நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான அமமுக கட்சியின் ஆலோசனைக் கூட்டம் ஜூலை 30ஆம் தேதி, அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
மத்திய பாஜக அரசின் ஆட்சிக் காலம் அடுத்த ஆண்டு மே மாதத்தோடு நிறைவடைகிறது. எனவே நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு அல்லது இந்த ஆண்டே நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலோடு மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களையும் நடத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் மத்திய அரசின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் தினகரன், தேர்தலை எதிர்கொள்ளவும் கட்சியைத் தயார்படுத்தி வருகிறார். அண்மையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கும்போது, அடுத்த பிரதமரை அமமுகதான் முடிவு செய்யும் என்று தினகரன் கூறியிருந்தார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளையும் அவர் முடுக்கிவிட்டுள்ளார். முதற்கட்டமாகக் கடந்த ஜூலை 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை அவர் அறிவித்தார்.
இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஜூலை 30ஆம் தேதி ஆலோசனை நடத்த அவர் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அமமுக சார்பில் இன்று (ஜூலை 22) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதிகளிலும் வெற்றி படைத்து மத்திய அரசைத் தீர்மானிக்கும் சக்தியாக அமமுக திகழ்ந்திடும் வண்ணம், தேர்தலை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை அசோக் நகர், டாக்டர் நடேசன் சாலையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 30ஆம் தேதி நடைபெறவுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கூட்டத்தில் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து தொகுதி பொறுப்பாளர்களுக்கு அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனை வழங்கவுள்ளார்.�,