~சேலம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை!

Published On:

| By Balaji

சேலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். கொண்டலாம்பட்டியிலுள்ள தனியார் ஆம்னி பேருந்து நிறுவனமொன்றில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பெயர் சாந்தி. இவர்களது மகள் ரம்யா லோஷினி திருச்செங்கோட்டில் உள்ள கல்லூரியொன்றில் படித்து வந்தார். தனியார் பள்ளியொன்றில் படித்துவரும் இவர்களது மகன் தீனதயாளன் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளை எழுதியுள்ளார்.

பூலாவரி ஆத்துக்காடு பகுதியில் ராஜ்குமார் குடும்பத்தினர் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். நேற்று மாலை வீட்டிலிருந்த தீனதயாளனை பாட்டி வீட்டுக்குச் செல்லுமாறு கூறியுள்ளார் ராஜ்குமார். இன்று காலையில், பாட்டி வீட்டில் இருந்து திரும்பிவந்த தீனதயாளன் பல முறை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால், அவர் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை உதவிக்கு அழைத்தார்.

அங்கிருந்தவர்கள் கதவை உடைத்துப் பார்த்தபோது ராஜ்குமார், சாந்தி, ரம்யா லோஷினி மூன்று பேரும், வீட்டின் தாழ்வாரத்தில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சேலம் மாநகரத் துணை ஆணையாளர் தங்கதுரை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பிரேதப் பரிசோதனைக்காக 3 சடலங்களும் சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொண்டலாம்பட்டி போலீசார் இது பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜ்குமாரின் மகன் தீனதயாளன், அவரது பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது, வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை ரம்யா லோஷினி காதலித்தது தெரிய வந்தது. காதலைக் கைவிட்டு ஒழுங்காகப் படிக்குமாறு பெற்றோர் அறிவுறுத்தியபோதும், அவர் அதனை ஏற்கவில்லை. இதனால், தங்களது உறவினர் ஒருவருக்கு அவரைத் திருமணம் செய்துவைக்கும் ஏற்பாடுகளை ராஜ்குமாரும் சாந்தியும் மேற்கொண்டு வந்தனர். இதற்கு ரம்யா லோஷினி ஒப்புக்கொள்ளவில்லை.

நேற்று மாலை தீனதயாளனை பாட்டி வீட்டுக்கு அனுப்பிவிட்டு, ராஜ்குமாரும் சாந்தியும் தாங்கள் பார்த்துள்ள மாப்பிள்ளையைத் திருமணம் செய்யுமாறு மகளிடம் வற்புறுத்தியதாகத் தெரிகிறது. திருமணத்துக்கு ரம்யா ஒப்புக்கொள்ளாத காரணத்தால், அவரது கழுத்தை கயிற்றால் இறுக்கிக் கொலை செய்துவிட்டு, ராஜ்குமார் மற்றும் சாந்தி இருவரும் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கு குறித்து போலீசாரின் விசாரணை தொடர்ந்து வருகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே, இந்த வழக்கின் போக்கு குறித்து முழுமையாகத் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share