சென்னை மாநகராட்சி டெண்டரை ரத்து செய்ய வேண்டும்!

Published On:

| By Balaji

சென்னை மாநகராட்சி டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள அறப்போர் இயக்கம், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம், சென்னை மாநகராட்சி மூலம் புதிய சாலை அமைப்பு மற்றும் மிஸ்ஸிங் லிங்க் மழைநீர் வடிகால்களின் கட்டுமானத்திற்காக விடப்பட்ட 740 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களில், அதிகாரிகள் – ஒப்பந்ததாரர்கள் கூட்டுச்சதி செய்ததாக, கூறி அதன் ஆதாரங்களை, நவம்பர் 1ஆம் தேதி அறப்போர் இயக்கம் வெளியிட்டிருந்தது

இந்நிலையில் ஒப்பந்ததாரர்களின் கூட்டுச்சதியின் மேலும் ஒரு முக்கியமான ஆதாரத்தை அறப்போர் இயக்கம் இன்று (நவம்பர் 21) வெளியிட்டுள்ளது.

அதில் ”தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பெறப்பட்ட தகவலின் படி. கணினிகளின் ஐபி முகவரிகள் பரிந்துரைப்பது என்னவென்றால், தகவல் பெறப்பட்ட ஐந்தில் 4 டெண்டர்களில் பங்கேற்ற 2 ஒப்பந்ததாரர்கள், ஒரே கணினியில் இருந்து, தங்களது விண்ணப்பங்களைப் பதிவேற்றியுள்ளனர்.

புதிய அம்மன் கோயில் தெரு மற்றும் ஜே பிளாக் (வைகை குடியிருப்பு) அண்ணா நகர் மண்டலம் 8, பேக்கேஜ் 31, ஆகிய இடங்களில் மழை நீர் வடிகால்களை அமைப்பதற்கான டெண்டரில் மேனகா, கவுதமன் ஆகிய இரு ஒப்பந்ததாரர்கள், தங்களது விண்ணப்பங்களை, ஒரே கணினியில் இருந்து பதிவேற்றியுள்ளனர். அதாவது மேனகா & கோ போலி விண்ணப்பதாரராக இருந்து, கவுதமன் வெற்றி பெற்றுள்ளார்.

மண்டலம் 11, பேக்கெஜ் 47ல் மூகாம்பிகை இரண்டாவது, பிரதான சாலை மற்றும், 3 சாலைகளில் மழைநீர் வடிகாலுக்கான டெண்டரில், பாலாஜி மற்றும் ராமாராவ் ஆகிய இருவரும் உள்கூட்டாக செயல்பட்டு, ராமாராவ் என்பவர் போலி விண்ணப்பதாரராக இருந்து பாலாஜி இந்த ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளார்” என்று அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

அதாவது இ.டெண்டரில் முறைகேடு நடைபெறாது என்று சொல்லப்பட்டாலும், ஒரே இடத்தில் இருந்து கொண்டு, ஒரே ஐபி மூலம் விண்ணப்பித்து கூட்டுச்சதி செய்துள்ளனர் என்று கூறியுள்ளது அறப்போர் இயக்கம்.

இவ்வாறு சென்னை மாநகராட்சி டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டும் அறப்போர் இயக்கம், இதுகுறித்து, அனைத்து அதிகாரிகளையும் சந்தித்து முறையிட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், லஞ்ச ஒழிப்புத் துறை, உள்ளாட்சி நிர்வாகத்திடம் புகார் மனு கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி டெண்டரில் முறைகேடுகள் நடந்துள்ள நிலையில், பேருந்து வழிச்சாலைகள், உட்புற சாலைகள் மற்றும் மழை நீர் வடிகால் ஒப்பந்தங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கூட்டுச்சதியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்களைக் கறுப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும்., உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, மாநகராட்சியின் மூத்த அதிகாரிகள் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்ட ஒப்பந்தக்காரர்கள் மீது துறை ரீதியான மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share