சென்னை பெருவெள்ள பாதிப்பு ஏற்படுவதற்கு ஏரி குளம் ஆற்றுப் பகுதிகளில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகள்தான் காரணம் என்று இந்திய கணக்காய்வு தணிக்கை துறை தலைவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில்,1979இல் சென்னையில் 90.88 சதுர கிலோமீட்டரில் இருந்து கட்டுமானம் 2016இல் 541.14 சதுர கிலோமீட்டராக பல மடங்கு உயர்ந்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
**வேளச்சேரி ஏரி**
வேளச்சேரி ஏரி 1979ஆம் ஆண்டு இருந்த பரப்பளவு 2016ஆம் ஆண்டோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது 75 சதவிகிதம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
**பள்ளிகரணை சதுப்பு நிலம்**
1975ஆம் ஆண்டு 5000 ஹெக்டர் பரப்பளவில் இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதி தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்படுவதற்கு ஒதுக்கப்பட்டதால், 2017ஆம் ஆண்டு 695 ஹெக்டர் பரப்பளவாக சுருங்கியது.
**அடையாறு கழிமுகம்**
அடையாறு ஆற்றுமுகத்தில் அடையாறு கழிமுகம் தனித்தன்மை வாய்ந்த உயிரின சூழல் அமைப்பாகும். மக்கள்தொகை அடர்த்தியால் அடையாறு, ராஜாஅண்ணாமலைபுரம் மற்றும் மந்தைவெளி பகுதிகளால் சூழப்பட்டுள்ளது.
**அம்பத்தூர் குளம்**
கொசஸ்தலை ஆற்றின் நீரோட்டத்தின் குளமாக அம்பத்தூர் குளம் இருக்கிறது. இது குடியிருப்புகளோடு தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டதால் குளத்தின் பரப்பு சுருங்கியது.
**முகப்பேர் ஏரி**
நகர வளர்ச்சியில் ஏற்பட்ட கட்டுமானங்களால் முகப்பேர் ஏரி முழுமையாக அழிக்கப்பட்டது.
**குளங்களின் நிலை**
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மூன்று மாவட்டங்களில் நீர் ஆதாரத் துறையின் கட்டுபாட்டில் 1,554 குளங்கள் இருப்பதாகப் புள்ளிவிவரம் உள்ளது. இதில் 551 குளங்கள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் 36,814 ஆக்கிரமிப்புகளில் 10,764 ஆக்கிரமிப்புகள் மீட்கப்பட்டுள்ளது. அதாவது 30 சதவிகிதம் மீட்கப்பட்டுள்ளது. 170 குளங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. 381 குளங்கள் மீட்கப்படவில்லை.
மாநில அளவில் மார்ச் 2016 வரை 79,649 ஹெக்டர் அரசு நிலத்தில் 7,83,767 ஆக்கிரமிப்புகள் உள்ளன.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடையாறு கூவம் மற்றும் பக்கிங்காம் கால்வாயில் ஆக்கிரமிப்புகள் உள்ளன.
**அடையாறு**
அடையாற்றின் இருபுறமும் 85 கிலோமீட்டர் தூரத்தில் 30.2 கிமீ நிலப்பகுதியை 9,539 குடும்பங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளது.
**கூவம் ஆறு**
கூவம் ஆற்றில் 80 கிமீ நீளத்தில் 22.7 கிமீ 14,257 குடிசைவாழ் குடும்பங்கள் மற்றும் பிறரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
**பக்கிங்காம் கால்வாய்**
பக்கிங்காம் கால்வாயில் 96 கிமீ தூரத்தில் 16.5 கிமீ தூரம் 26,300 குடும்பங்கள் ஆக்கிரமித்துள்ளன.
அடையாற்று கரையை ஆக்கிரமித்த 4,134 குடும்பங்கள் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்கு பின்பு வெளியேற்றப்பட்டதுள்ளதாக WRD தெரிவித்துள்ளது. ஆனால், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 14,257 குடும்பங்களில் வெளியேற்றப்பட்டது மிகவும் குறைவே என்று சுட்டிக்காட்டியுள்ளது.
**நந்தம்பாக்கம்**
நந்தம்பாக்கம், மணப்பாக்கம், மழை வெள்ளம் சூழ OTA (Officers Training Academy) சென்னை புனித தாமஸ் மலை பகுதியில் அடையாற்றில் அதிகாரிகள் பயிற்சி மேற்கொள்ள செல்வதற்கு வசதியாக 45 மீட்டர் அகலத்திற்கு பெய்லி பாலம் அமைக்க அனுமதி கொடுத்துள்ளது. அடையாற்றில் நீரின் போக்கைத் தடுத்து நிறுத்தியதால் இந்தப் பகுதியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது.
**ஈக்காட்டுதாங்கல்**
ஈக்காட்டுதாங்கல், எம்ஜிஆர் நகர், ஜாபர்கான்பேட்டை மற்றும் கே.கே.நகர் குடியிருப்பு பகுதிகளுக்குள் அடையாறு வெள்ளம் புகுவதற்கு ஆற்றில் விதியை மீறி அமைக்கப்பட்ட மெட்ரோ பாலமே காரணமாக இருந்துள்ளது.
**கோட்டூர்புரம்**
கோட்டூர்புரத்தில் அடையாற்றுக்குக் குறுக்கே பழைய பாலத்திற்கு பதிலாக புதிய உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. ஆனால், பழைய பாலம் பயன்படுத்தாமல் இருந்தது. இது இடிக்கப்படாததால் நீரோட்டம் தடைபட்டு கோட்டூர்புரத்தில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.
**விமான நிலையம்**
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய ஆற்றின் குறுக்கே இரண்டாவது ஓடுபாதை அமைக்க (WRD) நீர் வழங்கல் துறையிடம் அனுமதி கோரியது. WRDவும் சில நிபந்தனைகளுடன் தடையில்லா சான்றிதழ் வழங்கியது. ஓடுபாதைக்குப் பாலங்கள் அமைத்தது அடையாற்றின் அகலத்தைக் குறைத்து அருகாமை பகுதிகளுக்கு வெள்ள ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளதாக 2012ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வில் தெரிவித்து இருந்தது. இது 2015ஆம் வெள்ளத்தில் விமான நிலைய ஓடுபாதை மூழ்கியதோடு அருகே இருந்த பகுதிகளும் பாதிக்கப்பட்டது.
தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905 மற்றும் தமிழ்நாடு ஏரிகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் சட்டம் 2007 ஆகியவை இருந்தும் ஆக்கிரமிப்புகளைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.�,