மேரி மீக்கர் நிறுவனம், இந்த ஆண்டு இந்தியாவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட இணையதளச் செயலிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலின்மூலம் ஃபேஸ்புக் செயலியை விட ட்ரூ காலர் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. இந்தப் பட்டியலில் வாட்ஸ்அப் முதலிடத்தில் உள்ளது. இந்தச் செயலியை மாதத்துக்கு 20 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். இந்தச் செயலி மொபைல் எண்ணை வைத்து இயக்கப்படுகிறது.
இரண்டாவதாக இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது ஃபேஸ்புக் மெசெஞ்சர் ஆகும். இது ஃபேஸ்புக்கின் ஓர் அங்கமாகும். ஃபேஸ்புக் கணக்கு மூலம் மற்றவர்களுக்கு உள்பெட்டியில் தகவல் பரிமாற்றம் செய்ய இந்தச் செயலி பயன்படுகிறது. மூன்றாவது இடத்தில் ‘ஷேர் இட்’ செயலி இடம்பிடித்துள்ளது. ‘ஷேர் இட்’ செயலி ஒரு மொபைலிலிருந்து இன்னொரு மொபைலுக்குக் கோப்புகளை வேகமாகப் பரிமாற்றம் செய்யப்பயன்படுகிறது. இது சீனாவைச் சேர்ந்தவர்களால் உருவாக்கப்பட்டது.
நான்காவது இடத்தில் ‘ட்ரூ காலர்’ செயலி உள்ளது. இந்தச் செயலி புதிய எண்களிலிருந்து அழைப்பு வரும்போது யார் அழைக்கிறார்கள் என்று அறிய உதவுகிறது. இந்தச் செயலி கடந்த ஆண்டு 11ஆவது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு ஏழு இடங்கள் முன்னேறி நான்காவது இடம்பிடித்துள்ளது. ஐந்தாவது இடத்தில் பிரபலமான சமூக வலைதளமான ஃபேஸ்புக் உள்ளது. ஆறாவது இடத்தில் யூ.சி. பிரவுசர் செயலி உள்ளது. கொரியாவைச் சேர்ந்த எம்.எக்ஸ். பிளேயர் செயலி ஏழாவது இடத்தில் உள்ளது. இது ஆண்ட்ராய்டு காணொளி செயலியாகும். எட்டாவது இடத்தில் ‘ஹாட் ஸ்டார்’, ஒன்பதாவது இடத்தில் ஜியோ டிவி. பத்தாவது இடத்தில் ‘ஃபேஸ்புக் லைட்’ ஆகிய செயலிகள் உள்ளன. முதல் பத்து இடங்களில் மிக பிரபலமான ட்விட்டர் செயலி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
�,