நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் இந்தியா முழுவதும் பாஜக பெரும்பான்மையாக வெற்றிபெற்ற நிலையில், தமிழகத்தில் போட்டியிட்ட 5 இடங்களிலும் தோல்வியைத் தழுவியது. 2014 தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்ற பொன்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.வசந்தகுமாரிடம் இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். தோல்வி குறித்த காரணங்களை ஆராய்வது தொடர்பான கூட்டம் கடந்த 6ஆம் தேதி தமிழிசை தலைமையில் கமலாலயத்தில் நடைபெற்றது.
இந்த நிலையில் தமிழக பாஜகவின் தோல்விக்கு தான் முழுப் பொறுப்பேற்றுக்கொள்வதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று (ஜூன் 8) சாமி தரிசனம் மேற்கொண்ட பொன். ராதாகிருஷ்ணன் அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பாஜக தோல்வி குறித்து பேசிய அவர், “1967ஆம் ஆண்டிலிருந்து திமுக பொய் வாக்குறுதிகளை அளித்தே வெற்றிபெற்றுவருகிறது. அதே வெற்றியை தற்போதும் பெற்றிருக்கிறார்கள். உண்மையில் தமிழர்கள்தான் இங்கு ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்” என்றார்.
தொடர்ந்து, **“நாங்கள் வெற்றிபெற்று வந்தால் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் தருவோம் என்று சொல்லித்தான் காங்கிரஸ்-திமுக கூட்டணி தமிழகத்தில் வெற்றிபெற்றது. மக்கள் அதற்காகத்தான் அவர்களுக்கு ஓட்டுப்போட்டுள்ளனர். நகைக் கடன், கல்விக் கடனை தள்ளுபடி செய்வேன் என்றீர்களே அதனை செய்யுங்கள். தேர்தலில் வெற்றிபெற்ற 37 பேரும் கோடிஸ்வரர்கள்தானே. சொத்தை விற்று மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். ஏன் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுகிறீர்கள்” என்று விமர்சனம் செய்தார்.**
மேலும், “கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதியில் பாஜக தோற்கவில்லை. அங்கே மதவாதம்தான் வெற்றி பெற்றுள்ளது” என்றவர், தமிழகத்தில் பாஜகவின் தோல்விக்கு மத்திய அரசு செய்த திட்டங்கள் குறித்து கடைக்கோடி மக்கள் வரை கொண்டு சேர்க்காததே காரணம். தோல்விக்கு நானே பொறுப்பேற்றுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.�,