^சென்னை விரிவாக்கத்தில் தாமதம் ஏன்?
சென்னை மாவட்டம் விரிவாக்கம் செய்யப்படுவதற்கான அறிவிப்பைக் கடந்த ஜனவரி 4ஆம் தேதியன்று முதல்வர் வெளியிட்டார். அறிவிப்பு வெளியாகி ஏழு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், ஜூலை மாதத்தில் சென்னையின் எல்லைகள் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சியின் அதிகார வரம்புக்குள் இருக்கும் பகுதிகள், நிர்வாக வசதிக்காகச் சென்னை மாவட்டத்துக்குள் இணைக்கப்படும். மாவட்ட விரிவாக்கம் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட அதிகாரிகளின் செயல்முறைகளும் நிறைவு செய்யப்பட்டுவிட்டதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஊடகத்திடம் பேசுகையில், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் எந்த மாவட்டத்தில் பணிபுரிவது என்பது குறித்து அரசு அதிகாரிகள் தங்களது விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
எனினும், திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த செயல்முறைகள் இன்னும் நடந்துகொண்டிருக்கின்றன. இத்திட்டத்தின்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய தாலுகாக்களைச் சேர்ந்த 67 வருவாய் கிராமங்கள், திருவள்ளூர் மாவட்டத்தில் அம்பத்தூர், மாதவரம், மதுரவாயல், திருவொற்றியூர் ஆகிய தாலுகாக்களும் சென்னை மாவட்டத்தில் இணைக்கப்படும். இதன் விளைவாக, விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டத்தில் மொத்தம் 122 வருவாய் கிராமங்கள் இருக்கும்.
இதன்படி, அம்பத்தூரைத் தலைமையிடமாகக் கொண்ட மத்திய சென்னைக் கோட்டத்தில் அயனாவரம், அமைந்தகரை, மதுரவாயல், மாம்பலம், எழும்பூர் உள்ளிட்ட 47 கிராமங்கள் உள்ளன. தண்டையார்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்ட வட சென்னைக் கோட்டத்தில் திருவொற்றியூர், மாதவரம், பெரம்பூர் உள்ளிட்ட 32 கிராமங்கள் உள்ளன. கிண்டியைத் தலைமையிடமாகக் கொண்ட தென் சென்னைக் கோட்டத்தில் கிண்டி, மயிலாப்பூர், வேளச்சேரி, உள்ளிட்ட 43 கிராமங்கள் உள்ளன.
நகர்ப்புற வருவாய்க் கிராமங்களை இணைப்பதற்கான அறிவிப்பை மாநில அரசு ஜூலை மாதத்தில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விரிவாக்கத்தால், சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுடன் சென்னை மாவட்டத்தின் பரப்பளவு 176 சதுர கிலோமீட்டரில் இருந்து 426 சதுர கிலோமீட்டராக உயரும். மேலும், சென்னை மாவட்டத்திற்கான கோட்டாட்சியர்களின் எண்ணிக்கை இரண்டிலிருந்து மூன்றாக உயரும்.�,”