மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் தயாராக இருந்த மெசேஜ்க்கு செண்ட் கொடுத்தது.
“ரெய்டு படலம் தொடங்கிவிட்டது. துரைமுருகன் வீட்டில் பிள்ளையார் சுழி போடப்பட்டு இருக்கிறது. ‘அத்தனையும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது’ என்று சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். அவர்களிடமே விசாரித்தபோது சொன்ன தகவல்களை அப்படியே தருகிறேன்.
‘தமிழக அரசின் உளவுத்துறையும், மத்திய அரசின் வருமான வரித்துறையும் இணைந்து திட்டமிட்டதுதான் இந்த ரெய்டு. தேர்தல் நெருக்கத்தில் திமுக வேட்பாளர்களை மட்டும் குறிவைத்து ரெய்டு நடத்தலாம் என ப்ளான் போடப்பட்டது. கடந்த ஒருவாரமாகவே திமுக வேட்பாளர்களின் போன் மட்டுமல்லாமல், அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் என அத்தனை பேரின் போன் அழைப்புகளையும் கண்காணிக்க ஆரம்பித்தார்கள். முதலில் எங்கிருந்து தொடங்கலாம் என ஆலோசனை நடந்தபோது, ‘துரைமுருகனில் இருந்து ஆரம்பித்தால்தான் அதிரடியாக இருக்கும்’ என தமிழகத்தை சேர்ந்த ஒருவர்தான் ஐடியா கொடுத்திருக்கிறார். அதன்படியே ரெய்டு படலம் ஆரம்பமானது.
துரைமுருகன் ஆரம்பம் மட்டுமே… திமுக வேட்பாளர்களில் தயாநிதி மாறன், கனிமொழி, பழனிமாணிக்கம், ஆ.ராசா, ஜெகத் ரட்சகன், கௌதம சிகாமணி ஆகியோரும் வேட்பாளர் அல்லாத கே.என்.நேரு, எ.வ.வேலு ஆகியோரும் அந்தப் பட்டியலில் இருக்கிறார்களாம். இவர்கள் அத்தனை பேரும் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்கள். துரைமுருகன் வீடு, அலுவலகம் என திடீரென புகுந்தது போல, இவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களிலும் எந்த நேரத்திலும் அதிரடி தொடங்கலாம். திமுக வேட்பாளர்கள் சிலருக்கு பணம் சப்ளை ஆவது எ.வ.வேலு மூலமாகத்தான் என்பதால் அவரையும் இந்த லிஸ்டில் கொண்டு வந்திருக்கிறார்கள். எ.வ.வேலுவுக்கு செக் வைத்தால் வேட்பாளர்களுக்கு போகும் பணம் தடுக்கப்படும் என கணக்கு போடுகிறார்கள். இந்த பட்டியலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் யாரும் இல்லை. அத்தனை பேரும் திமுகவை சேர்ந்தவர்கள் மட்டுமே.
இது ஒருபக்கம் இருக்க… பெங்களூருவில் இருந்து கொண்டுவரப்பட்ட 100 கிலோவுக்கு மேற்பட்ட தங்கம் பிடிபட்டிருக்கிறது. தங்கத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவதற்கான டாகுமெண்ட்கள் எல்லாம் வைத்திருந்தார்களாம் கொண்டு வந்தவர்கள். ஆனால் அது அத்தனையும் போலியான டாகுமெண்ட் என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பெங்களூருவை சேர்ந்த சிலர் மூலமாக தங்கத்தை சென்னைக்கு கொண்டு வந்து, நகைக்கடை உரிமையாளர் ஒருவரிடம் ஒப்படைக்கச் சொல்லி உத்தரவு வந்திருக்கிறந்து. அந்த நகைக்கடைக்காரர் தங்கத்துக்கு பதிலாக 20 கோடி பணமாக தென்மாவட்டத்துக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் அவருக்கான அசைன்மெண்ட். இந்த டீல் எல்லாமே தென்மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் போனில் பேசியிருக்கிறார். அதைவைத்துதான் தங்கம் வந்த வண்டியை பிடித்திருக்கிறார்கள். இதேபோல கோயமுத்தூரில் ஒரு கான்ட்ராக்டர் வீட்டில் நான்கு தினங்களுக்கு முன் அதிரடி ரெய்டு நடந்தது. அங்கு பத்து கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அதுவும் ஒரு வேட்பாளர் கொடுத்து வைத்த தொகைதான் என்று வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாம். இப்படியாக திமுக வேட்பாளர்களுக்கு எந்த வழியாக எல்லாம் பணம் வருகிறதோ அத்தனை வழிகளையும் அடைக்கும் ஆபரேஷனை கையில் எடுத்திருக்கிறது பிஜேபி. ஆக, ரெய்டு இத்துடன் ஓயப்போவது இல்லை’ என்று சொன்னார்கள். “ என்பதுடன் முடிந்தது அந்த மெசேஜ்.
அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக். தொடர்ந்து, ஸ்டேட்டஸ் ஒன்றை பதிவிட்டது ஃபேஸ்புக்.
“இன்று காலை வேலூரில் துரைமுருகனின் நண்பருக்கு சொந்தமான சிமெண்ட் குடோனில் பணம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறையினரின் மூலமாக வெளியான வீடியோ பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இது கான்ட்ராக்டர் சபேசன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் என்றும், கோவை மக்களவைத் தொகுதிக்காக வைக்கப்பட்டிருக்கிற பணத்தை வேலூர் தொகுதிக்காக என்று ஊடகங்களுக்குத் தவறான தகவல்களை வருமான வரித்துறை பரப்பியிருக்கிறது என்றும் திமுகவினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
இன்று காலை வாட்ஸப்புகளிலும், தொலைக்காட்சிகளிலும் கட்டுக் கட்டாக பணம் வைக்கப்பட்டிருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகின. வீடியோ எடுத்துக் கொண்டே வர, ‘வார்டு நம்பர்லாம் எழுதியிருக்கு பாரு… அதை சூம் பண்ணு’ என்று ஒரு குரல் சொல்கிறது. இதையடுத்து அந்த பண பண்டலின் மீது சுற்றப்பட்டிருந்த காகிதங்களை அகற்றி அந்த பேக்கிங்கை சூம் செய்து வீடியோ எடுக்கப்படுகிறது. ஒரு நிமிடம் 18 நொடிகள் ஓடக் கூடிய அந்த வீடியோவில் 49 ஆவது நொடியில் பி.என்.பாளையம்- எம்.ஜிஆர்.நகர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதை அடிப்படையாக வைத்து,’பி.என்.பாளையம் என்ற பாப்பநாயக்கன் பாளையம் கோவையில் இருக்கிறது. இதுஅமைச்சர் வேலுமணிக்கு வேண்டப்பட்ட சபேசன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம். அந்த வீடியோவை வைத்து துரைமுருகன் வீட்டில் எடுக்கப்பட்டது போல வதந்தி பரப்புகிறார்கள்’ என்று திமுகவினர் மறுப்பு தெரிவித்து இதை வெளியிட்ட ஊடகங்களையும் கடுமையாக சாடி வருகிறார்கள்.
இதுபற்றி விசாரித்தபோது கோவையில ஒரு பிஎன் பாளையம் இருப்பது உண்மைதான். அதேபோல வேலூர் காட்பாடி அருகே பொன்னை ஊராட்சியிலும் பி.என்.பாளையம் இருக்கிறது என்பது தெரியவருகிறது. அந்த வீடியோவில் இருக்கும் பி.என். பாளையம் கோவை பாளையமா அல்லது வேலூர் பாளையமா என்பது வருமான வரித்துறை விளக்கம் அளித்தால்தான் தெளிவாகும்” என்ற மெசேஜை செண்ட் கொடுத்து லாக் அவுட் ஆனது ஃபேஸ்புக்.
�,”