டிஜிட்டல் திண்ணை: எம்ஜிஆர் பாடலை நிறுத்தச் சொன்ன எடப்பாடி

public

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. தயாராக வைத்திருந்த ஸ்டேட்டஸுக்குப் போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக். “எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் பன்னீரும் திடீரென இன்று அதிமுக சார்பில் நடந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். அதன் பின்னணியை மின்னம்பலத்தின் மதியம் 1 மணி பதிப்பில் படித்தேன். எடப்பாடியும் பன்னீரும் உண்ணாவிரதத்துக்கு வரும் தகவல் அமைச்சர் ஜெயகுமாரைத் தவிர யாருக்கும் சொல்லப்படவில்லை. உண்ணாவிரதப் பந்தலுக்கு அவர்கள் வந்த பிறகுதான் கூடியிருந்த கூட்டத்துக்கே விஷயம் தெரியும்.

எடப்பாடி பழனிசாமி வந்ததும் அவருக்கு அருகே சீட் பிடித்து அமர்ந்துகொண்டார் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா. அரை மணிநேரம் வரைதான் அந்த இடம் அவருக்குக் கிடைத்தது. மதுசூதனன் மேடைக்கு வந்ததும் கோகுல இந்திரா ஒரு சீட் மாறி உட்கார்ந்தார். பன்னீர் நீண்ட நேரம் மேடையில் உட்காரவே இல்லை. நின்றபடியே கூட்டத்தை அமைதிப்படுத்துவதும், மீடியாவுக்கு சேர் கொண்டுவந்து போடச் சொல்லி உத்தரவு போடுவதுமாக இங்கேயும் அங்கேயும் நடந்துகொண்டே இருந்தார். அதன் பிறகு அவர் உட்கார வந்தபோது, மதுசூதனன் அந்த இடத்தை விட்டு ஒரு சீட் தள்ளி உட்கார்ந்தார். எடப்பாடிக்கு ஒரு பக்கம் பன்னீரும் இன்னொரு பக்கத்தில் அமைச்சர் ஜெயகுமாரும் உட்கார்ந்திருந்தார்கள்.

அமைச்சர் ஜெயகுமார் கையில் ஆப்பிள் போன் இருந்தது. அதில் டிவியில் வரும் லைவ் செய்திகளை எடப்பாடிக்குக் காட்டி ஏதோ சொன்னார். எடப்பாடியும் போனை வாங்கிப் பார்த்துக்கொண்டே இருந்தார். இப்படியாக ஒவ்வொரு சேனலாக மாற்றி மாற்றி ஜெயகுமார் காட்ட, எல்லாவற்றையும் வாங்கிப் பார்த்தார் எடப்பாடி. மேடைக்கு நேர் எதிரே தடுப்புகள் வைக்கப்பட்டு மீடியாவுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. மீடியா நிற்கும் இடத்துக்கும் மேடைக்கும் இடையே கட்சிக்காரர்கள் நடந்துபோகும் அளவுக்கு வழி விடப்பட்டிருந்தது. அந்த வழியாக நடந்துவந்து மேடையில் இருப்பவர்களுக்கு வணக்கம் சொல்லிவிட்டுப் போனார்கள் தொண்டர்கள். போனவர்கள் அப்படியே போய்விட்டார்கள். பந்தலில், உண்ணாவிரதத்தில் உட்காரவில்லை.

அதேபோல மேடையில் இருப்பவர்கள் பார்க்கும் தூரத்தில், மிகப் பெரிய எல்.ஈ.டி. ஸ்கிரீன் வைக்கப்பட்டிருந்தது. அதில் மேடையில் இருப்பவர்களை நேரலையில் காட்டினார்கள். சில சமயம் ஜெயலலிதாவின் உரை ஒளிபரப்பப்பட்டது. திடீரென, ‘நீங்க நல்லா இருக்கோணும்… இந்த நாடு முன்னேற… இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற..’ என்ற எம்ஜிஆர் பாடல் வீடியோவாக அதில் போடப்பட்டது. உண்ணாவிரதப் பந்தலில் இருந்தவர்கள் கைதட்டி விசிலடித்தார்கள். ஆனால் எடப்பாடி முகம் ஏனோ மாறியது. ‘உண்ணாவிரதத்துல எதுக்கு சினிமா பாட்டு? அதை நிறுத்தச் சொல்லுங்க. சினிமா பாட்டு எதுவும் போட வேண்டாம்..’ என ஜெயகுமாரிடம் சொன்னார் எடப்பாடி. உடனே தி.நகர் சத்யாவை அருகே கூப்பிட்டு, ‘இனி சினிமா பாட்டு போட வேண்டாம். இப்போ போய்ட்டு இருக்கிற பாட்டை உடனே நிறுத்த சொல்லுங்க…’ என ஜெயகுமார் சொல்ல… ஆபரேட்டரை நோக்கி ஓடினார் தி.நகர் சத்யா. எம்ஜிஆர் பாடல் நிறுத்தப்பட்டது. ஜெயலலிதாவின் உரை மறுபடியும் ஒளிபரப்பானது.

எடப்பாடியும் பன்னீரும் வரிசையில் வந்து வணக்கம் சொல்பவர்களுக்கு வணக்கம் சொன்னபடியே அமர்ந்திருந்தனர். மாற்றுத் திறனாளி ஒருவர் அந்த வரிசையில் வந்தபோது மட்டும், எடப்பாடி எழுந்து வந்து அவருக்கு கைகொடுத்துவிட்டுப் போய் உட்கார்ந்தார். மற்றபடி மேடையில் இருந்த யாருமே மாலை 5 மணி வரை எழுந்திருக்கவே இல்லை.

உண்ணாவிரத மேடையில் இருந்த கோகுல இந்திரா வெள்ளை நிறப் புடவையில் கறுப்பு சிவப்பு வெள்ளை பார்டர் வைத்துக் கட்டியிருந்தார். ஜெயலலிதா ஆரம்ப காலத்தில் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்தபோது எப்படி வந்தாரோ அந்த ஸ்டைலாம் அது. மேடைக்கு கீழே இருந்த கோகுல இந்திரா ஆதரவாளர்கள், ‘அக்காவை பார்க்கிறதுக்கு சின்ன வயசுல அம்மாவைப் பார்த்த மாதிரியே இருக்கு..’ என எல்லோருக்கும் கேட்கும்படி புகழ்ந்தார்கள்.

‘கூட்டமே இல்லைன்னு சொல்றாங்க…’ என பன்னீர் எடப்பாடியிடம் சொன்னாராம். அதற்கு எடப்பாடி, ‘எப்படிங்க கூட்டம் வரும்? தமிழ்நாடு முழுக்க எல்லா மாவட்டத்துலயும் உண்ணாவிரதம் நடக்குது. சென்னைக்காரங்க மட்டும்தான் இங்கே இருக்காங்க. அதிலும் நிறைய பேரு வெளியூர் உண்ணாவிரதத்துக்குப் போயிட்டாங்க. சொல்றவங்க சொல்லிட்டுதான் இருப்பாங்க… விடுங்க’ என்று சொல்லியிருக்கிறார். இதில், சிலருக்கு ஷுகர் இருந்ததாம். ஆனாலும், எடப்பாடியும் பன்னீரும் மேடையில் இருந்ததால் யாரும் மேடையை விட்டு எழுந்திருக்கவில்லை. சிலர் கையில் வைத்திருந்த சாக்லெட்டை மட்டும் வாயில் போட்டுக்கொண்டனர். உண்ணாவிரதத்தை முடித்தபோது எல்லோரும் மேடையில் வரிசையாக நின்று குரூப் போட்டோவும் எடுத்துக்கொண்டார்கள். போட்டோ எடுத்து முடித்ததும், பூசணிக்காய் ஒன்றில் கற்பூரம் ஏற்றி எல்லோரையும் நோக்கி திருஷ்டி சுற்றினார்கள். பிறகுதான் பழரசம் கொடுத்து உண்ணாவிரத்தை முடித்தனர்.

‘நீங்க வருவீங்கன்னு முன்கூட்டியே தெரிஞ்சிருந்தா, மேடையில் ஏசி போட்டிருக்கலாம். திடீர்னு வந்ததால் எதுவும் செய்ய முடியலை..’ என ஜெயகுமார் சொன்னாராம். ‘ஏசியிலேயவா பொறந்து வளர்ந்தோம். அதெல்லாம் வெச்சிருந்தா மக்கள்கிட்ட இருந்து அன்னியப்பட்டுப் போயிருப்போம்’ என்று சொல்லிவிட்டு வியர்வை சொட்ட சொட்டத்தான் புறப்பட்டார் எடப்பாடி” என்று முடிந்தது ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்டு ஷேர் செய்துவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *