ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி அளிக்கும் வகையில் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பிக்கும் வாய்ப்புள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக பொங்கல் பண்டிகைக்கு முன்பு தீர்ப்பளிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால், ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்கும் வகையில் மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்ற உள்ளதாக செய்தி வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.தத்வாலியா டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறுகையில், **அவசரச் சட்டம் பிறப்பிப்பது குறித்து உள்துறை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. எனினும், முழு விவரங்களைத் தெரிவிக்க இயலாது”** என்றார். அவசரச் சட்டத்துக்கான வரைவு தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அதன் ஒப்புதலுக்காக சட்டத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருந்தார்.
வாய்ப்பு இல்லை
ஆனால் மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்ற வாய்ப்பில்லை என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். காரணம் மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்றால் அமைச்சரவையை கூட்டவேண்டும். ஆனால் டெல்லியில் அமைச்சரவைக் கூடுவதற்கான சூழல் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியொரு சூழல் இருந்திருந்தால் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைக்காத காரணத்திற்காக தமிழக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருக்க மாட்டார். மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்ற வாய்ப்பில்லை என்பது பொன். ராதாகிருஷ்ணனுக்கு தெரிந்திருக்கிறது. மேலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்றினால் நீதித்துறையோடு மோதல் போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு தயங்குகிறது என்று கூறப்படுகிறது.
தமிழக அரசு விரும்பினால் ஜல்லிக்கட்டு நடத்த ஒரு சட்டம் இயற்றி அதை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பலாம். ஆளுநர் இந்த விவகாரத்தில் தலையிட விரும்பாத பட்சத்தில் அதை அவர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பலாம். தமிழக அரசு இயற்றும் சட்டத்தை ஆளுநரோ, அல்லது குடியரசுத் தலைவரோ ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் சட்டரீதியாக ஜல்லிக்கட்டு நடக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதற்கான காலஅவகாசம் நம்மிடம் இல்லை என்பதுதான் உண்மை.�,”