மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. முதலில் சில ப்ளாஷ் ஃபேக்… என்ற அறிமுகத்துடன் சில மெசேஜ்களை தட்டிவிட்டது வாட்ஸ் அப்.
‘முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் நெடுஞ்சாலைத்துறையில் பல்வேறு ஒப்பந்த பணிகளை போட்டியின்றி அவரின் உறவினர்களுக்கே வழங்கி, அதன் மூலம் ரூ 1500 கோடி ஊழல் செய்திருக்கின்றனர். அதற்கான ஆதாரம் இருப்பதாக டிடிவி அணியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் கடந்த மார்ச் 2-ம் தேதி பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தனர். அத்துடன் அதற்கான ஆதாரத்தையும் காண்பித்தனர்.
அப்போது நெடுஞ்சாலைத்துறையில் 4,100 கோடிக்கு டெண்டர்கள் அறிவிக்கப்பட்டது. திட்டமிட்டு இவை அனைத்தையுமே சிங்கிள் டெண்டராக முதலமைச்சரின் சம்பந்தி, உறவினர்கள், அவர்களது கம்பெனி பங்குதாரர் ஆகியோருக்குக் கொடுத்துள்ளனர். அனைத்தும் சாலை போடுவது தொடர்பானது. வேலைகளைத் தொடங்குமாறு உத்தரவும் வழங்கிவிட்டனர். இதைப் பற்றிய விரிவான தகவல் எங்களுக்குக் கிடைத்தது. அதைப் பற்றி ஊடகங்களின் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கிறோம். ஊழலில் ஈடுபட்டு வரும் முதல்வர் உறவினர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு உறுதுணையாக இருந்து வரும் முதல்வர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத் துறையில் பல்வேறு ஊழல்களைச் செய்துள்ளார். ரூ.713.45 கோடி மதிப்பீடு செலவில் நெடுஞ்சாலைத் துறையில் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது. இந்த டெண்டரை ரூ.1,515 கோடிக்கு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.800 கோடி அரசுக்கு நஷ்டம். இதேபோல் மொத்தம் ஐந்து டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ. சுமார் 4,100 கோடி ஆகும். இந்த ஐந்து டெண்டர்களுமே எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி மற்றும் அவரது மகனுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம், அரசுக்கு 1,500 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருப்பதால், இதுகுறித்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஜெயலலிதாவின் ஆட்சி எனச் சொல்லிக்கொண்டு கொள்ளையடிக்கின்றனர். ஜெயலலிதாவின் சிலையையே சரியாக அமைக்கத் தெரியாதவர்கள் மணி மண்டபம் கட்டுவார்களா? அவ்வாறு கட்டினால் அதிலும் கொள்ளைதான் அடிப்பார்கள்” என்றும் அப்போது குற்றம் சாட்டினார்கள். அந்த விவகாரம் அப்போது பேசப்பட்டாலும் அப்படியே அமுங்கிப் போனது. நாம் இது பற்றி மின்னம்பலத்தில் எழுதி இருக்கிறோம்.” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
தொடர்ந்து அடுத்த மெசேஜ் வந்தது. “லஞ்ச ஒழிப்புத் துறையில் இன்று திமுக ஒரு புகாரை கொடுத்திருக்கிறது. திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தான் புகாரை கொடுத்திருக்கிறார். 5 சாலைகள் அமைக்கும் திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருக்கிறது. அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் சொல்லப்பட்டு இருக்கிறது. நெல்லை- செங்கோட்டை- கொல்லம் சாலைக்கும் 470 கோடிக்கு பதிலாக 720 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு முதல்வர் எடப்பாடியின் சம்பந்தி வெங்கடாஜலபதி நடத்தி வரும் நிறுவனம் மட்டுமே ஒப்பந்தம் கோரியுள்ளது.
சென்னை – வண்டலூர்- வாலாஜாபாத் சாலை ஒப்பந்தத்திலும் கூடுதலாக தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல தாராபுரம் – அவினாசி சாலை திட்டத்துக்கும் 713 கோடிக்கு பதிலாக 1005 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாம். ராமநாதபுரம் – திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விருதாச்சலம் ஆகிய பகுதிகளில் உள்ள சாலையை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டது. இது எல்லாமே முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி வெங்கடாஜலபதியின் நிறுவனத்துக்குதான் டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தன் குடும்ப உறுப்பினருக்கே அனைத்து டெண்டர்களையும் கொடுத்து கூடுதலாக நிதியை ஒதுக்கியுள்ளார். அதனால் முதல்வர் பொது ஊழியர் என்ற முறையில் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர். எஸ். பாரதி புகாரில் பட்டியல் போட்டு இருக்கிறார்.
மூன்று மாதங்களுக்கு முன்பே இதே பிரச்னையைதான் தினகரன் அணியினர் முன் வைத்தனர். அப்போது திமுக இது தொடர்பாக வாயே திறக்காமல்தான் அடக்கி வாசித்தது. ‘அதிமுகவை தினகரன் எதிர்க்கும் அளவுக்கு கூட திமுக எதிர்ப்பதே இல்லை… காரணம், ஆளுங்கட்சியோடு திமுக ரகசிய கூட்டணி வைத்திருக்கிறது’ என்றெல்லாம் பலரும் பொதுவெளியில் பேச ஆரம்பித்தனர். ஸ்டாலின் கவனத்துக்கும் இந்த விஷயங்கள் போனது. ஏற்கெனவே எடப்பாடிக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என திமுக எம்.எல்.ஏ.க்கள் சிலர் மீது கோபத்தில் இருந்த ஸ்டாலின், இப்போது தினகரன் தரப்பினர் வெளியிட்ட புகாரை வழிமொழிந்து செயல்பட ஆரம்பித்திருக்கிறார்.” என்று முடிந்தது அந்த மெசேஜ். அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக்.�,