இந்திய ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் முகாமை, சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி நேற்று (ஆகஸ்ட்,21) கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
சேலத்தில், இந்திய ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் முகாம் இன்று (ஆகஸ்ட் 22) முதல் வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், 34,000 இளைஞர்கள் வரை பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுப் பணிகளை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் நேற்று இரவு அவர், காந்தி மைதானத்தில் ஆள்சேர்ப்புக்கான தகுதி ஓட்ட போட்டியைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். நிகழ்வில், கோவை, இந்திய ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு இயக்குநர் கர்னல் ஆர்.ஜெ.ரானே, சென்னை இந்திய ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலர் பிரிகேடியர் வி.எஸ். சங்கியான் மற்றும் சேலம் மாவட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
முதல் நாளில் 3700 இளைஞர்கள் ஆர்வமுடன் முகாமில் கலந்துகொண்டனர். விடிய விடிய நடந்த முகாமிற்காக, காந்தி மைதான சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. காலை ஆறுமணிக்கு மீண்டும் போக்குவரத்துத் தொடங்கியது. மீண்டும் இன்று மாலை 5 மணி முதல் இளைஞர்கள் முகாமில் பங்கேற்க வருகை தரவுள்ளனர். இந்நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு சேலத்தில் நடக்கும் இந்த ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்க வரும் விண்ணப்பதாரர்கள் இடைத்தரகர்களை அணுக வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
இடைத்தரகர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கெனவே ஆட்சியர் ரோஹிணி எச்சரித்திருந்தார். இந்த முகாமின் மூலமாக, சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் டெக்னிக்கல் அம்யுநிசன்/ஏவியேசன், நர்சிங் அசிஸ்டன்ட், சோல்ஜர் ஜெனரல், சோல்ஜெர் கிளர்க் மற்றும் ஸ்டோர் கீப்பர், சோல்ஜர் டிரேட்ஸ்மேன் ஆகிய ஏழு பணிகளுக்கான ஆள் தேர்வு நடைபெறுகிறது. முதன்முறையாக அதிகாலையிலேயே இந்தத் தேர்வுகள் நடைபெறுகிறது. இத்தேர்வுகள் மதுரை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு நடபெறுவெறுவது குறிப்பிடத்தக்கது.�,