மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டது. வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.
“குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் போராட்டங்கள் நீண்டுகொண்டிருக்கின்றன. தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் ஷாஹின் பாக் எனப்படும் தொடர் போராட்டங்கள் மாநகரங்கள் மட்டுமின்றி சிறு – குறு நகரங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் வரும் மார்ச் 9ஆம் தேதி தமிழகச் சட்டமன்றம் தொடங்க இருக்கும் நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி அதிமுக அரசு நிலைப்பாட்டைக் கோடிட்டுக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் எஸ்டிபிஐ கட்சி பிரதிநிதிகளைத் தன் வீட்டுக்கு அழைத்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதற்கு அடுத்த நாள் வண்ணாரப்பேட்டை போராட்டம் பற்றி சட்டமன்றத்தில் தெரிவித்த கருத்துகள் போராட்டத்தில் மேலும் எண்ணெயை விட்டன.
இதற்கிடையே அதிமுகவின் சிறுபான்மைப் பிரிவு தலைவர்களும் முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜா உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியிடம் இந்த விஷயம் ரீதியாக தனிப்பட்ட முறையில் விவாதித்துள்ளனர். மார்ச் 1ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்ட மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவுக்காக ராமநாதபுரம் சென்றார் முதலமைச்சர். அப்போது அன்வர் ராஜாவின் வீட்டில்தான் அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர், மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் என அத்தனை பேரும் அன்வர் ராஜாவின் எம்ஜிஆர் இல்லத்தில்தான் விருந்து சாப்பிட்டனர்.
இந்த விருந்துபசார நிகழ்ச்சியில்கூட குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான அதிமுகவின் நிலைப்பாடு பற்றிய பேச்சு வந்திருக்கிறது. அன்று நடந்த கூட்டத்திலும்கூட முதலமைச்சர் சிறுபான்மையினரின் உரிமைகள் காக்கப்படும் என்று பேசியிருக்கிறார்.
முதல்வரிடம் அன்வர் ராஜா உள்ளிட்டோர் வலியுறுத்தி வருவது பற்றி விசாரித்தபோது… இந்த ஒற்றை விவகாரத்தை வைத்து திமுக சிறுபான்மை வாக்கு முழுவதையும் அடர்த்தியாக தன்னிடம் வைத்திருக்க முயற்சி செய்கிறது. அதில் ஓரளவு வெற்றியும் பெறுகிறது.
வருகிற சட்டமன்றத் தேர்தலில் ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்ற நிலையில் நாம் ஏன் பாஜகவின் சட்டத்துக்காக இத்தனை பெரிய வாக்கு வங்கியை இழக்க வேண்டும்?
பாஜகவின் கூட்டணிக் கட்சியான நிதிஷ் குமார்கூட இந்த விஷயத்தில் தனது மாநில அளவிலான அரசியல் இருப்பை முக்கியமாக நினைக்கும்போது அதிமுக ஏன் அவ்வாறு நினைக்கக் கூடாது? பிகார் போல சட்டமன்றத்தில் அதிமுகவும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினால் வரும் சட்டமன்றத் தேர்தலில் சிறுபான்மை வாக்குகள் திமுகவிடம் குவிவதைத் தடுக்கும். அதில் 40 சதவிகித வாக்குகளாவது அதிமுகவுக்கு வரும்.
சட்டத்தைக் கொண்டுவந்த பாஜகவே இந்தச் சட்டத்தைத் தனது அரசியலுக்காக தான் பயன்படுத்துகிறது. சட்டத்தை எதிர்க்கும் திமுகவும் இதை அரசியலுக்காகத்தான் பயன்படுத்துகிறது. அப்படி இருக்க தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக இருக்கும், அடுத்து ஆட்சிக்கு வரக் கூடிய வாய்ப்புள்ள கட்சியான அதிமுக ஏன் அரசியல் செய்யக்கூடாது என்பதுதான் முதல்வரிடம் அன்வர் ராஜா உள்ளிட்டோர் எடுத்துவைத்துள்ள கேள்விகள்.
இதற்குப் பிறகுதான் தங்கமணி, ஜெயக்குமார் போன்றோர் டெல்லி சென்று அமித் ஷாவைச் சந்தித்தார்கள். முரளிதர் ராவ் எடப்பாடியைச் சந்தித்தார். அடுத்த சட்டமன்றத் தொடரில் இந்த விவகாரத்தில் முதல்வரின் அறிவிப்பு வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் அதிமுகவிலேயே சிலர்”என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைனுக்குப் போனது வாட்ஸ் அப்.�,