ஜன்னலோர இருக்கை: முன்பதிவுக்குக் கூடுதல் கட்டணம்!

Published On:

| By Balaji

ஏர் இந்தியா விமானத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது ஜன்னல் ஓரம் மற்றும் நடைபாதை ஓரம் உள்ள இருக்கைகளுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் மூன்று இருக்கைகள் உள்ள வரிசையில் மத்தியில் உள்ள இருக்கையினைத் தேர்வு செய்யும்போது எந்தக் கூடுதல் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

ஏற்கனவே ஏர் இந்தியா நிறுவனம் முதல் வரிசையில் காலை நன்றாக நீட்டி உட்கார்ந்து பயணம் செய்யக் கூடுதல் கட்டணத்தினை வசூலித்துவருகிறது.

விமானம் புறப்பட 4 மணி நேரம் உள்ளபோது, இந்த ஜன்னல் ஓர இருக்கைத் தேர்வு முறையானது இருக்கும். இந்தச் சேவையின் கீழ் இருக்கையைத் தேர்வு செய்யும்போது கூடுதல் கட்டணம் எவ்வளவு என்பது காண்பிக்கப்படும். அதனைப் பயணிகள் செலுத்த வேண்டும்.

இந்த இருக்கைகளைத் தேர்வு செய்த பிறகு டிக்கெட்டினை முழுமையாக ரத்து செய்தால் ஜன்னல் ஓர இருக்கைக்காக வசூலிக்கப்பட்ட கட்டணமும் முழுமையாகத் திருப்பி அளிக்கப்படும்.

ஏர் இந்தியாவில் முன்பதிவு செய்யப்படும்போது கட்டணங்கள் வேறுபடும். டெல்லியில் இருந்து சிங்கப்பூர் செல்ல முதல் வரிசை டிக்கெட்டிற்கு 1,500 ரூபாய் கூடுதல் கட்டணமாகும். இதை முன்பதிவு செய்யும்போது கூடுதலாக 450 ரூபாய் வசூலிக்கப்படும். அதுபோன்று, சென்னையிலிருந்து துபாய்க்குச் செல்லும்போது ரூ.1,000 கட்டணம் மற்றும் முன்பதிவு செய்யும்போது கூடுதலாக ரூ.300 வசூலிக்கப்படும். சென்னையிலிருந்து கொழும்பு செல்லும்போது கட்டணமாக ரூ.500 மற்றும் முன்பதிவு கட்டணமாக ரூ.150 வசூலிக்கப்படும்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share