மேற்கு வங்கத்தில் போராடி வரும் மருத்துவர்களுக்கு ஆதரவாக, வரும் ஜூன் 17ஆம் தேதியன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது இந்திய மருத்துவர்கள் சங்கம்.
கடந்த ஜூன் 10 அன்று மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு நோயாளியின் உறவினர்கள் தாக்கியதில் மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார். இதனைக் கண்டித்தும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த திங்கள் கிழமை முதல் அம்மாநில மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (ஜூன் 13), மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டம் நடக்கும் இடமான எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்குச் சென்றார். இன்னும் 4 மணி நேரத்தில் போராட்டத்தை முடிக்க வேண்டும் எனவும், அதை மீறுவோர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவிட்டார். மம்தாவின் உத்தரவையடுத்து, போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.
இன்று (ஜூன் 14) 16 மருத்துவர்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அனுப்பி வைத்தனர். மேற்கு வங்கத்தில் போராடும் மருத்துவர்களுக்கு ஆதரவாக மும்பை, டெல்லி, ஹைதராபாத் போன்ற பல மாநகரங்களில் உள்ள மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் போராடி வரும் மருத்துவர்களுக்கு ஆதரவாகவும், மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும், வரும் ஜூன் 17 அன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் அனைவரும் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவர் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை டென்ஷன் ஆக்கிய தினகரன்- வாய்ப்பூட்டு பின்னணி!](https://minnambalam.com/k/2019/06/13/76)**
**[மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!](https://minnambalam.com/k/2019/06/14/20)**
**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[தண்ணீர் தட்டுப்பாடு: ஓட்டல்களில் மதிய உணவை நிறுத்த முடிவு!](https://minnambalam.com/k/2019/06/14/41)**
�,”