சோலார் தகடுகள் நிறுவும் பணி இரண்டாவது காலாண்டில் 50 விழுக்காடு வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து *மெர்கோம் இந்தியா* வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 3,344 மெகா வாட் அளவிலான மின்னுற்பத்தி செய்யும் சோலார் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இது இரண்டாவது காலாண்டில் 52 விழுக்காடு குறைந்து 1,599 மெகா வாட்டாகக் குறையும் என்று மதிப்பிடப்படுகிறது. தொடர்ந்து நான்கு காலாண்டுகளாக வளர்ச்சி கண்டுவந்த நிலையில், நடப்பு காலாண்டில் சரிவைக் காணும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வர்த்தக நிலைகள், நிச்சயமற்ற தன்மை, சோலார் உபகரணங்களின் விலைகள் போன்ற பல காரணங்களால் சோலார் பணிகள் மந்தமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.
*மெர்கோம் கேபிடல்* நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி *ராஜ் பிரபு* இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “அறிக்கையில் கூறப்பட்ட காரணங்களால் 2018ஆம் ஆண்டில் சோலார் அமைப்புப் பணிகள் மந்தமடையும். இதுவரையில் மேற்கூரை தகடுகள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. தற்போது பாதுகாப்பு வரி போன்ற காரணங்களால் இதன் பணிகளிலும் தொய்வு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோலார் உபகரணங்களின் விலை குறைப்பு மற்றும் பாதுகாப்பு வரி குறைந்தால் மீண்டும் இதன் பணிகள் இந்த ஆண்டில் வேகமெடுக்கும்” என்றார்.
�,