மொபைலில் டேட்டா ஆன் செய்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. ”சபாநாயகரிடம் முதல்வர் பேசியது தொடர்பாக மின்னம்பலத்தின் 1 மணி பதிப்பில் படித்தேன். அதைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி, அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
‘எதாவது ஒரு முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்துல நாம இருக்கோம். நான் மூத்த வழக்கறிஞர்கள் சிலருடன் கலந்து பேசினேன். அவங்க ஒரு ஐடியா சொல்லி இருக்காங்க. நமக்கு எதிர்ப்பு காட்டும் எம்.எல்.ஏ-க்கள் 19 பேரையும் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் உத்தரவிடலாம். அப்படி அவர்களை தகுதி நீக்கம் செய்துவிட்டால் அவர்கள் பதவி உட்பட அனைத்தும் பறிபோய்விடும். நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் அவங்க கணக்கில் வரவே மாட்டாங்க. மொத்தம் இருக்கும் 234 தொகுதியில் ஒரு தொகுதி காலியா இருக்கு. இந்த 19 பேரையும் நீக்கிட்டா மொத்தம் 214 தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அப்போது நமக்கு 108 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தாலே போதும். அது நமக்கு இருக்கு. அப்போ யாருக்கும் நாம பயப்படத் தேவை இல்லை..’ என சொல்லி இருக்கிறார் முதல்வர்.
‘யாரு இந்த விஷயத்தை செய்ய முடியும்?’ என வேலுமணி கேட்டாராம். ‘அதையும் விசாரிச்சுட்டேன். நம்ம சட்டமன்ற கொறடாவை வைத்து 19 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யச் சொல்லி சபாநாயகருக்கு பரிந்துரை செய்யச் சொல்லலாம்..’ என பதில் சொல்லி இருக்கிறார் முதல்வர். அமைச்சர்கள் எல்லோரும் இந்த டீலிங்கிற்கு ஓகே சொல்ல… உடனடியாக அரசு கொறடா ராஜேந்திரனை தலைமைச் செயலகத்துக்கு வரவழைத்திருக்கிறார்கள். அவருக்கு இந்த தகவல் எல்லாம் சொல்லப்பட்டது. முதல்வர் பழனிசாமியே இது சம்பந்தமாக கொறடாவுடன் பேசி இருக்கிறார். சபாநாயரிடம் என்ன பரிந்துரை கடிதம் கொடுக்க வேண்டும் என்பதையும் அவருக்கு டைப்பிங் செய்யப்பட்டு கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த மீட்டிங் முடியும் போது சரியாக மணி பிற்பகல் 3. அதன் பிறகுதான் கொறடா ராஜேந்திரன் சாப்பிடப் போனார். சாப்பிட்டுவிட்டு வந்ததும், சபாநாயகர் தனபாலை சந்தித்தார். ” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
“சபாநாயகரை சந்தித்து கடிதம் கொடுத்துவிட்டார் ராஜேந்திரன். தினகரன் அணி ரியாக்ஷன் என்ன?” என்று கேட்டது ஃபேஸ்புக்.
பதிலை அடுத்த மெசேஜ்ஜில் போட்டது வாட்ஸ் அப்.
