வெளிநாட்டுக் கலாச்சாரத்தை மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில், டிசம்பர் மாதத்தில் 50 மாணவர்களைப் பின்லாந்து நாட்டுக்குச் சுற்றுலா அனுப்பி வைக்கவுள்ளதாகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை சேத்துப்பட்டு எம்சிசி பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா மற்றும் நூலகருக்கு விருது வழங்கும் விழாவில், தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்றார். இதையடுத்துப் பேசிய அவர், டிசம்பர் மாத இறுதியில் மாணவர்களுக்கு மிதிவண்டிகளும், ஜனவரி முதல் வாரத்தில் மடிக்கணினியும் வழங்கப்படும் என்று கூறினார்.
“வெளிநாட்டுக் கலாச்சாரத்தை அறிந்துகொள்ளும் வகையில் 100 மாணவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டம் 3 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தவுள்ளது. கனடாவுக்கு 25 பேரும், சிங்கப்பூர், மலேசியாவுக்குத் தலா 25 மாணவர்களும் அனுப்பப்படவுள்ளனர். வரும் டிசம்பர் மாதத்தில் 50 மாணவர்கள் பின்லாந்து நாட்டுக்குச் சுற்றுலா செல்லவுள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.
வரும் கல்வியாண்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சீருடை மாற்றத்தையடுத்து, அவர்களுக்குத் தலா 4 செட் சீருடைகள் இலவசமாக வழங்கப்படும் என்று செங்கோட்டையன் கூறினார். தனியார் நிறுவனங்கள் நடத்தும் நீட் பயிற்சி வகுப்புகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகார் வந்தால் அந்த நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.�,