ஜெ.வுக்கு பாரத ரத்னா: அதிமுக செயற்குழுவில் தீர்மானம்!

Published On:

| By Balaji

இடைத்தேர்தல் மற்றும் தகுதி நீக்க வழக்கு உட்படப் பல்வேறு விவகாரங்கள் குறித்து, இன்று (ஆகஸ்ட் 23) மாலை சென்னை அதிமுக தலைமையகத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, பெரியார், அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக செயற்குழுக் கூட்டமானது, இன்று மாலை 5 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமையகத்தில் தொடங்கியது. அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இதற்குத் தலைமை தாங்கினார். இதில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

சமீபத்தில் மறைந்த திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதலமைச்சருமான கருணாநிதி, முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் போஸ் ஆகியோர் மறைவுக்கும், கேரள பெருமழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கும், இந்தக் கூட்டத்தில் இரங்கல் தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுத்த தமிழக அரசைப் பாராட்டித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரியார், மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்குப் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பது உட்பட 9 தீர்மானங்கள் இன்றைய செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டது.

விரைவில் நடைபெறவுள்ள திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்தும், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை 3வது நீதிபதியான சத்யநாராயணா விசாரணை செய்து வருவது குறித்தும் இதில் விவாதித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த செயற்குழு கூட்டத்தில், அதிமுகவில் புதிய உறுப்பினர்களைச் சேர்த்துவரும் நிர்வாகிகளுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share