டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்களா, தொண்டர்களா? முடிவுக்கு வந்த ஸ்டாலின்

Published On:

| By Balaji

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்து ஒரு மெசேஜை டைப் செய்தது.

“மக்களவைத் தேர்தல் முடிந்து மத்தியில் அடுத்த ஆட்சி அமைக்க மோடி தயாராகிவிட்ட நிலையில் மாநில இடைத்தேர்தல்களில் மயிரிழையில் தப்பிப் பிழைத்திருக்கும் எடப்பாடி 9 தொகுதிகள் ஜெயித்ததால் ஆட்சியை தக்க வைக்கத் தேவையான பெரும்பான்மையை பெற்றுவிட்டார். ஆனாலும் எப்போது என்ன நடக்குமோ என்ற பதைபதைப்பு அவரை விட்டுப் போகவில்லை.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்து சுமார் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு அதாவது ஏப்ரல் 10 ஆம் தேதிக்குப் பிறகு, இன்றுதான் தலைமைச் செயலகத்திலுள்ள தனது அறைக்கு வந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ‘இடைத்தேர்தல் முடிந்து ரிசல்ட் எப்படி இருக்கப் போகுதோ… திரும்பவும் முதல்வர் அறைக்கு வருவார், வர மாட்டார்’ என கோட்டையில் பட்டிமண்டபம் நடக்காத குறைதான். பல அதிகாரிகள் இடைத்தேர்தலில் எடப்பாடி தோற்றுவிடுவார். மீண்டும் முதல்வராக தலைமைச் செயலகம் வர மாட்டார் என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் இன்று மீண்டும் எடப்பாடி தலைமைச் செயலகத்துக்கு வந்து தன் முதல்வர் இருக்கையில் அமர்ந்தார். ஆனால், அப்போது பெரிய அளவில் உற்சாகம் அவரிடம் இல்லை. ஏதோ மறுபிறவி எடுத்து வந்ததைப் போல கலவையான உணர்வுகளைக் காட்டியபடி இருந்தது அவர் முகம். ஏற்கனவே தேர்தல் முடிந்த பிறகு வழக்கமாக சந்திக்கும் அதிகாரிகளைக்கூட முதல்வர் சந்திக்கவில்லை என்பதை டிஜிட்டல் திண்ணையில் சுட்டிக் காட்டியிருந்தோம்.

இதற்கான காரணம் தொடர்ந்து எடப்பாடிக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் தகவல்கள்தான். அதாவது திமுக தரப்பில் இடைத்தேர்தல் முடிவுகளில் மெஜாரிட்டி கிடைத்தால் ஆட்சி அமைப்பது என்று நம்பிக்கையோடு இருந்தார்கள். ஆனால் 13-9 என ரிசல்ட் அமைந்துவிட்டதால் திமுக தரப்பில் ஒரு விதமான இறுக்கம் நிலவுகிறது. கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வர நான் தயாரில்லை என்று தேர்தல் முடிவுகள் வருவதற்கு சில நாட்கள் முன்பு இப்தார் விருந்து நிகழ்வில் கலந்துகொண்ட ஸ்டாலின் பேசியிருந்தார். ஆனால் தேர்தல் முடிவுக்குப் பின் தப்பிப் பிழைத்த எடப்பாடி ஆட்சியை எப்படியாவது கவிழ்த்துவிட வேண்டும் என்று திமுக முழு முயற்சி எடுத்து வருவதாக எடப்பாடிக்கு ரிப்போர்ட் கிடைத்திருக்கிறது. அதனால்தான் அவர் இன்று தலைமைச் செயலகத்துக்கு வந்தபோது கூட பெரிய அளவு உற்சாகமின்றி காணப்பட்டார். அதேநேரம் திமுகவின் முயற்சிகளுக்கு பதிலாக தன் ஆட்சியைத் தக்க வைப்பதற்கான ஏற்பாடுகளில் இறங்காமலும் இல்லை முதல்வர்.

