ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக திமுக, அமமுக கட்சிகள் களமிறங்கியுள்ளன.
தமிழக ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த 22ஆம் தேதி முதல் ஆர்ப்பாட்டம், மறியல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறது. போராட்டங்களில் ஈடுபட்டு, தினமும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலையாகி வருகின்றனர். இன்று (ஜனவரி 25) நான்காவது நாளாக ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதன் முக்கிய நிர்வாகிகளைக் கைது செய்வதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனாலும், ஆளுங்கட்சி கொஞ்சம் யோசனையில் இருப்பதாகக் காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா பள்ளிகளில் கோலாகலமாகக் கொண்டாடப்படும். ஆனால், நாளை (ஜனவரி 26) குடியரசு தின விழா கொண்டாடுவதற்கான முன்னேற்பாடுகள் ஏதும் செய்யப்படவில்லை. இதனால் இந்த குடியரசு தின விழா களையிழந்துபோகும் என்கின்றனர் ஆசிரியர்கள்.
இன்று முக்கிய நிர்வாகிகளைக் கைது செய்தால் நாளை போராட்டத்தின் தாக்கம் அதிகமாகிவிடும் என்ற கருத்தும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இடையே நிலவுகிறது. என்னவானாலும், முக்கிய நிர்வாகிகளைக் கைது செய்வதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்கின்றனர் காவல் துறையைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத சில அதிகாரிகள்.
ஜாக்டோ ஜியோவினர் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில், நேற்று (ஜனவரி 24) திருவண்ணாமலையில் போராட்டக்காரர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார் திமுக மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான எ.வ.வேலு. இன்று விழுப்புரம் மாவட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான பொன்முடி ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்துப் பேசினார். அவரைத் தொடர்ந்து, அமமுக மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியனும் போராட்டக்காரர்களைச் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார்.
இடதுசாரி இயக்கங்களின் ஆதரவை ஜாக்டோ ஜியோ போராட்டம் பெற்றிருந்த நிலையில், தற்போது திமுக, அமமுக கட்சிகளின் பார்வை பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.
�,