திருப்பதி வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகத் தமிழகத்தைச் சேர்ந்த நான்கு பேரை, காவல் துறையினர் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர்.
திருப்பதியில் உள்ள வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதும், இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
திருப்பதியில் உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் சமீபகாலமாக செம்மரக் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகப் புகார் எழுத்துள்ளது. இதைத் தொடர்ந்து, நாகப்பட்லா பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சிலர் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்ததால், காவல் துறையினர் அவர்களைச் சரணடைந்துவிடுமாறு எச்சரிக்கை செய்தனர். இதைக் கேட்ட கடத்தல் கும்பல் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தித் தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் வானத்தை நோக்கி துப்பாகியால் சுட்டக் காவல் துறையினர், நான்கு பேரை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.
சுமார் 25 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய மற்ற கடத்தல்காரர்களைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.�,