ஜான்சன் அண்ட் ஜான்சன்: புற்றுநோய்க்கான வேதிப்பொருள்!

Published On:

| By Balaji

ஜான்சன் அண்ட் ஜான்சன் ஷாம்புவில் புற்றுநோயை உருவாக்கும் வேதிப்பொருள் கலந்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைச்சகம், ராஜஸ்தானில் வெவ்வேறு இடங்களில் உள்ள 24 ஜான்சன் அண்ட் ஜான்சன் நோ டியர்ஸ் பேபி ஷாம்பு, மற்றும் பவுடர் பாட்டில்களை கடந்த பிப்ரவரி மாதம் ஆய்வுக்கு உட்படுத்தியது. இதில் 2021ஆம் ஆண்டு காலாவதியாகும் ஷாம்பு, பவுடர் பாட்டில்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

சோதனையின் முடிவில், ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிப்புகளில் தீங்கு விளைவிக்கும் ஃபார்மால்டிஹைட் வேதிப் பொருட்கள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஃபார்மால்டிஹைட் 38 முதல் 45 சதவிகிதம் நீர்த்த கரைசலாக ஃபார்மலின் என்ற பெயரில் கிடைக்கிறது. இதில் பார்மிக் அமிலம் மாசுப்பொருளாகக் கலந்துள்ளது. இது தாவர உறுப்புகளின் உள்ளமைப்பினை அறிந்து கொள்ளவும், கட்டுமான பணிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து ராஜஸ்தான் மருந்துகள் கட்டுப்பாட்டு அதிகாரி ராஜா ராம் ஷர்மா கூறுகையில், ஜான்சன் அண்ட் ஜான்சன் நோ டியர்ஸ் பேபி ஷாம்பினை சோதனைக்கு உட்படுத்தியபோது, அதிகளவு நச்சு வேதிப்பொருளான ஃபார்மால்டிஹைட் கலந்துள்ளது தெரிய வந்துள்ளது. இது புற்றுநோயை உண்டாக்கக் கூடியது.

ஆனால், அந்நிறுவனம் எவ்வித நச்சும் கலக்கப்படவில்லை என தொடர்ந்துகூறி வருகிறது. நச்சின் அளவு குறித்து தற்போது சொல்ல முடியாது. தரப்பரிசோதனையில் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் தோல்வியடைந்ததையடுத்தும் இதர சோதனைகளுக்காக தற்போது மத்திய மருந்துகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.

இதற்கிடையில் அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பவுடரை பயன்படுத்தி புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக, பல நூறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share