோசிக்கணும்…’ என்று தயங்கியபடியே சொன்னாராம்.
தங்க தமிழ்ச்செல்வன் விடாமல் பேசியிருக்கிறார். ‘ஜெயிக்கிறோம் தோற்கிறோம் என்பதெல்லாம் அடுத்தது. எலெக்ஷன் என்று முடிவு பண்ணிட்டு இறங்கிடணும். எப்படி ஜெயிக்கிறதுன்னு எனக்குத் தெரியும். உங்களால் பணம் செலவு செய்ய முடியலைன்னா விடுங்க. யாரு செலவு பண்றாங்களோ அங்கே வாங்கிக்கிறேன். இவ்வளவு நாளா உங்க மேல இருக்கும் மரியாதையில்தான் அமைதியா இருக்கேன். ஆனால், நீங்க இதுக்கு மேலயும் அமைதியாக இருந்தால், அப்படியே இருங்க. நான் போய்டுறேன்.’ என்று ஓப்பனாகவே சொல்லிவிட்டாராம்.
அதன் பிறகுதான் தினகரன், ‘சரி இப்போ என்ன… மேல் முறையீடு போகாமல் தேர்தலை சந்திப்போம் என சொல்லணும்… அவ்வளவுதானே! இன்னிக்கே சொல்லிடுறேன்’ என்றவர் உடனடியாக, மேல் முறையீடு இல்லை என்றும் அறிவித்துவிட்டார்.
இந்தப் பஞ்சாயத்து முடிந்ததும் முன்னாள் அமைச்சர்கள் இருவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் தினகரன். அவர்களிடம், ‘தேர்தல்தான்னு முடிவு பண்ணிட்டோம். அதை சமாளிக்க நாம ரெடியாக இருக்கணும். பத்து தொகுதிக்கான செலவை நான் பார்த்துக்குறேன். மிச்சம் இருக்கும் பத்து தொகுதியில் ஆளுக்கு அஞ்சு தொகுதிக்கான செலவுகளை நீங்க பார்த்துக்கோங்க… எவ்வளவு செலவு ஆகும்னு இப்போ சொல்ல முடியாது. என்னோட கணக்குப்படி ஒரு தொகுதிக்கு குறைஞ்சது 15இலிருந்து அதிகபட்சமாக 20 வரைக்கும் செலவு ஆகும். அதுக்குத் தகுந்த மாதிரி ஏற்பாடுகளை செஞ்சுக்கோங்க. அதேபோல ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கக்கூடிய எல்லா பூத்களுக்கும் உடனடியாக நிர்வாகிகளை நியமிக்கணும். இதுதான் அடிப்படையில் செய்ய வேண்டிய விஷயம்’ என்று சொன்னாராம்.
அதற்கு இரண்டு அமைச்சர்களில் ஒருவர் வாய் திறக்கவே இல்லையாம். இன்னொருவர்தான் பதில் பேசியிருக்கிறார். ‘பூத் கமிட்டி அமைக்கிறது, கட்சி வேலை பார்க்கிறது பற்றியெல்லாம் கவலை இல்லை. ஆனா 5 தொகுதிகளை என்னை பார்க்க சொன்னால் நான் எங்கே போறது? அந்த அளவுக்கெல்லாம் நான் சம்பாதிக்கலைங்க. என்னோட தொகுதிக்கான செலவுகளையே நான் உங்ககிட்ட கேட்க நினைச்சிருந்தேன். நீங்க என்னடான்னா என்னை 5 தொகு திக்கு செலவு செய்ய சொல்றீங்க. என்னால அவ்வளவு செய்யவும் முடியாது. அதுக்கான வாய்ப்புகளும் இல்ல. கட்சி செலவு பண்ற மாதிரி இருந்தால் எனக்கு சீட் கொடுங்க. இல்லைன்னா அதுவும் வேண்டாம்…’ என்று சொல்ல தினகரன் கொஞ்சம் ஷாக்காகிவிட்டாராம். அந்த நேரத்தில் என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல், அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.
“யாரு அந்த இரண்டு முன்னாள் அமைச்சர்கள்? எதாவது க்ளு கொடுக்கலாம்ல..?” என்ற கேள்வியை வாட்ஸ் அப் போட, பதிலாக ஒரு ஸ்மைலி போட்டுவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.�,