ஜனநாயகம், வரலாறு பற்றி எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காங்கிரஸை கடுமையாக சாடியுள்ளார்.
ஜம்மூ காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் இன்று முன்மொழிந்தார். மேலும், அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு ஜம்மூ காஷ்மீரில் சட்ட ஒழுங்கு சூழலை மத்திய அரசு கூர்ந்து கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிப்பது தொடர்பாக பேசிய அமித்ஷா, தற்போதைய நிலையில் சட்டமன்ற தேர்தலை நடத்த முடியாது என்று தெரிவித்தார். 2019ஆம் ஆண்டின் இறுதியில் ஜம்மூ காஷ்மீருக்கு சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
பின்னர், மக்களவையில் ஜம்மூ காஷ்மீர் இடஒதுக்கீடு மசோதாவை அமித்ஷா அறிமுகப்படுத்தினார். இந்த மசோதா யாரையும் சமாதானப்படுத்துவதற்காக அல்ல எனவும், சர்வதேச எல்லையில் வாழும் மக்களின் நலனுக்காக அறிமுகப்படுத்தப்படுவதாகவும் அமித்ஷா தெரிவித்தார். அப்போது, ஜம்மூ காஷ்மீர் இடஒதுக்கீட்டு மசோதாவிற்கு கொல்லம் கே.பிரேமச்சந்திரன் எதிர்ப்பு தெரிவித்தார். மக்களின் நம்பிக்கையை பெற அரசு தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
மேலும் இந்த மசோதாவிற்கு காங்கிரஸ் தலைவர் மணிஷ் திவாரியும் எதிர்ப்பு தெரிவித்தார். ஜம்மூ காஷ்மீரில் நிலையை கட்டுக்குள் கொண்டுவந்தது காங்கிரஸ்தான் எனவும் அவர் தெரிவித்தார். அவர் பேசுகையில், “பாஜக அரசின் கீழ் ஜம்மூ காஷ்மீர் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்கின்றனர். மக்களின் ஆதரவில்லாமல் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த முடியாது” என்று குற்றம்சாட்டினார்.
பின்பு பேசிய அமித்ஷா, “பயங்கரவாதத்திற்கு எதிராக சகிப்புத்தன்மையற்ற கொள்கையை மோடி அரசு கடைப்பிடித்து வருகிறது. மக்களின் உதவியுடன் நிச்சயமாக பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவோம் என உறுதியாக நம்புகிறேன். எல்லைப் பகுதியில் பாதுகாப்பை உறூதி செய்து நாட்டை பயங்கரவாதத்திலிருந்து விடுவிப்பதே அரசின் கொள்கை.
ஜம்மூ காஷ்மீரில் ஜனநாயகம் நசுக்கப்படுவதாக கூறுகின்றனர். இதற்கு முன் 132 முறை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் 93 முறை காங்கிரஸால் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டுள்ளது. இப்போது அவர்கள் நமக்கு ஜனநாயகம் பற்றி பாடம் எடுப்பார்களா?
ஜம்மூ காஷ்மீரில் ஒரு பகுதியை பாகிஸ்தானுக்கு கொடுத்தது ஜவகர்லால் நேருதான். நாங்கள் மக்களுக்கு நம்பிக்கையளிக்கவில்லை என்று கூறுகிறீர்கள். ஆனால் நேருவோ அப்போதைய உள்துறை அமைச்சருக்கு நம்பிக்கையளிக்காமலே காஷ்மீரில் ஒரு பகுதியை கொடுத்துவிட்டார். ஆகையால் மணிஷ் ஜி எங்களுக்கு வரலாறு பற்றி பாடம் எடுக்காதீர்கள்
ஜம்மூ காஷ்மீரில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் சமயத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும். அதில் மத்திய அரசு தலையிடாது. முன்பெல்லாம் தேர்தல் ஆணையம் காங்கிரஸ் கட்டுப்பாட்டில் இயங்கி வந்தது. ஆனால் நாங்கள் அதுபோல செய்வதில்லை. காஷ்மீரின் கலாச்சாரம் பாதுகாக்கப்படுவதை அரசு உறுதிசெய்யும். ஜம்மூ காஷ்மீரின் வளர்ச்சியே எங்களுக்கு முக்கியம். அவர்கள் பல இன்னல்களை சந்தித்துள்ளனர். மற்றவர்களை விட அவர்கள் அதிக வளர்ச்சிக்கு தகுதியானவர்கள்” என்று தெரிவித்தார். ஜம்மூ காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது.
**
மேலும் படிக்க
**
**[கதவடைத்த பன்னீர்: திமுகவில் இணையும் தங்கம்](https://minnambalam.com/k/2019/06/28/30)**
**[வெளியேறிய தங்கம்: தினகரன் ரியாக்ஷன்!](https://minnambalam.com/k/2019/06/28/54)**
**[சபரீசன் பேச்சு: சிக்கிய ஆடியோ!](https://minnambalam.com/k/2019/06/26/26)**
**[தங்கம் வந்தால் வெளியேறிவிடுவேன்: எடப்பாடியிடம் பன்னீர்](https://minnambalam.com/k/2019/06/27/88)**
**[டிஜிட்டல் திண்ணை: நம்பிக்கையில்லா தீர்மானம்: காங்கிரஸ் மீது கண் வைக்கும் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/27/89)**
�,”