ஜெயலலிதா இல்லாததால் மிரட்டிப் பார்க்கிறார்கள்!

public

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தற்போதைய அமைச்சர்கள் சிறை செல்வர் என்று ஸ்டாலின் கூறியதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ஜெயலலிதா இல்லாததால் ஆட்சிக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்று மிரட்டிப் பார்க்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

முத்துராமலிங்கத் தேவரின் 111வது ஜெயந்தி விழா மற்றும் 56வது குருபூஜை விழா இன்று (அக்டோபர் 31) அனுசரிக்கப்படுகிறது. பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை முடிவுசெய்வது குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தற்போதுதான் வந்துள்ளது. அனைவரின் கருத்துக்களைக் கேட்ட பிறகு அதுகுறித்து முடிவு செய்வோம்” என்று தெரிவித்தார்.

எங்களைப் பார்த்து ஓபிஎஸ்-ஈபிஎஸுக்கு பயம் வந்துவிட்டது என்று தினகரன் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, “யாருக்கு பயம்? அதிமுக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் எப்போதும் பயம் கிடையாது. அதிமுக தொண்டர்களிடம் ஆசை வார்த்தை கூறி சில எட்டப்பர்கள் கட்சியை உடைக்க சதி செய்தார்கள். அதனால் சிலர் பாதை மாறிச் சென்றனர். பிரிந்து சென்றவர்கள் திரும்ப வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டோம். தினகரனுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை. ஏனெனில் அவர் அதிமுக உறுப்பினராக இல்லை” என்று முதல்வர் பதிலளித்தார்.

சிபிஐ விசாரணைக்கு இடைக் காலத் தடை விதித்த விவகாரம் குறித்து பேசிய முதல்வர், “அது பொய் புகார் என்று எனக்கு நன்றாகத் தெரியும். ஏனெனில் நான் அதில் சம்பந்தப்பட்டவன். இதனால்தான் உச்ச நீதிமன்றத்தில் தனியாக மேல்முறையீடு செய்தேன். அதில் தற்போது சிபிஐ விசாரணைக்கு தடை விதித்துத் தீர்ப்பளித்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

மேலும், “என் மீதான ஆர்.எஸ்.பாரதி தரப்பின் புகாருக்கு நான் விளக்கம் அளித்துவிட்டேன். நான் கேட்ட கேள்விகளுக்கு திமுக தரப்பிலிருந்து இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தற்போதைய அமைச்சர்கள் சிறை செல்வர் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக ஆட்சிக்கு வரும்வரை அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் வெளியில் இருப்பார்களா என்று தெரியவில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடரப்பட்டு அவை நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை மறைப்பதற்காக ஸ்டாலின் இவ்வாறு பேசிவருகிறார்.” என்று குற்றம் சாட்டிய முதல்வர்,

எங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு அவர்களிடம் ஆதாரங்கள் ஒன்றுமில்லை, ஜெயலலிதா இல்லாததால் ஆட்சிக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்று மிரட்டிப் பார்க்கிறார்கள். மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள், அது நிச்சயம் நடக்காது. கட்சி உடையும், ஆட்சி கவிழும் என்று எதிர்பார்த்தார்கள் அது நடக்கவில்லை. தற்போது வழக்கு என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர். எங்களுக்கு மடியில் கனமில்லை. அதனால் வழியில் பயமில்லை” என்றும் தெரிவித்தார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *