எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தடாலடியான கருத்துகளுக்கு பெயர் பெற்றவர். இவர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் வாதாடியது ஒருபுறமென்றால், மறுபுறம் ‘தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் தமிழகத்தில் ஆட்சியை கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்’ என்று கூறி அதிரவைக்கிறார்.
தமிழின கலாச்சார பாதுகாப்பு இயக்கம், காளைகள் பாதுகாப்பு நல சங்கம் ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் தங்களுக்கு ஆதரவாக வாதிட வேண்டும் என பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியிடம் கோரிக்கை வைத்தனர். இதை சுப்பிரமணியன் சுவாமி ஏற்றுக்கொண்டு களமிறங்க தயாரானார். 7. 12. 2016 அன்று ஜல்லிக்கட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சுப்பிரமணியன் சுவாமியும் ஆஜரானார்.
ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் 7.1.2016-ல் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கியது. இதை எதிர்த்து விலங்குகள் நலவாரியம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை 7. 12. 2016 அன்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் நாரிமன் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இவ்வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மத்திய அரசு வாதங்களை முன்வைத்தது. இவ்வழக்கில் மத்திய அரசு, தமிழக அரசு, விலங்குகள் நல வாரியம் அனைத்தும் தங்களது இறுதி வாதங்களை முன்வைத்திருந்தன. பாஜக எம்பி. சுப்பிரமணியன் சுவாமியும் இவ்வழக்கில் ஆஜராகி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வாதாடினார். ஆனால் தீர்ப்பு இன்றுவரை வெளிவரவில்லை.
இந்நிலையில் தமிழகத்தில் இந்த வருடம் எப்படியும் ஜல்லிக்கட்டை நடத்துவது என்று உறுதியோடு இருக்கிறார்கள் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள். ஆனால் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களுக்கு ஆதரவாக வாதாடிய சுப்பிரமணியன் சுவாமி திடீரென்று எதிராகப் பேசியிருக்கிறார். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றால் தமிழகத்தில் ஆட்சியை கலைத்து குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். இதற்கு பதிலளித்து நெட்டிசன் ஒருவர் கூறுகையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சட்டம் இயற்ற முடியாத நீங்கள் உங்கள் எம்.பி பதவியை ராஜினாமா செய்யலாம்” என கூறியிருந்தார்,
இதற்கு பதிலளித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, நான் ஒன்றும் தமிழகத்திலிருந்து எம்.பியாகவில்லை. லோக்சபாவுக்கு நீங்கள் தேர்ந்தெடுத்து அனுப்பினீர்களே அந்த 39 புஸ்ஸி கேட் எம்.பிக்களை போய் கேளுங்கள் என பதிலளித்துள்ளார். (I was not elected from Tamil Nadu. You ask the 39 pussy cats you have elected to Lok Sabha, says Subramaniyan Swamy)
ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக சட்டத்தில் திருத்தம் செய்வதில் தமிழக எம்.பிக்கள் எந்த முயற்சியையும் எடுக்காமல் சும்மா இருந்ததை சுப்பிரமணியன் சுவாமி இவ்வாறு நையாண்டியாக சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனால், இதில் ஒரு எம்.பி பாஜகவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் என்பது கவனிக்கத்தக்கது. மேலும் சில டிவிட்டுகளில், கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலங்களில் இருந்து வந்த கருணாநிதி, ஈ.வே.ரா (பெரியார்), எம்.ஜி.ஆர் போன்றவன் நான் அல்ல , தமிழர்களிலேயே தான்தான் திறமையான நபர் எனவும் கூறிக்கொண்டுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி. மேலும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான கருத்துதான் தன்னுடையது என்றும், எழுத்துப்பூர்வ வாதத்தை கூட உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும் கூறியுள்ள சுப்பிரமணியன் சுவாமி, தனித்தனி கலாசாரம் என்று எதுவுமே இந்தியாவில் கிடையாது. தமிழ் கலாசாரம் என கூறப்படுவதும் இந்து கலாசாரம்தான் என்றும் கூறியுள்ளார்.
�,”