டிஜிட்டல் திண்ணை: ‘தமிழ்நாட்டுக்கு என்ன நல்லது செய்யலாம்?’

public

லிஸ்ட் கேட்ட கவர்னர்

மொபைலில் டேட்டா ஆன் செய்தோம். தயாராக வைத்திருந்த ஸ்டேட்டஸ்க்கு போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக்.

“எடப்பாடி பழனிசாமி – டி.டி.வி. தினகரன் – கவர்னர் வித்யாசாகர் ராவ் மூன்று பேரும் சேர்ந்து நடத்தும் ஆடுபுலி ஆட்டம் தொடர்கிறது. எடப்பாடி பழனிசாமியை எப்படியாது முதல்வர் நாற்காலியில் இருந்து இறக்கியே தீருவேன் என்று தினகரன் கங்கணம் கட்டிக் கொள்ளாதது மட்டுமே பாக்கி. தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எங்கேயும் முகாம் மாறிவிடக் கூடாது என்பதற்காக, புதுவையில் இருந்து கர்நாடக மாநிலம் கூர்க்கில் உள்ள ரிசார்ட்டுக்கு இடம் மாற்றிவிட்டார். மாறியது கூர்க் ஆக இருந்தாலும், புதுவையில் அவர்கள் தங்கியிருந்த விண்ட் ஃப்ளவர் ரிசார்ட்டின் இன்னொரு கிளைதான் கூர்க்கில் இருக்கிறது. அங்கேதான் அவர்கள் இடம் பெயர்ந்து இருக்கிறார்கள். புதுவையில் உள்ளதை விட கூடுதல் வசதிகள் கொண்டது கூர்க்கில் உள்ள ரிசார்ட். அவர்களுக்காக ரிசார்ட் புக்கிங் செய்திருந்தாலும் இன்னும் அவர்கள் அங்கே சென்று சேரவில்லையாம். புதுவையில் இருந்து கிளம்பியவர்கள் வழியில் கோயில் கோயிலாக ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசின் தலைமைச் செயலர் மற்றும் சில துறைகளின் மூத்த அதிகாரிகளுக்கு கவர்னர் மாளிகையில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. அவர்கள் எல்லோரும் கவர்னர் மாளிகைக்குப் போயிருக்கிறார்கள். அவர்களிடம் கவர்னர் வித்யாசாகர் ராவ் சில விஷயங்களைக் கேட்டிருக்கிறார். ‘தமிழக மக்கள் இப்போ இருக்கும் ஆட்சி மீது அதிருப்தியில் இருக்காங்க. தமிழக மக்களுக்கு என்னென்ன நல்ல திட்டங்களை செயல்படுத்தலாம் என்று எனக்கு ஒரு லிஸ்ட் கொடுங்க. அதாவது இப்போ இருக்கும் அதிருப்தி அப்படியே மாறணும். மக்களுக்கு நல்லது நடக்கணும். அப்படி என்னவெல்லாம் செய்தால் சரியாக இருக்கும்?’ என்று கேட்டிருக்கிறார். தலைமைச் செயலருக்கு எதற்காக கவர்னர் இப்படி கேட்கிறார் என்பது புரியவில்லை. ‘நாங்க ஃபைல் ரெடி பண்ணி கொடுக்கிறோம் சார்’ என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.

ஒருவேளை ஆட்சி டிஸ்மிஸ் ஆனால், நிர்வாகமும் அதிகாரமும் கவர்னரிடம் வரும். அப்படி வரும்போது தமிழக மக்களுக்கு என்ன செய்யலாம் என்பதை கவர்னர் இப்போதே யோசிக்க ஆரம்பித்துவிட்டார், அதை மனதில் வைத்துதான் நலத்திட்டங்கள் பற்றி கவர்னர் கேட்டிருக்கிறார் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் சொல்கிறார்கள்” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

அதற்கு லைக் போட்டு ஷேர் செய்த வாட்ஸ் அப், “அப்படியானால் எப்போது ஆட்சி டிஸ்மிஸ் ஆகும்?” என்ற கேள்வியை கமெண்ட்டில் போட்டது.

பதிலை ரிப்ளையில் போட்டது ஃபேஸ்புக். “அது என்ன கவர்னர் கையிலா இருக்கு? மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதை செய்து முடிக்கும் பொம்மையாக கவர்னர் இருக்கிறார். மத்திய அரசு எப்போது கிரீன் சிக்னல் காட்டுகிறதோ அப்போது கவர்னர் அதிரடி ஆக்‌ஷனில் இறங்குவார். மத்திய அரசைப் பொறுத்தவரை அவ்வளவு சீக்கிரம் அதிமுகவை தூக்கிப் போட்டுவிடாது. அப்படி தூக்கி வீசிவிட்டால், மறுபடியும் அதிமுக வராது. திமுக ஆட்சிக்கு வந்தால், தங்களுக்கு தமிழகத்தில் எதிர்காலம் இல்லை என்பதே பிஜேபி போடும் கணக்கு. அதனால், அதிமுகவை இப்படியே வைத்துக்கொண்டு மிச்சம் இருக்கும் மூன்றரை வருடங்களை ஓட்டிவிட வேண்டும், மத்திய அரசு சொல்வதுதான் தமிழகத்தில் நடக்க வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள்.

ஆனால், நாளுக்கு நாள் கவர்னருக்கு நெருக்கடிகள் அதிகமாகிக்கொண்டே போகின்றன. இப்படியே எவ்வளவு நாட்கள் ஓட்ட முடியும் எனபதால், ஒரு கட்டத்தில் கவர்னரே மத்திய அரசிடம் இது சம்பந்தமாக பேசுவார் என்றும் சொல்கிறார்கள். அப்படி எதாவது நிகழ்ந்தால்தான் அந்த மாற்றங்களை எதிர்பார்க்க முடியும். அதே நேரத்தில் அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு ஒன்று நடக்கும் வரை எம்.எல்.ஏ.க்கள் யாரும் முகாம் மாறிவிடக் கூடாது என்பதால்தான் தினகரனும் எம்.எல்.ஏ.க்களைக் கண் கொத்திப் பாம்பாக கவனித்துக்கொண்டு இருக்கிறார்.

அப்படி இருந்தும், ஜக்கையன் முகாம் மாறியதில் அவருக்கு மிகுந்த வருத்தமாம். ‘இப்படி ஒரு யோசனையில் அவரு இருக்காருன்னு நீங்க என்கிட்ட சொல்லி இருந்தால் நான் பேசியிருப்பேனே…’ என்று தங்க தமிழ்செல்வனிடம் சொல்லி வருத்தப்பட்டு இருக்கிறார் தினகரன். ஆனால், ஜக்கையன் எடுத்த முடிவு, கடைசி வரை தங்க தமிழ்செல்வனுக்கும் தெரியாது என்பதுதான் நிஜம்!” என்ற பதிலுக்கு செண்ட் கொடுத்துவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *