சோபியா விவகாரம்: தமிழிசை விளக்கம்!

Published On:

| By Balaji

பாஜகவுக்கு எதிராக மாணவி சோபியா முழக்கமிட்ட விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (செப்டம்பர் 4) விளக்கமளித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, “நேற்று இண்டிகோ விமானத்தில் தூத்துக்குடிக்குப் பயணம் செய்தேன். என்னுடைய இருக்கை எண் 3, சோபியாவின் இருக்கை எண் 8. எனது இருக்கையிலிருந்து அவர்களைக் கடந்து செல்லும்போது, விமானத்திற்குள்ளேயே, என்னைப் பார்த்து பாரதிய ஜனதா கட்சி பாசிச ஆட்சி ஒழிக என்று கோஷமிட்டனர். நாகரிகம் கருதி விமானத்திற்குள் நான் எதுவும் பேசவில்லை. விமான வரவேற்பறைக்குள் நான் காத்திருந்தபோது, என்னைப் பார்த்து முறைத்துக்கொண்டே போனார்.

அப்போது, விமானத்திற்குள் இப்படி கோஷமிடுவது சரியா என்று கேட்டேன், “எனக்கு பேச்சுரிமை இருக்கிறது, நான் பேசுவேன்’ என்று கூறினார். சொல்ல முடியாத வார்த்தைகளையும் பேசினார். உங்களுக்குப் பேச்சுரிமை இருந்தாலும், விமானத்தில் பயணிகளுக்கு இடையூறாகப் பேசியது தவறு என்று அவரிடம் சொன்னேன்.

எனினும் அவர் பேச்சை நிறுத்தவில்லை. அவரின் பேச்சு சாதாரண பயணிகள் போல் இல்லை. அவரின் பின்னால் ஏதாவதொரு இயக்கம் இருக்கலாம் என்ற சந்தேகம் வந்தது.

10.20க்கு எனது ஃப்ளைட். அந்தப் பெண் 10.22க்கு தமிழிசை இப்ப என்னோட விமானத்தில் இருக்காங்க என்று ட்வீட் செய்துள்ளார். ‘பாஜக என்பதுடன் சில வார்த்தைகளைச் சேர்த்து ஒழிக என நான் கூறுவேன். என்னை விமானத்தில் இருந்து வெளியே அனுப்பிடுவார்களா?’ எனவும் ட்வீட் செய்துள்ளார். அப்படியென்றால் இது திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது.

இங்குள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் விமானத்திற்குள் அவர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினால் அமைதியாக இருப்பார்களா? யாரோ வட இந்தியாவில் கோஷமிட்டார்கள் என்பதற்காக திமுகவினர் கமலாலயத்தைத் தாக்கினார்கள். அதற்கான வீக்கம் இன்றும் என் கையில் இருக்கிறது” என்று சுட்டிக்காட்டினார்.

“நான் எந்தச் சட்ட விதியையும் மீறவில்லை, விதிகளுக்கு உட்பட்டுதான் செயல்பட்டேன். அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ, அதுபோன்று ஒரு பெண் தலைவர் என்ற உரிமையும் எனக்கு இருக்கிறது. விமானத்தில் இவ்வாறு நடந்துகொண்டதன் மூலம் பொது வாழ்வில் இருக்கிறவர்களுக்கு இதுதான் கொடுக்கிற மதிப்பா என்று கேள்வி எழுப்பிய தமிழிசை, தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறினார்.

காவல் துறை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கட்டும், தவறு இல்லை என்றால் அவர்களை விடுவிக்கட்டும் என்று கூறிய தமிழிசை, ஸ்டாலின் அவர்களின் ட்வீட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. பேச்சுரிமை என்பதற்கு காலம், இடம், நேரம் இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share