நாளை ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இன்று டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரான, தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டுள்ளார். தமிழகம் மட்டுமன்றி உலகம் முழுக்க இருக்கும் தமிழர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது இந்த வீடியோ.
வெற்றிவேல் வெளியிட்டுள்ள வீடியோவில் ஜெயலலிதா மருத்துவமனைப் படுக்கையில் நைட்டி போன்ற உடையை அணிந்தபடி படுத்திருக்கிறார். டிரக்யாஸ்டமி எனப்படும் தொண்டையில் துளையிட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதும் இந்த வீடியோவில் தெரியவருகிறது. ஒரு கோப்பையில் ஜுஸ் அருந்திக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. அங்குமிங்கும் பார்த்துக்கொண்டிருக்கிறார். உடல் மெலிந்து கால்கள் நன்றாகத் தெரிகிற வகையில் இந்த வீடியோ காட்சி ஓடுகிறது. ஜெயலலிதா மருத்துவமனைக்கு வரும்போதே சுயநினைவின்றி இருந்தார் என தகவல்கள் வெளியான நிலையில் இந்த வீடியோவும் வெளியாகியிருக்கிறது.
**தூண்டிவிட்ட துண்டுப் பிரசுரம்?**
ஆர்.கே.நகரில் நேற்று பிரசாரம் முடியும் தருவாயில் எடப்பாடி, ஓ.பன்னீர் அணியினர் ஒரு துண்டுப் பிரசுரத்தைத் தொகுதி முழுதும் விநியோகித்தது வெற்றிவேலுக்குத் தெரியவந்திருக்கிறது. ‘அம்மாவின் மரணத்துக்குக் காரணம் யார்?’ என்ற அந்த பிரஸ் பெயர் இல்லாத துண்டுப் பிரசுரத்தில் சசிகலாவுக்கும், தினகரனுக்கும் எதிரான வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இதை உடனே தினகரனுக்குக் கொண்டு சென்ற வெற்றிவேல், ‘இனியும் தாமதிச்சா மக்கள்ட்ட தப்பான அபிப்பிராயம் ஸ்ட்ராங் ஆயிடும். அதனால இன்னிக்கு நைட்டே நம்மகிட்ட இருக்குற வீடியோவ வெளியிட்டுடலாம்’ என்று சொல்லியிருக்கிறார். அப்போது தினகரனும் வெற்றிவேலை அழைத்து நீண்ட நேரம் இதுபற்றி ஆலோசித்துள்ளார்.
**இடம் தேர்வு செய்த வெற்றிவேல்!**
இந்த நிலையில்தான் இன்று காலை 10.30 மணிக்கு சென்னையில் தலைமைச் செயலகத்துக்கு வந்தார் வெற்றிவேல். ஆர்.கே.நகர் தேர்தல் பற்றி தேர்தல் சிறப்பு அதிகாரி பத்ரா நேற்று டெல்லி சென்று தலைமை தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை அளித்த நிலையில் அது பற்றிய விவரங்களை ராஜேஷ் லக்கானியிடம் கேட்பதற்காக பல்வேறு முக்கிய பத்திரிகைகள், தொலைக்காட்சிகளின் செய்தியாளர்கள் தலைமைச் செயலகத்தில் திரண்டிருப்பதாக தகவல் கிடைத்தே அங்கு வந்தார் வெற்றிவேல்.
தலைமைச் செயலக வளாகத்திலேயே அவர்களை அழைத்த வெற்றிவேல் தனக்கே உரிய வடசென்னை பாஷையில் பேசத் தொடங்கினார்.
“நாங்க ரொம்ப நாளா பொறுமையா போயிட்டிருந்தோம். ஆனா எடப்பாடி பழனிசாமியும்,ஓ.பன்னீர்செல்வமும் அம்மாவை தொடர்ந்து கொச்சைப்படுத்திக்கிட்டிருக்காங்க. இனியும் நாங்க பொறுமையா இருக்க முடியாது. அதனாலதான் அம்மா அப்பல்லோ மருத்துவமனையில் இருக்கும்போது எடுத்த வீடியோவை இப்போது வெளியிடுறோம். பாருங்க…’’ என்று சொல்லிக் கொண்டே தனது பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுத்து அந்த வீடியோவை ஓட விட்டார்.
அடுத்த சில நிமிடங்களில் அந்த வீடியோ உலகமெங்கும் பரவியது.
பின் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார் வெற்றிவேல்.
**ஜெயலலிதா இறந்து ஒரு வருடம் ஆன பின் இப்போது ஏன் வெளியிடுகிறீர்கள்?**
நாங்களாக இதை வெளியிட வில்லை. எங்களை அந்த நிலைக்குத் தள்ளியிருக்கிறார்கள். அம்மாவின் மருத்துவமனை நாட்கள் பற்றியும், அம்மாவின் சிகிச்சை பற்றியும் கொச்சைப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அதனால்தான் இந்த வீடியோவை வெளியிட முடிவெடுத்தோம். இதை வெளியிடக் கூடாது என்று பலவகையிலும் தடுத்துப் பார்த்தார்கள். ஆனால் அம்மா பற்றியும் சின்னம்மா பற்றியும் நிலவும் சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளிவைக்கத்தான் இந்த வீடியோவை வெளியிட்டோம்.
