“ஜெயலலிதா போன்ற ஆளுமை மிக்க தலைவர் அதிமுகவில் யாரும் இல்லை” என்று மக்களவை உறுப்பினர் அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.
அதிமுக-பாஜக கூட்டணி அமையக் கூடாது என்று உறுதியாக இருந்தவர்களில் தம்பிதுரையோடு மக்களவை உறுப்பினர் அன்வர் ராஜாவும் ஒருவர். முத்தலாக் விவகாரத்தில் மக்களவையில் பாஜகவுக்கு எதிராக இவர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு ‘முத்தலாக் உரிமை மீறும் செயல்’ என்ற தலைப்பில் புத்தகமாகவே வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுக-பாஜக கூட்டணி அமைந்துவிட்ட நிலையில் கூட்டணி வேறு, கொள்கை வேறு என்று விளக்கமளித்தார் அன்வர் ராஜா. பாஜகவுடனான கூட்டணியைக் கண்டித்து அதிமுகவிலிருந்து அன்வர் ராஜா விலகப்போவதாகவும், அவர் காங்கிரஸில் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் சென்னையில் இன்று (மார்ச் 5) செய்தியாளர்களை சந்தித்த அன்வர் ராஜா, “தேர்தலுக்கும் வக்பு வாரியத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று 2004 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதா அறிவித்தார். கடந்த தேர்தல்களில் ஜெயலலிதா யாருடனும் கூட்டணி அமைக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு இருந்த தைரியமும் ஆளுமைத் திறனும் தமிழகத்தில் யாருக்கு இருக்கிறது? அவர் இறந்த பின்புதான் அனைவருக்கும் அவருடைய அருமை புரிகிறது. அப்படிப்பட்ட ஆளுமை மிக்க தலைவர் அதிமுகவில் இல்லை, தமிழகத்திலும் இல்லை. அதுதான் கூட்டணி அமைக்கப்பட்டதற்கான காரணம். கலைஞர், எம்.ஜி.ஆருக்கு சமமான தலைவர்களும் தற்போது இல்லை, அவர்களுடைய ஆளுமையே வேறு” என்று தெரிவித்தார்.
அதிமுகவில் நீங்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறதே என்னும் கேள்விக்கு, “இது முற்றிலும் தவறான தகவல். கட்சித் தலைமை மீது எந்த அதிருப்தியும் எந்த காலத்திலும் எனக்கு ஏற்பட்டது இல்லை. அதிமுக ஆரம்பிப்பதற்கு முன்பு மாணவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தவன். 1972இல் எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியதிலிருந்து எந்தவித சபலத்திற்கும் ஆட்படாமல் தற்போது வரை கட்சியில் இருந்துவருகிறேன். கட்சியிலிருந்து யாரையாவது வெளியே அனுப்புவேனே தவிர, நான் கட்சியிலிருந்து விலக மாட்டேன்” என்று பதிலளித்தார்.
மேலும் ராமநாதபுரத்தில் போட்டியிட வேண்டும் என்று கட்சித் தலைமை கட்டளையிட்டால் கண்டிப்பாக போட்டியிட்டு மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.�,