நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் வரும் டிசம்பர் 11ஆம் தேதி தொடங்கி ஜனவரி 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தின் மழைக் காலக் கூட்டத் தொடர் கடந்த ஜூலை 18ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வரை நடைபெற்றது. கூட்டத் தொடரின்போது மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் வாக்கெடுப்பிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விவாதத்தின்போது மத்திய அரசை ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். கூட்டத் தொடரில் மக்களவையில் 21 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதற்கிடையே நாடாளுமன்ற கூட்டத் தொடர் குறித்து ஆலோசிப்பதற்காக, பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் கூட்டம், உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்றிரவு நடைபெற்றது. இந்த நிலையில் வரும் டிசம்பர் 11ஆம் தேதி முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை குளிர்காலக் கூட்டத் தொடரை கூட்ட அமைச்சரவைக் குழு குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளதாக டெல்லி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. . கூட்டத் தொடர் 20 நாட்கள் நடைபெறவுள்ளது.
வழக்கமாக நவம்பர் மாதத்தில்தான் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கும். ஆனால் இரண்டாவது ஆண்டாக தற்போது டிசம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில், தலைவர்கள் அங்கு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், கூட்டத் தொடர் டிசம்பருக்கு தள்ளிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. டிசம்பர் 11ஆம் தேதிதான் 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளும் வெளியிடப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டத் தொடரில் ரபேல் விவகாரம், பணமதிப்பழிப்பு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகிவருகின்றன.�,