**நாளை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தேர்தல் ஆதாயத்துக்காகவே வெளியிட்டீர்களா?**
தேர்தலுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை. ஆர்.கே. நகர் ஒரு தம்மாத்துண்டு தேர்தல். அந்த குறுக்குபுத்தியெல்லாம் எங்களுக்கு கிடையாது. அப்படி ஆர்.கேநகர் தேர்தலுக்காகத்தான் வெளியிடணும்னா…. போன முறை எங்க துணைப் பொதுச் செயலாளர் நின்னாரே. அப்ப பன்னீர் தரப்பு அம்மாவ வச்சி சவ ஊர்வலமெல்லாம் நடத்துனாங்களே? அப்பவே வெளியிட்டிருப்போமே? இதை இப்பகூட வெளியிட எங்களுக்கு மனசு இல்ல. ஆனா பன்னீரும், பழனிசாமியும் தொடர்ந்து அம்மாவைப் பத்தி கொச்சைப்படுத்தினதாலதான், அம்மா ஆஸ்பத்திரில நல்லபடியா இருந்தாங்கன்றதை நிரூபிக்க இந்த [வீடியோவை வெளியிட்டிருக்கோம்](https://www.youtube.com/watch?v=dm6UAQOOa24). இன்னும் வீடியோக்கள், போட்டோவெல்லாம் இருக்கு. அதையும் வெளியிடுவோம். துரோகிகள் தப்பிக்க முடியாது.
**ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் இருக்கும்போது ஏன் அங்கே வெளியிடாமல் ஊடகங்களுக்கு வெளியிடுகிறீர்கள்?**
எங்க துணைப் பொதுச் செயலாளர் இந்த விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டபோதே சொல்லிவிட்டார். ஆணையம் கூப்பிட்டால் ஆதாரங்களை தெரிவிக்கத் தயார் என்று. இப்போ வரைக்கும் கூப்பிடலை’’
என்று பேட்டியளித்தார் வெற்றிவேல்.
**அன்றே சொன்ன மின்னம்பலம்!**
இந்த வீடியோவில் ஜெயலலிதா எவ்வாறு இருக்கிறாரோ அதையேதான் கடந்த ஆகஸ்டு 17 ஆம் தேதியன்றே மின்னம்பலம் தளத்தில், [அந்த போட்டோவில் ஜெ. எப்படி?](https://minnambalam.com/k/2017/08/17/1502908226) என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம்.
“மருத்துவமனை படுக்கையில் சாய்ந்தபடி கால்களை நீட்டி அமர்ந்திருக்கிறார். அதாவது தலைப்பகுதிக்குப் பின்னால் தலையணைகள் போல வைக்கப்பட்டு உயர்ந்திருக்க… கால்களை நீட்டிக்கொண்டிருக்கிறார். கால்கள் நன்றாகத் தெரிகின்றன. பச்சை வண்ண மருத்துவமனை உடையை அம்மா அணிந்திருக்கிறார். படியசீவிப் பழக்கப்பட்ட அம்மாவின் தலை முடிகள் ஆங்காங்கே அலைக்கழித்துப் பறக்கின்றன.
சாப்பிடும்போது உடையில் சிந்திவிடக் கூடாது என்பதற்காக ஒரு மேலங்கியை அணிந்திருக்கிறார் அம்மா. கூந்தல் கலைந்திருக்கிறது, முகம் களையிழந்திருக்கிறது” என்று அந்த போட்டோவைப் பார்த்த முக்கியப் பிரமுகர் கூறியதாக நாம் ஆகஸ்டு 17 அன்றே வெளியிட்டிருந்தோம். அன்று மின்னம்பலத்தின் வரிகள்தான் இன்று வெளியிட்ட வீடியோவில் காட்சிகளாக இருக்கின்றன.
**பணத்தை மிஞ்சும் படம்!**
அந்த செய்தியில் மேலும், ’’ஒருபக்கம் சசிகலாவும் இன்னொரு பக்கம் அப்போலோ நர்ஸும் அந்தப் புகைப்படத்தில் இருக்கிறார்கள். நர்ஸைப் பார்த்தபடி இருக்கிறார் அம்மா” என்றும் அந்த முக்கியப் பிரமுகர் சொன்னதாக வெளியிட்டிருந்தோம். இந்தக் காட்சிகள் எல்லாம் அடுத்தடுத்து வரும் வீடியோ, போட்டோக்களில் இருக்கும் என்கிறார்கள் தினகரன் வட்டாரத்தில்.
இந்த வீடியோ வெளியிட்டது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று தெரிவித்திருக்கும் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி, அதேநேரம் தேர்தலை இனி நிறுத்த முடியாது என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ’பணம்’ வாங்க முடியாத வாக்குகளை இந்தப் ’படம்’ வாங்கிவிடுமா என்று எடப்பாடி தரப்பினர் பதைபதைப்புடன் உள்ளனர்.�,”