மொபைல் டேட்டா ஆன் செய்து வைத்தோம். வாட்ஸ் அப் மெசேஜ் வந்து விழுந்தது.
’’கடந்த மாதம் பெரியார், அண்ணா பிறந்த நாளுக்காக டிடிவி அணி சார்பில் சேலத்தில் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் , ‘டிடிவி தினகரன், புகழேந்தி, பெரம்பூர் வெற்றிவேல் உள்ளிட்ட 14 பேர் மீது போலீஸார் தேசத் துரோக வழக்கு உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குத்தொடர்ந்துள்ளனர். இதில் அதிமுக சேலம் மாவட்டச்செயலாளர் வெங்கடாச்சலம் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
காவல் துறையின் அடுத்த டார்கெட் டிடிவி தினகரனாக இருக்கும் என்பதால், அவர் அது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நேற்று இரவு தினகரன் வீட்டில், வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் தினகரனின் சட்ட ஆலோசகர்கள் கூடிப் பேசியிருக்கிறார்கள்.
அப்போது, உடனடியாக முன் ஜாமீன் வாங்குவது தொடர்பாக வழக்கறிஞர்கள் ஆலோசனை சொல்லி இருக்கிறார்கள். அதற்கு தினகரனோ, ’இந்த வழக்கில் முன் ஜாமீன் வாங்கினால் நான் கைதாகாமல் இருப்பேன். அவங்க நோக்கம் என்னை அலைக்கழிப்பதுதான். கைது நடவடிக்கையை அவங்க மேற்கொண்டால் அது நமக்கு நல்லதுதானே… மக்கள் சப்போர்ட் நம்ம பக்கம் திரும்பும். இது எடப்பாடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்பது வெட்ட வெளிச்சமாக தெரியவரும். எதிர்க்கட்சிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து நமக்கு ஆதரவு தெரிவிப்பாங்க. அப்படி இருக்கும் போது எதுக்காக நாம ஜாமீன் வாங்கணும்? அதெல்லாம் வேண்டாம். கைது செஞ்சா செய்யட்டும்!’ என்று தினகரன் சொல்லி இருக்கிறார்.
அதற்கு வழக்கறிஞர் ஒருவர், ‘கைது செஞ்சாங்கன்னா உடனே ஜாமீன் வாங்க முடியாது. ஒருவாரம் கூட ஆகலாம். அது வரைக்கும் நீங்க ஜெயில்ல கஷ்டப்படுற மாதிரி இருக்கும்…’ என்று தயங்கியபடியே சொல்லி இருக்கிறார்.
தினகரன் அலட்டிக்கொள்ளவே இல்லையாம். ’திஹார் ஜெயிலையே பார்த்துட்டேன். இந்த புழல் ஜெயில் என்ன செஞ்சுடப் போகுது? சின்னம்மா மாசக்கணக்குல அங்கே உள்ளே இருக்காங்க. நான் பத்துநாள் உள்ளே இருந்துட்டு வந்தா எதுவும் ஆகிட மாட்டேன். என்னைக் கைது செஞ்சுட்டாங்கன்னா அதுக்குப் பிறகு எடப்பாடிக்கு இறங்குமுகம் தான். என்ன நடந்தாலும் நடக்கட்டும் முன் ஜாமீன் வாங்கவே வேண்டாம்’ என்று சிரித்தபடியே சொல்லி இருக்கிறார்.
இன்று காலையில் மீண்டும் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன், மாரியப்பன் கென்னடி உள்ளிட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அவரது வீட்டுக்கு போயிருக்கிறார்கள். வெற்றிவேல்தான் இன்று திரும்பவும் கேட்டு இருக்கிறார். ‘கண்டிப்பா பெயில் மூவ் பண்ண வேண்டாங்களா…?’ என்று! அதற்கு தினகரன், ‘அதான் நேற்றே சொல்லிட்டேனே… வேண்டாம். நடக்கிறதை பார்த்துக்குவோம். நான் எங்கேயும் போய் ஒளிஞ்சுக்க மாட்டேன். வீட்டுலயே இருக்கேன். கைது செய்யணும்னு நினைச்சா வந்து பண்ணிட்டுப் போகட்டும்’ என்று தினகரன் சொல்ல.. எம்.எல்.ஏக்கள் எல்லோருமே அமைதியாகிவிட்டார்கள்.
அந்த சந்திப்புக்கு பிறகுதான் தினகரன் வீட்டில் இருந்து வெளியே வந்த வெற்றிவேல் எம்.எல்.ஏ. , ‘எங்க தலைவர் டிடிவி தினகரன் உட்பட 36 பேர் மேல் வழக்கு போட்டிருக்காங்க. எங்க தலைவரை கைது செய்யுறதுன்னா தாராளமா கைது செய்யட்டும். அவர் ஜாமீன் கேட்கவே போறது இல்ல. அவரு என்ன தேச துரோகம் பண்னிட்டாருன்னு நீதிமன்றம் முடிவு பண்ணட்டும்!’ என்று கொந்தளித்தார். ஆக, தினகரனை பொருத்தவரை கைது செய்தால் அதுவும் தனது அரசியல் வளர்ச்சிக்கு அஸ்திவாரமாக இருக்கும் என்றே கணக்குப் போடுகிறார். அதைத்தான் இப்போது செயல்படுத்த ஆரம்பித்துள்ளார்…” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
இதற்கு லைக் போட்ட ஃபேஸ்புக் இதே விவகாரத்தில் எடப்பாடி தரப்பிடமிருந்து கிடைத்த ஒரு தகவலை டைப்பிங் செய்தது.
’’தன்னை தேச துரோக வழக்கில் கைது செய்தால் அதுவே எடப்பாடிக்கு பெரிய பின்னடைவைக் கொடுக்கும் என்று தினகரன் கருதுகிறார். ஆனால் எடப்பாடி தரப்பிலோ இன்னொரு முக்கிய ஆலோசனை இப்போது நடந்துகொண்டிருக்கிறது. அதாவது குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவர் நடராஜனை நேரில் பார்க்க சசிகலா பரோலுக்கு விண்ணப்பித்திருகிறார். அனேமாக சசிகலாவுக்கு பரோல் கிடைத்துவிடும் என்றே கர்நாடக மாநிலத்தில் இருக்கும் தமிழக உளவுத்துறையினர் செய்தி அனுப்பியிருக்கிறார்கள்.
சசிகலா பரோலில் வரும் பட்சத்தில் தினகரன் நிச்சயமாக அவரோடு மனம் விட்டுப் பேசுவார். சிறையில் நடந்த சந்திப்புகளில் ஓரளவுக்கு மேல் மனம் விட்டுப் பேச முடியாது. ஆனால் பரோலில் வரும்போது தினகரனுக்கு பர்சனலாக, ரகசியமாக சில அறிவுரைகளை சசிகலா வழங்குவார். மேலும் கட்சி ரீதியிலான சில அதிரடி முடிவுகளையும் எடுக்க யோசனைகள் கொடுப்பார். இந்நிலையில் சசிகலா பரோலில் சென்னை வரும் நேரத்தில் தினகரனை சிறையில் தள்ளுவதன் மூலம்… சசிகலா- தினகரன் சந்திப்பு நடக்காத வண்ணம் திட்டம் தீட்டுகிறது எடப்பாடி அரசு. அதன் ஒரு பகுதியாகத்தான் தினகரன் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சசிகலா வெளியே வந்தால் தினகரனை உள்ளே தள்ளும் வியூகம் அரசுத் தரப்பில் வகுக்கப்பட்டு வருகிறது’’ என்று மெசேஜை செண்ட் கொடுத்தது.
அதை அப்படியே காப்பி செய்துகொண்ட வாட்ஸ் அப், சிவாஜி மணிமண்டபத்தை திறந்து வைத்த தோஷம் போக்குவதற்காக ஜோதிடர்கள் சொன்ன காரணத்துக்காக திருப்பதி போய் வந்தார் துணை முதல்வர் பன்னீர். அவர் எதற்காக திடீரென திருப்பதி போனார் என விசாரித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. விபரம் சொல்லியிருக்கிறார்கள். உடனே எடப்பாடியும் அவரது ஆஸ்தான ஜோதிடரிடம் விசாரித்திருக்கிறார். அவரும் எடப்பாடியை திருப்பதிக்கு திருப்பிவிட…. முதல்வரும் உடனே திருப்பதிக்கு கிளம்பிவிட்டார். முதல்வர், துணை முதல்வர் இருவருமே திருப்பதிக்கு போய்விட்டார்கள். திருப்பம் வருகிறதா பார்க்கலாம்!”என்ற மெசேஜ்க்கு போஸ்ட் கொடுத்துவிட்டு சைன் அவுட் ஆனது.�,”