மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஒரு நீண்ட மெசேஜை அனுப்பியது.
“பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச் சாலையில் நேற்று ஜெயா டிவி சிஇஓ விவேக், தினகரன் மனைவி அனுராதா, நடராஜனின் அண்ணன்கள் ராமச்சந்திரன், பழனிவேலு உள்ளிட்டோர் சசிகலாவை தனித்தனியாக சந்தித்து பேசியிருக்கிறார்கள். இதுபற்றிய விவரம் இன்று காலை மின்னம்பலத்தில் சசிகலாவுக்கு தூதுவிடும் எடப்பாடி என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்தது
.18 மற்றும் நான்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு கிடைக்கப்போகும் தொகுதிகள் எத்தனை என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கும் நிலையில் எப்பாடுபட்டாவது ஆட்சியையும் தனது முதல்வர் பதவியையும் தக்கவைத்துக்கொள்ள எடப்பாடி போராடி வருகிறார். அதன் கடைசி கட்ட ஆயுதமாக சசிகலாவிடமே சரண் அடைவது என்ற உத்தியின் அடிப்படையில்தான் சசிகலாவுக்கு தூது அனுப்பியிருக்கிறார் எடப்பாடி.
நேற்று சிறைச்சாலையில் சசிகலாவை சந்தித்தவர்களில் எடப்பாடியின் தூதர் யார் என்பதுதான் இன்னமும் அதிமுக, அமமுக வட்டாரங்களில் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. எடப்பாடியின் தூதராக நிச்சயமாக தினகரன் மனைவி அனுராதா சென்றிருக்க மாட்டார். நடராஜன் மறைவுக்கு எட்டிக்கூடப் பார்க்காத எடப்பாடிக்காக அவரது அண்ணன்கள் சசிகலாவிடம் எதையும் பேசியிருக்க முன்வர மாட்டார்கள். அப்படியானால் எடப்பாடியின் மெசேஜை சிறைக்கு சுமந்து சென்றது யார் என்ற கேள்விக்கு பல வட்டாரங்களில் விசாரித்ததில் கிடைக்கும் பதில் விவேக் ஆக இருக்கக் கூடும் என்பதுதான்.
இப்போது ஜெயா டிவியின் சிஇஓவாக இருக்கும் விவேக் இன்னமும் அதிமுகவில் பலரோடும் நெருங்கிய தொடர்பில் தான் இருக்கிறார். அதுவும் குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுன் விவேக்கிற்கு இன்னமும் நெருங்கிய நண்பராக தான் உள்ளார். மேலும் விவேக் ஏற்கனவே சசிகலாவுடனான சந்திப்புகளில் தனக்கு கட்சியில் பதவி வேண்டும் என்று கேட்டிருந்தார். அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சசிகலா சொல்லியிருந்தார். இப்போதைக்கு விவேக் தனக்கு ஒரு அரசியல் முகவரியைத் தேடிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் விவேக் மூலமாக எடப்பாடி தரப்பு ஒரு முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. இது மட்டுமல்ல எடப்பாடி பழனிசாமியின் மனைவியும் இளவரசியின் குடும்பத்தோடு நெருங்கி பழகி வருபவர். இந்த அடிப்படையில் ஏதேனும் நடக்க வாய்ப்பிருக்கிறது என அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள் இடைத்தேர்தல் களத்தில் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.
அதேநேரம் இதைத் தாண்டிய சில நபர்கள் மூலமாகவும் எடப்பாடி சிறையில் இருக்கும் சசிகலாவிடம் சில பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கிறார். ஐஜி லெவல் முக்கிய உயரதிகாரி ஒருவர் சமீபத்தில் நீண்ட விடுப்பு எடுத்தார். அவர் விடுப்பு எடுத்ததற்குக் காரணமே சசிகலாவிடம் எடப்பாடியின் செய்தியை சொல்வதற்காகத்தான் என்கிறார்கள். ஒரு பெண் வழக்கறிஞர் மூலம் சசிகலாவை அணுகிய அந்த அதிகாரி, ‘2017 பிப்ரவரிலேந்து இப்ப வரைக்கும் எடப்பாடி உங்களப் பத்தி தவறாக எதுவும் பேசலை. ஆட்சியை காப்பாத்தணும்குற நோக்கத்துலதான் பிஜேபிக்கு பணிஞ்சு போனார். கட்சி உங்க(சசிகலா)கிட்ட இருக்கட்டும். ஆட்சி எடப்பாடிக்கிட்ட இருக்கட்டும்’ என்பதுதான் அந்த பெண் வழக்கறிஞர் சசிகலாவிடம் சொன்ன செய்தி. ஆனால் இதற்கு சசிகலா எந்த ரியாக்ஷனும் தெரிவிக்கவில்லை. இப்போதைக்கு அவர் தினகரனின் வழிகாட்டுதல்படி தெளிவாக கட்சி நடப்பதாக கருதுவதால் எடப்பாடியின் தூதுக்கு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என்கிறார்கள்.
