[ஜெயா டிவிக்கு வாழ்த்து கூறிய மோடி

Published On:

| By Balaji

ஜெயா தொலைக்காட்சி 20ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்ததற்கு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. இது, தமிழக அரசியல் களத்தில் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதியன்று ஜெயா தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. கலை, இலக்கியம், ஆன்மிகம், சமூகம், அரசியல், நாட்டு நடப்பு சார்ந்த நிகழ்ச்சிகள், செய்திகள் மற்றும் நேரடி நிகழ்வுகள் இதில் ஒளிபரப்பாகி வருகின்றன. தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கிவரும் ஜெயா தொலைக்காட்சியின் நிர்வாகத்தை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் உறவினர்கள் கவனித்து வந்தனர். சசிகலா, இளவரசி இருவரும் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், அதன் நிர்வாகத்தை இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் கவனித்து வருகிறார்.

கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதியன்று ஜெயலலிதா மறைந்தார். இதன் பின்னர், அதிமுக கட்சியானது தினகரன் அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி என்று மூன்றாக இயங்கி வந்தன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிகளின் இணைவுக்குப் பின்னர், அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலைச் சின்ன உரிமையை அந்த அணிக்கு அளித்தது தேர்தல் ஆணையம். அதேபோல, தினகரனுக்கு ஆதரவளித்த 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கில் இரு வேறு தீர்ப்புகளை நீதிபதிகள் வழங்கினர். இதனால், அவ்வழக்கை மூன்றாவது நீதிபதியான சத்ய நாராயணா விசாரித்து வருகிறார்.

இடைப்பட்ட காலகட்டத்தில், மாநிலத்திலுள்ள அதிமுக அரசு மற்றும் மத்திய பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்து வந்தார் அமமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன். இவை அனைத்தும் ஜெயா தொலைக்காட்சியில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வந்தது. அது மட்டுமல்லாமல், பாஜகவுடன் எக்காலத்திலும் கூட்டணி இல்லை என்று தொடர்ந்து மேடைகளில் பேசி வருகிறார் தினகரன்.

இந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 22) 20ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்த ஜெயா தொலைக்காட்சிக்கு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. “தமிழகத்தில் உள்ள முன்னணித் தொலைக்காட்சிகளுள் ஒன்றாகத் திகழும் ஜெயா தொலைக்காட்சி, சிறப்பான செய்திச் சேவை மற்றும் மக்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சிகள் மூலமாக மக்கள் மனதில் இடம்பெற்றுள்ளது. எத்தனையோ தொலைக்காட்சிகள் இருந்தபோதிலும், பொதுமக்களை மகிழ்விப்பதிலும், சமூகத்திற்கு வழிகாட்டுவதிலும் தனது பணியைச் சிறப்பான முறையில் மேற்கொண்டு வருவதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழகத்தின் பண்பாட்டைத் தொடர்ந்து நிலைநாட்டவும், செய்தித் துறையில் சிறந்து விளங்கவும் வாழ்த்துகள்” என்று பிரதமர் மோடி தனது வாழ்த்துக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து ஜெயா நியூஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று மாலை சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் ஜெயா டிவியின் 20ஆவது ஆண்டு தொடக்க விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதன் தலைமைச் செயல் அதிகாரி விவேக் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அதன் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

மத்திய அரசின் செயல்பாடுகளைத் தொடர்ந்து ஜெயா தொலைக்காட்சி ஒளிபரப்பி வரும் நிலையில், அதன் 20ஆவது ஆண்டு விழாவுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தது தமிழக அரசியல் களத்தில் பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தினகரனோ, அவர்களது ஆதரவாளர்களோ இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share