திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் செவிலியர் தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தருமபுரி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் இன்று (பிப்ரவரி 12) கருப்புப் பட்டை அணிந்து பணிக்கு வந்துள்ளனர்.
வெள்ளக்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமை மருத்துவராகத் தமயந்தியும், உதவி மருத்துவராக சக்தி அகிலாண்டீஸ்வரியும் பணிபுரிகின்றனர். கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே பெரிய கரிமேடு அம்மன்கோவில் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் மகள் மணிமாலாவும்(25) இந்தச் சுகாதார நிலையத்தில் பணிபுரிகிறார். மணிமாலா நேற்று முன்தினம் (பிப்ரவரி 10) இரவு 7 மணியளவில் பணியில் இருந்தபோது, தனது அறையில் துாக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
மணிமாலா கடந்த எட்டாம் தேதி பணிக்குச் செல்லாதது குறித்துப் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். மருத்துவர் தமயந்தியும் அகிலாண்டீஸ்வரியும், மணிமாலாவுக்கு ‘வாட்ஸ் ஆப்’பில் மெமோ அனுப்பியுள்ளனர். நேற்று முன்தினம் பணியிலிருந்த அவரை, தகாத வார்த்தையில் திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த மணிமாலா தற்கொலை செய்துகொண்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கேயம் அரசு மருத்துவமனை முன்பு மணிமாலாவின் உறவினர்களும், அப்பகுதியிலுள்ள மருத்துமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களும் நேற்று சாலை மறியல் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி நேற்று பதற்றமாகக் காணப்பட்டது.
மணிமாலா தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அவர் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கவும் வலியுறுத்தித் தருமபுரி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் இன்று கருப்புப் பட்டை அணிந்து பணிக்கு வந்துள்ளனர்.�,