டிஜிட்டல் திண்ணை: கடைசி நேர ஆயுதம் – மாசெக்கள் கூட்டத்தில் ஸ்டாலின்

Published On:

| By Balaji

மொபைல் டேட்டாவை ஆன் செய்தோம். லொக்கேஷன் தேனாம்பேட்டை காட்டியது. வாட்ஸ் அப் மெசேஜில், ‘’திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அறிவாலயத்தில் கலைஞர் அரங்கத்தில் இன்று (மார்ச் 11) காலை நடந்தது. இந்தக் கூட்டத்தின் படங்களை எடுத்துக் கொள்ளுங்கள். செய்தி கொஞ்ச நேரத்தில் வரும்’ என்ற குறிப்போடு படங்கள் வந்தன.

பத்து நிமிடங்களில் முழு மெசேஜும் வந்தது. “கூட்டத்தில் மாசெக்கள் பேசுவதற்கு முன்பாக சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதன்படி ஏற்கனவே அமைக்கப்பட்ட நாடாளுமன்ற பொறுப்பாளர்கள் பதவி காலாவதியாகிவிட்டது, இனி அந்தந்த மாவட்டச் செயலாளர்களே பொறுப்பாளர்கள் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், 12 பூத்துக்கு ஒரு நபர் மாவட்ட , ஒன்றிய நிர்வாகிகளை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் நியமித்துக் கொள்ள வேண்டும். தேர்தல் நாள் முடிந்து வாக்கு எண்ணும் வரை அவர்கள் கண்காணிப்புடன் செயல்பட வேண்டுமென்றும் சொல்லியிருக்கிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ,வுமான எ.வ.வேலு மைக் பிடித்தவர், ’பாமக வேட்பாளர் போட்டியிடும் தொகுதியில் திமுக வேட்பாளராக வன்னியர் சமூகத்தை சேர்ந்தவரைத்தான் நிறுத்த வேண்டும்’ என்றார்.ஈரோடு மாவட்டச் செயலாளர் சு.முத்துசாமி பேசும்போது, ‘ஈரோடு தொகுதியில் மதிமுக கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதுதான் சரியாக இருக்கும். நாங்களே அவரிடம் நேரடியாகச் சென்று பேசி சம்மதிக்க வைக்கிறோம்’ என்று கூறியிருக்கிறார்.

முன்னாள் அமைச்சரும் தொகுதிப் பங்கீட்டுக் குழு உறுப்பினருமான நேரு பேசும்போது, ‘கூட்டணி பேசி முடிச்சதுல நானும் ஒருவர். ஆனா என் தொகுதியே கூட்டணிக்குப் போகுது. அதுக்காக வருத்தப்பட முடியுமா? 40 தொகுதியிலயும் தளபதிதான் வேட்பாளர்னு நினைச்சு வேலை பாக்கணும்’ என்றார்.

கூட்டம் ஆரம்பிக்கும் முன்பே துரைமுருகன் சில மாவட்டச் செயலாளர்களை தனித்தனியே கூப்பிட்டுப் பேசிக் கொண்டிருந்தார். ஒரு சில எம்.எல்.ஏ.க்களையும் அழைத்து தொகுதி எப்படி இருக்கு என கேட்டுக் கொண்டிருந்தார். ‘அண்ணே… போன சட்டமன்றத் தேர்தல்லயே நாம துட்டுக்கொடுத்திருந்தோம்னா இந்நேரம் ஆட்சியில இருந்திருக்கலாம்ணே…. துட்டு கொடுக்காமயே 90 தொகுதி ஜெயிச்சோம். அதனால இப்பவாச்சும் செலவு செய்யணும்ணே’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

மாவட்டச் செயலாளர்கள் பேசி முடித்த பிறகு துரைமுருகன் பேசும்போது, ‘என்கிட்ட நீங்க வந்து சொன்ன சில முக்கியமான விஷயங்களை பொருளாளர்ங்குற முறையில தலைவர்கிட்ட சொல்லிட்டேன். இந்த கட்சியில நாங்கள்லாம் ஒரு நாளைக்கு நாலு டீ குடிச்சுட்டு தேர்தல் வேலை பாத்திருக்கோம். உங்களை அப்படி பாக்க சொல்லலை. தளபதி தலைவராகி சந்திக்கிற முதல் பொதுத் தேர்தல் இது. நமக்கு கௌரவப் பிரச்னை. அதனால எல்லாரும் எல்லா வருத்தங்களையும் மறந்து வேலை பாக்கணும். 21 தொகுதியிலயும் இடைத்தேர்தல் நடத்தினா நாம ஜெயிச்சு ஆட்சி அமைச்சுடுவோம்னு ஏதேதோ தந்திரம் பண்ணுகிறார்கள். கடந்த தேர்தலைப் போல் விட்டுடாதீங்க, தீவிரமாக உழைத்து வெற்றிபெறவைப்போம் என்று அவரவர் குலதெய்வம் மீது சத்தியம் செய்து சபதம் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று கண்கலங்கியபடி பேசியுள்ளார் .

கடைசியாக ஸ்டாலின் பேசியிருக்கிறார். ‘நாம இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவேண்டும் என்பதுதான் என் ஆசையும் விருப்பமும்கூட. நேர்காணலில் கூட்டணிக் கட்சிக்குத் தொகுதி போகிறது என்று சொன்னபோது நமது நிர்வாகிகளின் முகத்தில் நிலவிய சோகத்தை நான் உணர்ந்தேன். ஆனால் இது காலத்தின் சூழல். நான் ஒருவேளை தனித்துப் போட்டி என்ற முடிவெடுத்தால், ‘தலைவர் கலைஞர் இருந்திருந்தா இப்படி தனியாகப் போட்டியிடுவாரா, அனைவரையும் அரவணைத்து மெகா கூட்டணி அமைத்திருப்பார்’ என்றும் சிலர் பேசுவார்கள்.

21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்காமல், 18 தொகுதிகளுக்கு மாத்திரம் இடைத்தேர்தல் நடத்துவதில் சில சதிகள் இருக்கின்றன. அதையெல்லாம் நாம் நீதிமன்றத்தில் முறியடிப்போம். தேர்தல் களத்தில் வெற்றியைத் தேடித் தரப் போவது நீங்கள்தான். சிலர் என்னிடமும் சில விஷயங்களை சொல்லியிருக்கிறார்கள். நானும் உணர்ந்துள்ளேன். கடைசி நேரத்தில் எல்லா ஆயுதங்களும் பயன்படுத்தப்படும். இதுக்கு மேல வெளிப்படையா நானும் பேச மாட்டேன். நீங்களும் பேசாதீங்க’ என்று கூறியிருக்கிறார் ஸ்டாலின். கடைசி நேரத்தில் எல்லா ஆயுதங்களும் என்று ஸ்டாலின் சொன்னது பணத்தைத்தான் என்பதே மாவட்டச் செயலாளர்களின் கருத்து.

‘அதிமுக அள்ளி இறைத்துக்கொண்டிருக்கும்போது திமுக கொஞ்சமாவது தன் இறுக்கத்தைத் தளர்த்தினால்தான் களத்தில் வெற்றி கிடைக்கும். இதைத் தலைவர் புரிஞ்சுக்கிட்ட மாதிரிதான் இருக்கு அவர் பேச்சு’’ என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு லாக் அவுட் ஆனது வாட்ஸ் அப்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share