இப்படி திமுக, அதிமுக இரு தரப்புமே பரஸ்பரம் எதிரெதிர் முகாம்களில் இருந்து எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சிப்பது தொடர்ந்துகொண்டிருக்கிறது. அதுவும் இரு தரப்பிலும் இருக்கும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களைக் குறிவைத்தே இந்த வலை வீசப்பட்டு வருவதாகச் சொல்கிறார்கள். திமுக தரப்பிலிருந்து அதிமுகவின் சில எம்.எல்.ஏ.க்களை இழுப்பதற்கான வேலைகளில் ஓஎம்ஜி தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

இந்த மாதிரி எம்.எல்.ஏ. க்களுக்கு வலை வீசும் விவகாரங்களில் தனக்கு விருப்பமில்லை என்று ஸ்டாலின் தெளிவாகத் தெரிவித்துவிட்டார். அவருக்கு கிடைத்த தகவல்களின்படி திமுகவில் இப்போது இருக்கும் எம்.எல்.ஏ.க்களில் 50 பேருக்கு மேல் உடனடியாக தேர்தல் நடைபெறுவதை விரும்பவில்லை. அதற்குக் காரணம் ஏற்கனவே 2016 தேர்தலுக்கு செய்த செலவில் இருந்து இன்னும் அவர்கள் மீளவில்லை. மேலும் தேர்தல் வந்தால் தங்களுக்கு மறுபடியும் சீட் கிடைக்குமா என்ற தயக்கமும் அவர்களுக்கு இருக்கிறது. எனவே 50 பேருக்கு மேல் இப்போது உடனடி தேர்தலில் விருப்பமில்லாமல் இருக்கிறார்கள். எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் இருக்கும் இந்த எண்ணத்தைக் கருத்தில் கொண்டுதான் , ஆட்சிக் கலைப்பில் அதிக ஈடுபாடில்லாமல் இருந்திருக்கிறார் ஸ்டாலின்.

ஆனால் இந்த 50க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களை விட லட்சக்கணக்கான தொண்டர்கள், எடப்பாடி ஆட்சியை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர ஸ்டாலின் தீவிரமாக களமிறங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றியைப் போல விரைவில் சட்டமன்றத் தேர்தலை நடத்தி அதிலும் திமுகவை வெற்றிபெற வைக்க ஸ்டாலினால் முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்தத் தகவல் பலவேறு மாவட்டச் செயலாளர்கள், மற்றும் ஓஎம்ஜி நிர்வாகிகள் மூலம் துல்லியமாக ஸ்டாலினுக்கு தெரியப்படுத்தப்பட்டது. அதன் பிறகே அவர் எடப்பாடி ஆட்சியைக் கலைப்பதற்கான வியூகங்களுக்கு செயல் வடிவம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்.

அதன் அடிப்படையிலேயே சில அதிமுக எம்.எல்.ஏ.க்களை ஒஎம்ஜி தரப்பில் இருந்து தொடர்புகொண்டு பேசிவருகிறார்கள். ஓஎம்ஜி தரப்பில் இருந்து தொடர்புகொள்ளும்போது திமுக ஆட்சிக்கு வந்ததும் வாரியம் கொடுக்கிறோம் என்று சிலரிடம் பேசியிருக்கிறார்கள். தங்களது எம்.எல்.ஏ.க்களை தக்க வைத்துக்கொள்ள அதிமுக பெரிய அளவு பணத்தை கொடுத்து வரும் நிலையில் திமுகவின் இந்த வாரிய வாக்குறுதி அவர்களைக் கவரவில்லை. தற்போது ஆளுங்கட்சி மேலிடம் அவர்களுக்கு கொடுத்து வரும் பணத்தை விட அதிக அளவு பணத்தைக் கொடுத்தால்தான் அவர்களை இழுக்க முடியும் என்பதை ஓஎம்ஜியாவது ஸ்டாலினிடம் தெரியப்படுத்த வேண்டும் என்கிறார்கள் சில திமுக மாவட்டச் செயலாளர்களே.

விரைவில் சட்டமன்றம் கூட இருக்கும் நிலையில் திமுக, அதிமுக என இரு தரப்புமே ஒருவருக்கொருவர் அதிர்ச்சி வைத்தியம் அளிக்க தீவிரமாக களமிறங்கியிருக்கின்றன என்பதே இப்போதைய நம்பர் கேம் நிலவரம்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப். அதை ஷேர் செய்தது ஃபேஸ்புக்.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[அமமுக தோல்விக்கான காரணங்கள்: அறிக்கை அனுப்பிய நிர்வாகிகள்!](https://minnambalam.com/k/2019/05/27/15)

**

.

**

[தலித்திய தனிமைப்படுதல் என்னும் அபாயம்!](https://minnambalam.com/k/2019/05/27/17)

**

.

.

**

[ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?](https://minnambalam.com/k/2019/05/26/55)

**

.

**

[அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!](https://minnambalam.com/k/2019/05/26/52)

**

.

.

**

[வரப் போகும் நாட்கள் கடினமானவை: சோனியா](https://minnambalam.com/k/2019/05/27/18)

**

.

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share