“ஜெயலலிதாவை தான் மருத்துவமனையில் சென்று பார்த்தபோது, மயக்க நிலையில் இருந்தார்” என்று குடியரசுத் தலைவருக்கு அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் எழுதிய கடிதம் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் மரண மர்மத்தைக் கண்டறிய உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுக் கடந்த ஓராண்டாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்மன் அனுப்பப்பட்டதையடுத்து சசிகலாவின் உறவினர்கள், அப்பல்லோ மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் எனப் பல்வேறு தரப்பினரும் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். மூன்றாவது முறையாக ஆணையத்தின் கால அவகாசம் அடுத்த 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்தது தொடர்பாக விசாரணை ஆணையம், ஆளுநர் மாளிகைக்கு எழுதிய கடிதத்தில், “ஆளுநர் மாளிகைக்கு எத்தனை மருத்துவ குறிப்புகள் வந்தன? குறிப்புகள் பெறப்பட்டிருப்பின் பொறுப்பு ஆளுநருக்கு அது தெரிவிக்கப்பட்டதா?. மருத்துவமனையில் ஆளுநர், முதல்வரை பார்த்துவிட்டு சென்ற பின்னர் ராஜ்பவனில் இருந்து குடியரசு தலைவர் மாளிகைக்கு தகவல் அனுப்பப்பட்டதா?” என்பது போன்ற விவரங்களை கேட்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக 6.10.2016 அன்று அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு, ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் அனுப்பிய கடிதம் விசாரணை ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடிதத்தில், “2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடுத்த நாள் 23ஆம் தேதி அவர் விரைவில் குணமடைய வாழ்த்தி நான் கடிதம் அனுப்பினேன். அதற்கு அன்றைய தினத்திலேயே பதிலும் அனுப்பப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு நிகழ்வுகள் தொடர்பாக முதல்வர் பெயரில் செய்திக் குறிப்புகள் வெளியிடப்பட்டதாகவும்,காவிரி விவகாரம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனையில் தலைமைச் செயலாளர், அட்வகேட் ஜெனரல், தமிழக அரசின் ஆலோசகர் மற்றும் முதல்வரின் முதல் மற்றும் நான்காம் செயலாளர்களுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தேர்தலுக்கு அதிமுகவின் வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டதாகவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
நேரில் சந்தித்தது குறித்து அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஆளுநர், “ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல்வேறு விதமாக ஊகங்கள் எழுந்தன. அதிமுக தொண்டர்கள் அப்பல்லோ வாசலில் ஜெயலலிதா உடல்நிலை குறித்து அறிவதற்காக பரிதவித்து நின்றனர். சமூக ஊடகங்களில் காட்டுத் தீபோல வதந்திகளும் பரவின. இதனையடுத்து ஜெயலலிதா உடல்நிலை குறித்து வதந்திகள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை அறிவிப்பு வெளியிட்டது. மேலும் உடல்நிலை குறித்து அவதூறு பரப்பியதாக பிரான்ஸைச் சேர்ந்த தமிழச்சி என்பவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு 1.10.2016 அன்று மாலை உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கு முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அப்பல்லோ மருத்துவமனையின் சேர்மனிடம் கேட்டேன். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் குழு, அவருக்கு சிகிச்சை அளித்து வருவதை உறுதி செய்தது. நான் ஜெயலலிதா சிகிச்சை பெறும் அறைக்குச் சென்று பார்த்தபோது, அவர் மயக்க நிலையில் இருந்தார்” என்று குறிப்பிட்டிருக்கிறார். தற்போது இக்கடிதம் வெளியாகியுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேரில் பார்க்கவில்லை என்றும், கண்ணாடி வழியாகவே பார்த்தார் என்றும் விசாரணை ஆணையத்தில் மருத்துவர் சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
�,”