சொத்து விவகாரம்: சட்டப்பணி ஆணைக்குழுவுக்கு அனுப்ப அறிவுறுத்தல்!

Published On:

| By Balaji

சொத்து, குடும்பப் பிரச்சினை மற்றும் பணம் விவகாரம் தொடர்பாகக் காவல் நிலையங்களுக்குப் புகார் வந்தால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு முன்பு மாவட்டச் சட்டப்பணி ஆணைக்குழுவுக்கு அனுப்பி தீர்வு காண வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில்.

நேற்று (மே 18), இது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சிறப்புக்குழு உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான சிங்காரவேலன், வழக்கறிஞர் சந்திரசேகரன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

“கடந்த சில மாதங்களுக்கு முன்பு கே.கே.நகர் காவல் நிலையத்தில் பத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கும் காவல் ஆய்வாளருக்கும் இடையே ஒரு வழக்கு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் மீது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் கே.கே.நகர் காவல் ஆய்வாளர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதை விசாரித்த பார் கவுன்சில், வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை எச்சரித்தது. காவல் நிலையங்களில் வழக்கறிஞர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே மோதல் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டுமென்றும், வழக்கில் தொடர்பில்லாதோர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்வதைத் தடுக்கும் வகையிலும் சொத்து, பணம் விவகாரம் மற்றும் குடும்பத் தகராறு தொடர்பான புகார்கள் காவல் நிலையத்துக்கு வந்தால் எஃப்ஐஆர் பதிவு செய்வதற்கு முன்பு மாவட்டச் சட்டப்பணி ஆணைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இரு தரப்பையும் அழைத்துப் பேசினால் சமரசம் ஏற்படக் கூடும். அதன் அடிப்படையில் எஃப்ஐஆர் போடுவதைத் தவிர்க்க முடியும்” என்று தெரிவித்தார் சிங்காரவேலன்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share