“தினகரன் தரப்பு ரியாக்ஷன் இருக்கட்டும். முதலில் சபாநாயகர் ரியாக்ஷனை சொல்கிறேன். காலையிலேயே இது சம்பந்தமாக முதல்வர் சில ஆலோசனைகளை சபாநாயகரிடமும் கேட்டிருக்கிறார். அதனால், ராஜேந்திரன் கடிதத்தை எதிர்பார்த்துதான் காத்திருந்தாராம் சபாநாயகர் தனபால். அவர் கொடுத்த கடிதத்தை வாங்கியதும், அடுத்த ஒரு மணி நேரத்தில், அந்த 19 எம்.எல்.ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார். ‘கட்சித் தாவல் தடை சட்டத்தில் உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? இதற்கு நீங்கள் ஒரு வாரத்தில் உரிய பதில் அளிக்க வேண்டும்’ எனவும் சபாநாயகர் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டிருந்தார். எடப்பாடி தரப்பில் இப்படி ஒரு அதிரடியை நிகழ்த்துவார்கள் என தினகரன் கொஞ்சமும் எதிர்பார்கவில்லை.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் புதுவையில் தங்கி இருக்கும் சூழ்நிலையில் , வெற்றிவேல் மட்டும் சென்னையில் இருக்கிறார். அவர் மட்டும் உடனே தினகரன் வீட்டுக்குப் போனார். பெங்களூரு புகழேந்தியும் அங்கே இருந்திருக்கிறார். அவர்களுடன் பேசிய தினகரன், போனில் சில சட்ட ஆலோசகர்களுடன் பேசியிருக்கிறார். அதன் பிறகு, ‘இவங்க எப்படி இப்படி ஒரு முடிவை எடுக்கலாம். நம்ம எம்.எல்.ஏக்கள் யாரும் கட்சி தாவக் கிடையாது. அதிமுகவில் நாமும் ஒரு அங்கம்தானே… இது பழிவாங்கும் நடவடிக்கை. அதனால நாம நீதிமன்றத்துக்குப் போவோம். இதை நீங்களே மீடியாவுல சொல்லிடுங்க. இங்கே வெச்சு சொல்ல வேண்டாம். உடனே நீங்க தலைமைச் செயலகத்துக்குப் புறப்படுங்க. அங்கே வெச்சு மீடியாகிட்ட பேசுங்க…’ என சொல்லி இருக்கிறார் தினகரன்.
உடனே வெற்றிவேல், அடையாறில் இருந்து புறப்பட்டு தலைமைச் செயலகம் போனார். அங்கே வைத்துதான், கொறடா ராஜேந்திரனையும், எடப்பாடி அரசையும் ஒரு பிடி பிடித்தார். இதற்குள் தகுதி நீக்க நடவடிக்கை பற்றிய தகவல் புதுவையில் இருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கும் தெரிய வர… அவர்கள் பதற்றமாகிவிட்டனர். என்ன செய்வதென தெரியாமல், ஆளாளுக்கு தங்களுக்கு தெரிந்தவர்களுடன் போனில் பேசி இருக்கிறார்கள். தினகரனின் உதவியாளர் ஜனாவுக்கும் போன் போட்டு, ‘நாங்க நான்கு வருஷம் எம்.எல்.ஏ.வாக இருக்கணும். அதுக்கு எதுவும் ஆபத்துன்னா நாங்க அமைதியாக இருக்க மாட்டோம்…’ என சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார்களாம். புதுவையில் உள்ள எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்தும் வேலையை முன்னின்று செய்து கொண்டிருப்பவர், தங்க தமிழ்ச்செல்வன் தான்!”
என்று முடிந்த மெசேஜ்க்கு ஒரு ஸ்மைலி போட்டுவிட்டு, தொடர்ந்து அடுத்த மெசேஜை ஸ்டேட்டஸில் போட்டது பேஸ்புக்.
’’முதல்வர் இன்று காலையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோரோடு ஆலோசனை நடத்திவிட்டு, பின் சபாநாயகர், கொறடா சந்திப்பு என்று பிசியாக இருந்த நிலையில்தான் இன்று நண்பகல் பிஜேபியின் ஹெச்.ராஜா கோட்டைக்கு சென்றார். அங்கே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோரை சந்தித்துப் பேசிவிட்டு வந்திருக்கிறார். ஹெச்.ராஜா மத்திய ரயில்வே பயணிகள் வாரியத் தலைவராக இருக்கிறார். அது ரீதியாக சந்தித்ததாக தகவல் இல்லை. ராஜாவே தனது பேஸ்புக்கில், முதல்வர் -துணை முதல்வரை சந்தித்து வாழ்த்தியதாக குறிப்பிட்டிருக்கிறார். எதற்காக வாழ்த்தினார் என்ற விபரம் இல்லை.
ஏற்கனவே மத்திய அமைச்சராக இருந்த வெங்கையா நாயுடு கோட்டைக்கு வந்து ஆய்வுக் கூட்டம் நடத்தியதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் ராஜா கோட்டைக்கு வந்துபோனது அரசியல் ரீதியான சந்திப்புதான் என்றும், அதன் பிறகே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பு மிரட்டலுக்கு ஆளானார்கள் என்றும் அரசியல் வட்டாரத்தில் விமர்சனங்கள் வருகின்றன’’ என்ற மெசேஜை ஸ்டேட்டஸ் ஆக போட்டுவிட்டு சைன் அவுட் ஆனது பேஸ்புக்.�,