இந்த தகவல்கள் எல்லாம் டிடிவி தினகரனுக்கு முன்கூட்டியே கிடைத்திருக்கிறது. தனக்கும் சசிகலாவுக்கும் இடையே எடப்பாடி விளையாட நினைப்பதாக கோபப்பட்டிருக்கிறார் தினகரன். அதனால்தான் சூலூர் இடைத்தேர்தல் களத்தில் அவரது பேச்சில் அத்தனை அனல் பறந்தது. வழக்கமாக சசிகலாவின் பெயரை தேர்தல் பிரச்சாரங்களில் பெரிய அளவு பயன்படுத்தாத டிடிவி தினகரன் சூலூர் தொகுதி இடைத்தேர்தலில், சசிகலாவுக்கு எடப்பாடி எப்படி துரோகம் செய்தார் என்பதை ஒவ்வொரு பாயின்ட்டிலும் விலாவாரியாக எடுத்து வைத்தார். சசிகலா தனது சகோதரரை போல எண்ணி எடப்பாடியிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தார். எடப்பாடி பழனிச்சாமியின் தோளில் கை வைத்து அவரை ஒரு சகோதரனாக நினைத்து ஆசீர்வதித்து முதல்வர் பதவியை வழங்கினார். ஆனால் சசிகலாவை சிறையில் தள்ளி அதன் பின் என்னையும் சிறையில் அடைத்து அந்த பரிசுக்கு துரோகத்தையே பதிலாக கொடுத்தார் எடப்பாடி. கொங்கு மக்கள் இந்த துரோகத்திற்கான தண்டனையை எடப்பாடிக்கு தரவேண்டும். கொங்கு மண்ணின் மீது ஒரு துரோகக் கறை விழுந்திருக்கிறது அதை நீங்கள்தான் துடைத்து எறிய வேண்டும்’ என்று பேசி வருகிறார் தினகரன்.
சசிகலாவை எடப்பாடி அணுகுவதில் தினகரனுக்கு முற்றிலும் உடன்பாடு இல்லை. இத்தனை நாள் நடந்த தன்னுடைய போராட்டங்கள் எல்லாம் இதனால் வீணாகி விடும் என்றும் தினகரன் கருதுகிறார். அதனால் தான் இடைத்தேர்தல் களத்தில் சசிகலாவுக்கு எடப்பாடி செய்த துரோகத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி பேசி வருகிறார் டிடிவி தினகரன்.
இது மட்டுமல்ல தினகரன் ஆதரவு எம்எல்ஏவான பிரபு சமீபத்தில் சசிகலா ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை ஆட்சித் தலைமை மாற்றத்தை தான் அதாவது முதல்வர் மாற்றத்தைத்தான் விரும்புகிறார் என்று மின்னம்பலத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். இதையே அவர் பொதுவெளிகளில் பேசி வருகிறார். இந்நிலையில் இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பின் எடப்பாடியை முதல்வர் பதவியில் இருந்து அகற்றிவிட்டு மீதமிருக்கும் இரண்டு வருட காலத்திற்கு இன்னொரு முதல்வரை நியமித்து தனக்கு ஆதரவான ஆட்சியாக தொடர செய்யலாம் என்பதுதான் சசிகலாவின் திட்டம். இதை வெளிப்படையாக பிரபு உடைத்துவிட்டார்.
எடப்பாடியின் நகர்வுகள் அனைத்தையும் அறிந்து கொண்ட டிடிவி தினகரன் இப்போது தேர்தல் களத்தில் தனது உணர்வை மறைமுகமாக வெளிப்படுத்தி வருகிறார். ஏற்கனவே ஓ.பன்னீர் தன்னை சந்தித்தது, பொன்.ராதாகிருஷ்ணன் தனக்கு எதிரான பலவீனமாக வேட்பாளரை நிறுத்தச் சொன்னது போன்ற விஷயங்களை வெளியில் போட்டு உடைத்திருக்கிறார் தினகரன். அதேபோல எடப்பாடியின் இந்த சமரச முயற்சியையும் இடைத்தேர்தல் களத்திலேயோ அல்லது தேர்தல் முடிந்தவுடனேயோ போட்டு உடைத்து எடப்பாடிக்கு செக் வைக்க திட்டமிட்டிருக்கிறார் தினகரன். எனவே இடைத்தேர்தல் களத்தில் பரபரப்புகள் கூடிக் கொண்டே இருக்கின்றன” என்ற மெசேஜூக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.
.
**
மேலும் படிக்க
**
.
.
[சசிகலாவுக்குத் தூதுவிட்ட எடப்பாடி பழனிசாமி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/09/26)
.
[தேனி விவகாரம்: பன்னீர் பதில்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/09/51)
.
[காங்கிரஸுக்கு தூதுவிடும் தெலங்கானா முதல்வர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/09/48)
.
[வீல் சேரில் விஜய்: கலக்கத்தில் படக்குழு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/08/77)
.
[ரஞ்சன் கோகாய்: குற்றச்சாட்டும் விசாரணை நடைமுறையும்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/09/19)
.�,”