“ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2018இல் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவைச் சந்தித்ததாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்” என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் மர்மம் தொடர்பான விசாரணைக்காக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மக்களவைத் துணை சபாநாயகரும் அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரை நேற்று (ஜனவரி 22) ஆஜரானார். காலை 10.30 மணிக்கு ஆஜரான அவரிடம் மதியம் 2 மணி வரை விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடைபெற்றது. அப்போலோவில் ஜெயலலிதாவுக்கு எவ்வாறான சிகிச்சை அளிக்கப்பட்டது, வெளிநாட்டு சிகிச்சை உள்ளிட்ட கேள்விகள் அவரிடம் எழுப்பப்பட்டுள்ளன. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தம்பிதுரை, “பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு உரிய பதிலை அளித்துள்ளேன். ஆணையத்தில் நடந்ததை வெளியில் கூறுவது சரியாக இருக்காது” என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், **“அப்போலோவில் இருந்தது குறித்தும், கடந்த கால அரசியல் வரலாறுகள் சிலவற்றையும் தம்பிதுரை குறிப்பிட்டுச் சொன்னார். ஜெயலலிதாவை நலம் விசாரிக்க ராகுல் காந்தி, வெங்கைய நாயுடு ஆகியோர் வந்தபோது அவர்களை வரவேற்றுவிட்டு தான் நின்றுகொண்டதாகவும், அவர்கள் ஜெயலலிதா அறை வரையிலும் சென்றனர் என்பதையும் தம்பிதுரை தெரிவித்தார்”** என்று கூறினார்.
அப்போலோவில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக ஐயப்பாடு எதுவும் இல்லை என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், சுகாதாரத் துறை செயலாளரும், அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகன ராவும் கூறியுள்ளனர். இதுகுறித்து உங்களுடைய கருத்து என்ன என்று தம்பிதுரையிடம் கேட்டபோது, இது டெக்னிக்கலான விஷயம், நான் கருத்து கூற விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டார். பல கேள்விகளுக்கு அவர் கருத்து கூற விரும்பவில்லை என்றுதான் கூறினார் என்ற ராஜா செந்தூர் பாண்டியன், ரிச்சர்ட் பீலேவுடனான தம்பிதுரையின் சந்திப்பு குறித்தும் கேள்வி எழுப்பியதாகத் தெரிவித்தார்.
ரிச்சர்ட் பீலேவைப் பற்றி கேட்டபோது, **“அவர் எனக்கு அப்போலோவில்தான் அறிமுகம், அவரை சரியாகத் தெரியாது என்ற தொனியில் தம்பிதுரை பதில் கூறினார். அப்போது, 29.03.2018 அன்று லண்டன் சென்று நீங்கள் ரிச்சர்ட் பீலேவைப் பார்த்தீர்களா என்றேன். அவர் சிறிது யோசித்து, ஆம் பார்த்தேன் என்றார். எதற்காகச் சென்று பார்த்தீர்கள் என்றதற்கு, எனக்கு உடல்நிலை சரியில்லை, அதனால் அவரைச் சென்று பார்த்தேன், அவர் வேறொரு மருத்துவரைப் பரிந்துரைத்தார் என்று கூறினார். ரிச்சர்ட் பீலே அப்போலோவுக்கு வந்து சென்ற பின்பு, 29.03.2018 அன்று வரை அவரைச் சந்திக்கவில்லை என்றும், தான் பார்த்தபோது ஜெயலலிதா மறைவுக்கு வருத்தம் தெரிவிப்பதாக ரிச்சர்ட் பீலே கூறினார் என்றும் தம்பிதுரை தெரிவித்தார்”** என்று ராஜா செந்தூர் பாண்டியன் கூறினார்.
மேலும், 12.09.2017 பொதுக் குழு கூடும்வரை தான் சசிகலாவுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்திருந்ததாகவும், குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக சிறையில் சசிகலாவைச் சந்தித்ததாகவும் அதுகுறித்து இங்கு கருத்து கூற விரும்பவில்லை என்றும் தம்பிதுரை குறுக்கு விசாரணையில் தெரிவித்தார். சட்டமன்றத் தேர்தலின்போதே ஜெயலலிதா மிகவும் கஷ்டப்பட்டார், அவருக்கு உடல் உபாதைகள் இருந்தது என்றும் தம்பிதுரை சாட்சியம் அளித்ததாக ராஜா செந்தூர் பாண்டியன் பேட்டியளித்தார்.�,