இந்தியாவுக்கு எதிரான தனது ஃபேர்வெல் டெஸ்டில் சிறப்பாக ஆடிய அலெஸ்டர் குக், தரவரிசையில் 10ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முன்னணியில் இருக்கும் அலெஸ்டர் குக், மோசமான ஃபார்ம் காரணமாக சமீப காலமாக விமர்சனங்களுக்குள்ளாகி வந்தார். இந்தியத் தொடரில் முதல் 4 டெஸ்ட் போட்டிகளில் முறையே 13, 0, 21, 29, 17, 17, 12 சொற்ப ரன்களை மட்டுமே எடுத்தார். இதனையடுத்து கடைசி டெஸ்டுடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இவரது ஃபேர்வெல் டெஸ்டில் இங்கிலாந்து 118 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் குக் 218 ரன்கள் சேர்த்து, வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அத்துடன் அறிமுக டெஸ்ட் மற்றும் கடைசி டெஸ்டில் சதமடித்த வீரர் என்ற அரிய சாதனையையும் படைத்தார். இதன் மூலம் தற்போது ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 10 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 12400 ரன்கள் எடுத்திருந்த குமார் சங்கக்காராவை பின்னுக்குத் தள்ளி குக் 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்த வரிசையில் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், ஜாக்ஸ் காலிஸ், ராகுல் டிராவிட் ஆகியோர் முறையே முதல் நான்கு இடங்களில் உள்ளனர்.
கடைசி டெஸ்ட் போட்டியில் பதிவான 4 சதங்கள் உட்பட இந்தத் தொடரில் மொத்தம் 8 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. இந்தப் போட்டியில் இங்கிலாந்து சார்பாக சதமடித்த மற்றொரு வீரர் ஜோ ரூட் ஒரு இடம் முன்னேறி 4ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். கடைசி இன்னிங்ஸில் டக் அவுட் ஆன விராட் கோலி முதல் இடத்தில் நீடிக்கிறார். இந்தியா சார்பில் சதமடித்து அசத்திய ராகுல் 16 இடங்கள் முன்னேறி 19ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுள்ள ரிஷப் பந்த், 285 புள்ளிகளைப் பெற்று 63 இடங்கள் முன்னேறி 111ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்தப் போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர்கள் பட்டியலில் க்ளென் மெக்ராவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார். அத்துடன் ஐசிசியின் தரவரிசையிலும் தொடர்ந்து முதலிடத்திலேயே நீடிக்கிறார்.�,”