சொத்துக் குவிப்பு வழக்கில் புதுச்சேரி எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் மற்றும் அவரது தந்தை ஆனந்துக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த். இவரது தந்தை ஆனந்த் 2007-08 ஆண்டுகளில் புதுச்சேரி அரசின் பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளராகப் பணியாற்றினார். இந்தச் சமயத்தில் வருமானத்திற்கு அதிகமாக 3.15 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக ஆனந்த் மீது புகார் எழுந்தது. இதனையடுத்து ஆனந்த், அவரது மனைவி விஜயலட்சுமி, அவரது மகனும் சட்டமன்ற உறுப்பினருமான அசோக் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் புதுச்சேரி சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது.
இது தொடர்பான வழக்கு 2006ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 2009ஆம் ஆண்டு ஆனந்தின் மனைவி விஜயலட்சுமி மறைந்ததால், அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். பல வருடங்களாக விசாரணையில் இருந்துவந்த இவ்வழக்கில் நேற்று (அக்டோபர் 30) சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தனபால் தீர்ப்பு வழங்கினார்.
அதில், சட்டமன்ற உறுப்பினர் அசோக் மற்றும் அவரது தந்தை ஆனந்த் ஆகியோர் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் தந்தை, மகன் இருவருக்கும் தலா ஒரு வருடம் சிறை தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், வருமானத்துக்கு அதிகமாகச் சேர்க்கப்பட்ட சொத்துகளைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.�,