Uநீட்டுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்குத் தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், அரியலூர் மாணவி அனிதா மரணத்தைக் கண்டித்தும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிந்தாதிரிப்பேட்டை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் முந்நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாநிலச் செயலாளரும், அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான ஜி.ராமகிருஷ்ணன் மீது சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக எழும்பூர் நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜி.ராமகிருஷ்ணன் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நேற்று (ஆகஸ்ட் 23) விசாரணைக்கு வந்தது. அப்போது ஜி.ராமகிருஷ்ணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருமூர்த்தி, “காவல் துறையைத் தாக்கியதாகவும், சட்ட விரோதமாகக் கூடியதாகவும் வழக்கு பதிவு செய்தது பொய்யானது” என வாதிட்டார்.
இந்த வாதத்தின் அடிப்படையில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஜி.ராமகிருஷ்ணன் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.�,