செர்னோபில்: பெருந்துயரில் புதைந்திருக்கும் அரசியல்!

Published On:

| By Balaji

கேபிள் சங்கர்

HBOவில் அருமையான மினி சீரிஸ்கள் அவ்வப்போது வெளியாகும். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ‘பேண்ட் ஆஃப் பிரதர்ஸ்’ போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம். இந்த செர்னோபில் சீரிஸ் IMDBயில் மட்டுமில்லாது, ஒளிபரப்பான நேரத்தில் அதிகபட்ச டிஆர்பி ரேட்டிங்கான 9.7ஐப் பெற்றிருக்கிறது. இதற்கு முன்னால் Breaking bad (9.5), Game of thrones (9.3), The Wire (9.3) போன்ற ஜாம்பவான் சீரிஸ்கள் மட்டுமே பெற்றிருந்த ரெக்கார்டை முறியடித்திருக்கிறது.

செர்னோபில் அணு உலை விபத்து குறித்து ஏராளமான டாக்குமெண்டரிகள் வந்திருக்கின்றன. ஆனால், அவை சோவியத் ரஷ்யாவின் இரும்புக் கதவுகளுக்குப் பின்னாலிருந்து வரும் தகவல்களையும் தரவுகளையும் வைத்துப் புனையப்பட்டவை என்கிற குற்றச்சாட்டும் உண்டு. ஆனால், இந்த செர்னோபில் சீரிஸை ரஷ்ய மக்கள் வரவேற்றிருக்கிறார்கள். ஆனால் அதே நேரத்தில் ரஷ்யாவை அவமானப்படுத்தும் நோக்கோடு அபத்தங்கள் நிறைந்தது என்கிற விமர்சனங்களும் உருவாகியிருக்கின்றன.

செர்னோபில் அணு உலை விபத்து குறித்து ரஷ்யத் தரப்பைச் சொல்லும் படம் ஒன்றின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்துகொண்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. மனிதனால் ஏற்பட்ட மாபெரும் அழிவு என்று சொல்லப்படும் செர்னோபில் விபத்துக்குப் பின்னால் அமெரிக்காவின் கை இருக்கிறது என்கிற பார்வையை அந்தப் படம் சொல்லும் என்கிறார்கள்.

இந்த அரசியலை எல்லாம் கவனிக்காமல், அணு உலை விபத்து என்று பார்க்க ஆரம்பித்தால் முதல் ஷாட்டிலேயே வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பிக்கிறது இந்தப் படம். போகப்போக மெல்ல உடலில் நடுக்கம் ஏற்படுவதை மறுக்க முடியவில்லை. பெரும் விபத்து நடந்தேறிவிட்டது. உடனடியாய் அதற்கு யாரும் பொறுப்பு ஏற்க முடியவில்லை. ரியாக்டர்கள் வெடிப்பதற்கான வாய்ப்பே இல்லை என்பதுதான் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட நம்பிக்கை. ஆனால், வெடித்திருக்கிறது என்பது நிஜம்.

இரும்புத்திரை கம்யூனிஸ்ட் அரசாங்கம் எப்படி இந்த மகா கொடுமையான நிலையைக் கையாண்டது? அணு உலையிலிருந்து வெளியாகும் கதிர் இயக்கத்தை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் என்ன நடக்கும்? அதனால் பாதிக்கப்படும் மக்களின் நிலை என்ன?

இந்தக் கேள்விகளை முன்வைத்துப் பயணிக்கிறது செர்னோபில் சீரிஸ். கதிரியக்கத்தை உடனடியாய் தடுத்து நிறுத்த முடியும். ஆனால், நிரந்தரமாய் 24,000 ஆண்டுகளுக்கு மக்கள் புழங்க முடியாத இடமாய் அது மாறிப்போகும். இந்த அபாயத்தைப் பொருட்படுத்தாமல், கதிரியக்கத்தைப் பரவவிடாமல் செய்வதற்காக உயிர்த் தியாகம் செய்தவர்கள் பலர். ராணுவ வீரர்கள், டாக்டர்கள், இன்ஜினீயர்கள், சுரங்கத் தொழிலாளிகள், நர்ஸுகள் எனப் பல்லாயிரம் உயிர்களைத் தெரிந்தே பலி கொடுக்க வேண்டிய கட்டாயம்.

குறிப்பாக ரியாக்டர்களுக்குள் மூன்று ஆட்களை அனுப்ப வேண்டும் என்று அதிபர் கோர்பசேவிடம் கேட்குமிடம் முதுகுத் தண்டை உறையவைக்கிறது. உயிர்ப் பலி கொடுக்க வேண்டும் என்பதை எப்படிக் கூறுவது என்று தயக்கத்துடன் கேட்கப்படும் கேள்விக்கு கோர்பசேவ் அளிக்கும் பதில் நியாயம். ஆனாலும் பயங்கரம்.

விபத்து நடந்தவுடன் வீட்டிலிருந்து கிளம்பும் தீயணைப்பு வீரனிடமிருந்து கதை சொல்ல ஆரம்பிக்கிறார்கள். விபத்து நடந்த இடத்தில் அவன் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் காட்ட ஆரம்பிக்கும்போதே நடுக்கம் உருவாக ஆரம்பிக்கிறது. என்ன நடந்தது என்று தெரியாமல் பிரிட்ஜுக்குப் போனால் நல்ல வியூ கிடைக்கும் என்று பேரழிவுகளை வேடிக்கை மனப்பான்மையோடே பார்க்க விரும்பும் மனித மனங்களின் விகாரம் காட்சிப்படுத்தப்படுகிறது. மேலே எழும்பி பரவும் தீ ஜுவாலையை ரசித்துக்கொண்டிருக்கும்போதே அவர்கள் மேல் விழும் சாம்பல் தூள்களைக் காட்டுகிறார்கள். சிம்பாலிக்.

என்னதான் இந்த வெப் சீரிஸின் பின்னால் அமெரிக்க – ரஷ்ய அரசியல் திணிப்பு, ரஷ்யாவின் பொய்யான செய்தி வெளியீடுகள் என அமெரிக்கத் தரப்பு தன் அரசியலை முன்வைத்தாலும், ரஷ்யா, வெளிவரவிருக்கும் தங்கள் பக்க செர்னோபில் கதையில் அமெரிக்காதான் இந்த விபத்தை ஏற்படுத்தி, ரஷ்யாவை நாசமாக்கியது என்று குற்றம்சாட்டினாலும், மக்களின் உயிருக்கு அரசியல்வாதிகள் கொடுக்கும் முக்கியத்துவத்தை நினைத்தால் பயமாகத்தான் உள்ளது. பெருநகரங்களுக்குச் சில கிலோமீட்டர் அருகில்தான் கூடங்குளமும் கல்பாக்கமும் அமைந்திருக்கின்றன. செர்னோபில்லில் நடந்தது விபத்தாக இருக்கலாம் அல்லது வேற்று நாட்டினரின் சதியாக இருக்கலாம். இதை எழுதும்போது அந்த நடுக்கத்துடன்தான் எழுதுகிறேன்.

பெருந்துயருக்கு மிக அருகில் நாம் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

[திரவம்: காற்றாகிப் போன எரிபொருள்!](https://minnambalam.com/k/2019/05/28/11)

**

மேலும் படிக்க

**

**

[கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/10/46)

**

**

[டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!](https://minnambalam.com/k/2019/06/10/66)

**

**

[முகிலன் இருக்கிறார்!](https://minnambalam.com/k/2019/06/10/20)

**

**

[மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு](https://minnambalam.com/k/2019/06/09/52)

**

**

[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)

**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share