�
சல்மான் கான் நடிக்கும் கிக் 2 படத்தின் கதாநாயகியாக நடிகை எமி ஜாக்சன் ஒப்பந்தமாகி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளிவரவிருக்கும் 2.0 படத்தின் நாயகியாக நடித்துள்ளார் எமி ஜாக்சன். இந்த படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து எமி ஜாக்சன் தற்போது அமெரிக்காவில் தங்கி ‘சூப்பர்கேர்ள்’ சீரிஸில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அடுத்து சல்மான் கானின் ‘கிக் 2’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக டெக்கான் கிரானிக்கிளில் செய்தி வெளியாகியுள்ளது.
அதில், “கன்னடத்தில் தயாராகி வரும் ‘தி வில்லன்’ படத்தில் சிவராஜ்குமாருடன் இணைந்து நடித்துவரும் எமி, ஜூன் மாதத்திற்குப் பிறகு கிக் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிக் முதல் பாகத்தில் நடித்த ஜாக்குலின் பெர்ணான்டஸ் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருந்தார். ஆனால் தற்போது எமி ஜாக்சன் நடிக்கவிருப்பதால் அவர் விலகியிருக்கிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியில் எமி ஜாக்சனை ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் ரீமேக்கான ‘ஏக் திவானா தா’ படத்தில் நடிக்க வைத்தார் கெளதம்மேனன். அதையடுத்து தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தபடியே இந்தியிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் எமி. பிரபலமான ஹாலிவுட் டிவி சீரியலில் நடித்து வந்த எமி, இனிமேல் இந்தியப் படங்களில் நடிக்க மாட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் சல்மான் கான் படத்தின் மூலம் மீண்டும் இந்திய சினிமாவுக்கு அவர் திரும்பியிருப்பது கவனிக்கத்தக்கது.�,